Sunday, January 30, 2022

அமெரிக்காவில் வாங்கிய இடம்

 தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்

 

ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அதிலிருந்து மீண்டு வந்த மாவீரன் போல கம்பீரமாக நின்றது அன்று. நீலவானம் எப்போதும் இல்லாத மாதிரி மிகத் தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. மகளிர் கல்லூரி வாசலில் கல்லூரி முடிந்து செல்லும் இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக செல்வது போல வெண்மேகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் நகர்ந்து போன வண்ணம் இருந்தன. நகரின் மத்தியில் அமைந்த ஹெர்மன் பூங்காவில் ஒரு பகுதியில் அந்த அழகான மிருகக்காட்சி சாலை அமைந்திருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு நிரந்தரமாக தங்கி விட்ட விலங்குகள் தமக்கென்று அமைத்த சிறு சிறையில் அமைதியாக காலம் கழிப்பதைப் பார்த்து ரசிக்க மக்கள் கூட்டம் வரத் தொடங்கியிருந்தனர்.

 

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த நகருக்கு வந்து தங்கி, வேலை செய்யும் பன்னாட்டு மனிதர்களுள் ஒருவன் தான் இந்த சிவா. கடந்த நான்கு நாட்களில் தனது வாழ்வில் திடீரென நிகழ்ந்த பூகம்பத்தை நினைத்தவாறு எத்தனையோ கேள்விகளுக்கு பதில் தேடியவாறு உட்கார்ந்திருக்கிறான் சிவா. அதோடு அடுத்த மூன்று தினங்களில் நடக்கப்போகும் நிகழ்வுகளை மனக்கண்ணில் நினைத்துப் பார்த்ததில் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. தமிழகத்தில் இருந்து மனைவி அனிதா, எட்டு வயது மகள் ஆதிரை, மூன்று வயது மகன் ராமுடன் ஆன்சைட் வேலைக்காக ஹூஸ்டன் விமான நிலையம் வந்து இறங்கியதிலிருந்து நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறான்.

 

ஹூஸ்டனின் சர்வதேச விமானநிலையத்தில் அவனுக்கு முன்னால் ஆன்சைட் வந்த மணி வரவேற்பறையில் காத்திருந்தான். அதனால் இவர்கள் வெளியே வந்ததும் அவனோடு நேரே மணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பிறகு அதே அபார்ட்மெண்டில் ஒத்தை படுக்கையறை வீடு வாடகைக்கு எடுத்து மணியுடனே அவனது காரில் அலுவலகம் சென்று வந்தான். அனிதாவிற்கு எதைப் பார்த்தாலும் ஒன்றும் புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் பயம் வேறு. பழைய டொயோட்டா கேம்ரி ஒன்றை கடனில்  வாங்கி அதில் அலுவலகம் போய்வந்தான். வார இறுதியில் குடும்பத்துடன் அங்குள்ள மீனாட்சி கோவிலுக்கு போய்வந்தனர். இப்படியாக இந்தியாவிலிருந்து வந்து சுமார் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. 

 

கொரோனா வந்ததில் இருந்து எல்லா அலுவலகங்களிலும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க, சிவாவும் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்தான். ஒரு நாள் காலையில் எழுந்தவன், அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் சுருண்டு விழுந்து கதறினான், ஐயோ வயிறு வலி தாங்க முடியவில்லையே என்று. உடனே அனிதாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக மணிக்கு போன் பண்ணி விவரம் சொல்ல அவனும் உடனே வந்து சிவாவை அருகில் இருந்த மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனைக்கு கூட்டி போனான். அங்கு வயிறு சம்பந்தமான சிறப்பு மருத்துவர் ஹென்றி தான் அவனை பரிசோதித்தார். உடனே இரத்த பரிசோதனையும், அல்ட்ரா ஸ்கேனும் எடுக்கப்பட்டது. மருத்துவர் அவனது வலிக்கு வலி குறைக்கும் மாத்திரை கொடுத்தார். பரிசோதனை முடிவுகள் வந்ததும் போன் செய்து தகவல் சொல்வதாகவும், அதன் பிறகு மீண்டும் மருத்துவமனை வர வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். அதே மாதிரி மாத்திரையை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அனிதா சிவாவை கட்டிப்பிடித்து ஒரே அடியாக அழுது தீர்த்தாள். எனக்கு ரொம்ப பயமாக இருக்குங்க நாம உடனே ஊருக்கு போயிடலாம் என்று புலம்பித் தள்ளினாள். சிவாவும் கொஞ்சம் பயந்துதான் போனான் என்றாலும் ஒரு நாள் வந்த வயிற்றுவலிக்குப் பயந்து யாராவது இந்தியாவிற்கு திரும்பிப் போவார்களா என்று அனிதாவையும் சமாதானப்படுத்தினான். இருந்தாலும் அனிதா விடாமல் எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு சிவா, தயவு செய்து என் பேச்சை கேளுங்களேன் என்று அழுது அடம்பிடித்தாள். ஒரு வழியாக மணியும் அவனது மனைவியும் வந்து அனிதாவை சமாதனப்படுத்தி விட்டுப் போனார்கள். நாளை நல்ல நாளாக அமையும் என்ற நம்பிக்கையோடு உறங்கிப் போனார்கள்.

 

அடுத்த நாள் காலை எப்போதும் போல சூரியன் அதிகாலையிலேயே தனது கதிர்களை விரித்தவாறு உலா செல்லக் கிளம்பியது. அனிதாவும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சிறிய பூஜை அறையில் உட்கார்ந்து இன்று மருத்துவமனையில் இருந்து நல்ல செய்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதோடு இல்லாமல் நல்லபடியாக சிவா குணமானால் இளஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வந்து குடும்பத்தோடு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டாள். சிவா இரவில் வலி குறைக்கும் மாத்திரை சாப்பிட்டதால் காலையில் எழுந்தவுடன் வயிற்றில் வலி ஏதும் இல்லை என்று அனிதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். காலை சுமார் பதினோரு மணி இருக்கையில் அவனது கைத்தொலைபேசி ஒலித்திட, எடுத்து யாரென்று பார்த்தான். அது அவன் நினைத்த மாதிரியே மருத்துவமனையில் இருந்து தான் வந்தது. போனை எடுத்து பேசினான். அவனை அன்று மதியம் இரண்டு மணிக்கு மருத்துவர் பார்க்க விரும்புகிறார் என்றும் மற்ற தகவல்களை மருத்துவர் சொல்லுவார் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் அந்த மருத்துவமனை ஊழியர். சிவாவும் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனையில் இருந்தான் மருத்துவர் ஹென்றியை பார்க்க..

 

வாங்க சிவா..இப்ப எப்படி இருக்கிறது வயிற்று வலி என்று ஹென்றி கேட்டார். இப்ப கொஞ்சம் பரவாயில்லை சார் என்று சிவா பதிலளித்தான். உங்களுக்கு எடுத்த அல்ட்ரா ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைக்காக முடிவுகள் வந்துவிட்டன சிவா என்று மெதுவாக ஆரம்பித்தார் டாக்டர் ஹென்றி. சிவாவும் ஆவலாக ஹென்றி என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தான். இதற்கு முன்பு எப்போதாவது அல்ட்ரா ஸ்கேன் எடுத்து இருக்கீங்களா சிவா என்று கேட்க, இல்லை என்று சிவா தலையாட்டினான். உங்களுக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து விட்ட நிலையில் உள்ளது. இதற்கு நான்காம் நிலை ESLD என்று சொல்வார்கள். அதாவது (End Stage Liver Disease) என்று ஆங்கிலத்தில் சொல்லுவோம். இது பெரும்பாலும் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோயாகும். துரதிஷ்டவசமாக அது உங்களுக்கு வந்திருக்கிறது. இது மருத்துவம் செய்யும் நிலையைத் தாண்டி விட்டது. நான் இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும் “நீங்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும்”, இதுவரை நீங்கள் உயிருடன் இருப்பதே பெரும் ஆச்சரியம் என்று சொல்லி நிறுத்தினார். சிவாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்படியே சற்று நேரம் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.

 

எப்படியோ சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டாக்டர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று டாக்டர் ஹென்றியைப் பார்த்து பரிதாபத்துடன் கேட்டான். சிவா நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். இனி உனக்கு நாங்கள் மருத்துவம் பார்க்க ஏதுமில்லை, இருந்தாலும் எங்களால் முடிந்த அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம். ஆனால் அது வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை என்றே சொல்லலாம். எனவே நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இந்தத் தகவலை முதலில் தெரிவித்து அவர்களை இங்கு விரைவில் வரவழையுங்கள். அடுத்து முக்கியமான விஷயம், அருகில் உள்ள பியூனெரல் ஹோமில் நீங்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்கான இடத்தையும், அதற்கு ஆகும் செலவுக்கான பணத்தையும் கட்டி பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆனால் நாங்கள் இங்கிருந்து நேராக ஆம்புலன்ஸில் உங்களது உடம்பை அந்த ஹோமிற்கு அனுப்பி விடுவோம் என்று சொல்லி முடித்தார். சிவாவிற்கு தலை சுற்றியது. தனது உடலை அடக்கம் செய்யத் தானே பதிவு செய்யும் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும் டாக்டரிடம் “ டாக்டர், நான் வேண்டுமானால் இப்போதே கிளம்பி எனது நாட்டுக்குப் போய் விடுகிறேன் அது வரை நான் உயிரோடு இருக்க ஏதாவது மருந்து கொடுங்கள் போதும்” என்று கேட்டான். அதற்கு இனி வாய்ப்பில்லை சிவா, உங்களது உடல்நிலை அதையெல்லாம் தாண்டி விட்டது, என்னை மன்னித்து விடுங்கள். அப்படி ஏதாவது முயற்சி செய்தால் போகும் வழியிலேயே ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் மனைவிக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும். எனவே நீங்கள் இப்போது வீட்டிற்கு சென்று, உங்கள் மனைவியிடம் இந்த விவரங்களை சொல்லுங்கள். அவரோடு ஆலோசனை செய்து நான் சொன்னவற்றை ஏற்பாடு செய்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனைக்கு வாருங்கள். நாம் அடுத்த கட்டமாக கடைசி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினார் டாக்டர் ஹென்றி. நடக்கவும் சக்தியின்றி ஒரு வழியாக கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த காரை அடைந்தான். அவனது மனதில் என்னவெல்லாமோ எண்ணங்கள் ஓடியது. எப்படியோ ஒருவழியாக காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தான்.

 

அவனது வீட்டின் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் கார் வந்து நின்றவுடன் வீட்டு வாசலில் காத்திருந்த அனிதா விரைந்து சென்று அவனது கார் கதவை திறந்து விட்டாள். என்னங்க சொன்னாரு டாக்டர்? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையில்ல என்று கேட்டவாறு அவனோடு நடந்து வீட்டு வாசலை அடைந்தனர். அதற்கு மேல் அவனை நகர விடாமல் மறித்துக் கொண்டு “சொல்லுங்க டாக்டர் என்ன சொன்னாருன்னு சொல்லிட்டு போங்க “ என்று அவனைப் பிடித்து உலுக்கினாள். அதுவரை எப்படியோ அழுகையை கட்டுப் படுத்தி வைத்திருந்த சிவாவால் அது தற்போது முடியாமல் போயிற்று. ஓவென கதறி அழுதவாறு “ எல்லாம் முடிஞ்சிருச்சு அனிதா “ என்று சொல்லிவிட்டு அவளை கட்டி அணைத்துக் கொண்டான். அருகில் வந்த பிள்ளைகள் இரண்டையும் அனிதாவோடு சேர்த்து கட்டிக் கொண்டு அழுதான். அனிதா அவனது பிடியிலிருந்து விலகியவாறு “என்ன சொன்னாருன்னு விவரமா சொல்லுங்களேன், இளஞ்சாவூர் மாரியாத்தா அப்படி எல்லாம் நம்மள கைவிட்டுட மாட்டாள்” என்று அவனது முகத்தை கைகளால் வருடிவிட்டாள். சிவாவும் சற்று அழுகையை நிறுத்திவிட்டு, மருத்துவமனை சென்றதிலிருந்து மருத்துவர் சொன்னதை அப்படியே அனிதாவிடம் சொல்லி முடித்தான். அதைக் கேட்டுக் கொண்டே இருந்த அனிதா, அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்தாள். நல்லவேளையாக சிவா அவளை தனது கைகளில் தாங்கி பிடித்து அருகில் கிடந்த சோபாவில் சாய்த்தான். ஆதிரையிடம் டம்ளரில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அனிதாவின் முகத்தில் தண்ணீரால் அறைந்தான். அனிதாவும் மெல்ல எழுந்து சிவாவின் தாடையைப் பிடித்து அவனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். அப்படியெல்லாம் நடக்காதுங்க, டாக்டர் பொய் சொல்லுறாரு, நமக்கு ஏங்க இப்படி எல்லாம் நடக்க போகுது? நாம யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலையேங்க என்று புலம்பினாள். மறுபடியும் சிவாவை கேட்டாள் “ சிவா நீங்க சொல்லுறது நிஜம்தானா?” என்று. சிவாவும் அனிதாவிடம் சொன்னதெல்லாம் உண்மை என்றும் இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அவனது அறையில் இருந்து மடிக்கணினியை எடுத்து வரச்சொன்னான். அதை மடியில் வைத்தவாறு அனிதாவின் அருகில் சோபாவில் அவனும் உட்கார்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான்.

 

என்னங்க முதலில் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுவோம் என்று சொன்னாள் அனிதா. வேண்டாம் அனிதா, இப்ப இருக்கிற கொரோனா காலத்தில் அவங்க இங்க கிளம்பி வருவதெல்லாம் அவ்வளவு சரியாக இருக்காது என்று சொல்லி மறுத்து விட்டான். முதலில் உங்க மூணு பேருக்கும் இந்தியாவிற்கு போறதுக்கு விமான டிக்கெட் எடுக்கணும் என்று சிவா சொன்னவுடன் அனிதா அதை கேட்ட மாத்திரத்தில் மறுபடியும் மயங்கி விழுந்தாள். அவளை மறுபடியும் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தான். “என்ன அனிதா? உன்னை நம்பித்தான் இந்த இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். நீயே இப்படி மயங்கி விழுந்தால் அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொல்லித் தேற்றினான். நாளை மறுநாள் உங்கள் மூவருக்கும் கத்தார் விமானத்தில் டிக்கெட் எடுக்கிறேன் அங்கு சென்னை விமானநிலையத்தில் வந்து உங்களை அழைத்துப் போக அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்கிறேன் என்று சொன்னான் சிவா. உங்களை இந்த நிலையில் விட்டுவிட்டு என்னால் இந்தியா போக முடியாது என்று மன்றாடினாள் அனிதா. சிவா அனிதாவை ஏதேதோ சொல்லி ஒரு வழியாக சமாதனப்படுத்தி விமான டிக்கெட்டுகளை எடுத்து முடித்தான். மனைவி பிள்ளைகள் பத்திரமாக வீடு போய் சேர ஏற்பாடு பண்ணிய திருப்தியுடன் அடுத்து சிவா அவன் எதிர்காலத்தில் நிரந்தரமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான்.

 

மடிக்கணினியில் google.com என்ற வலை முகவரியை அடித்தான். தினமும் பலமுறை இந்த தளத்தில் எது எதற்கோ சென்றிருக்கிறான் சிவா. ஆனால் அவன் கடைசியாகச் செய்யும் கூகுள் தேடல் இதுவாகத்தான் இருக்கும். அதில் “funeral homes near me “ என்று தட்டச்சில் அடித்தான். உலகத்திலேயே தனது உடலைப் புதைக்க தானே இடம் தேடும் அதிர்ஷ்டம் முதன் முதலில் தனக்குத்தான் கிடைத்திருப்பதை எண்ணியவாறு வந்த பதில்களை பரிசீலித்தான். அதில் வந்தவற்றில் அதிக பட்சமாக எட்டாயிரம் வெள்ளியில் இருந்து குறைந்த பட்சமாக மூவாயிரம் வெள்ளி வரை இருந்தது. இறந்த பிறகு என்னவாயிருந்தால் என்ன ஆகப் போகிறது என்று சற்று தொலைவில் இருந்தாலும் குறைந்த விலையில் உள்ள இடத்தையே தெரிவு செய்தான் சிவா. அந்த இடத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவர்கள் நேரில் வந்து இடத்தை பார்த்த பிறகுதான் பதிவு செய்ய முடியும் என்றவுடன் அன்றே மனைவி பிள்ளைகளுடன் அங்கு வருவதற்கான முன்பதிவு செய்தான்.

 

ஊருக்கு வெளியில் சுமார் பத்து மைல்களில் அழகான இயற்கை சூழலில் அமைந்திருந்தது கேட்டி பியூனெரல் ஹோம். காரை வெளியில் நிறுத்தி விட்டு வரவேற்பு அறையில் நுழைந்தனர் சிவாவும் அவனது குடும்பமும். வரவேற்பறையில் இருந்தவர் வரவேற்று முன் பதிவை சரிபார்த்து விட்டு விவரங்களை கேட்கத் தொடங்கினார். “ ஆமாம் யாருக்காக இங்கே இடம் பார்க்கிறீர்கள் சிவா ?” என்று ஆரம்பித்தார் வரவேற்பாளர். “எனக்குத்தான் “ என்று சிவா சொன்னதும் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனார் அந்த ஊழியர். பிறகு “ I am so sorry to hear that” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை எடுத்துக் கொடுத்தார். அதோடு தோட்டத்தில் உள்ள காலியிடங்கள் பற்றிய வரைபடத்தை எடுத்து மேஜையின் மேலே வைத்தார். நீங்கள் விண்ணப்ப படிவத்தை எழுதி முடித்தவுடன் நாம் உள்ளே சென்று உங்களுக்கான இடத்தை பார்வையிட்டு வரலாம் என்று சொல்லி முடித்தார் அந்த ஊழியப் பெண்மணி. சிவா, அனிதா மற்றும் அவர்களின் பிள்ளைகளும் அந்த அமெரிக்கப் பெண்மணியின் பின்னால் நடந்தார்கள் அந்த கல்லறையின் அழகான அமைதியான கான்கிரீட் சாலையில். ஒவ்வொரு கல்லறையின் முகப்பிலும் அங்கு சமாதியானவரின் பெயர் மற்றும் பிறந்த, இறந்த தேதிகள் எழுதப்பட்டிருந்தது. அந்த அமெரிக்கப் பெண்மணி சற்று தூரம் சென்றதும் ஒரு திறந்த வெளியில் நின்று இதுதான் நீங்கள் தேர்வு செய்துள்ள இடம் என்று சொன்னார். அதைக் கேட்டதும் அனிதா, சிவாவின் கைகளை இறுக்கிப் பற்றியவாறு அழுதாள். சிவா அவளை சமாதானப் படுத்தினான். இந்த இடம் உங்களுக்குப் பிடித்துள்ளதா என்று அந்தப் பெண்மணி சிவாவிடம் கேட்டார். அதற்கு சிவா வெறுமனே தலையை மட்டும் ஆட்டி சரி என்று சொன்னான். அவனுக்குள் அலைமோதிக் கொண்டிருந்த எண்ணங்களை அவளிடம் எப்படிச் சொல்ல முடியும். செத்த பிறகு அடக்கம் செய்யப் போகும் இந்த உடலுக்கு எந்த இடமாக இருந்தால் என்ன? இதற்கு என்ன வாஸ்து பார்த்தா இருக்க வேண்டும் என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் மனதில் அழுதபடி. அவன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ சிவா நமக்கு வெளிநாடெல்லாம் வேண்டாமய்யா, அமெரிக்கா போனவங்க எல்லாம் அங்கேயே வீடு வாசல்னு வாங்கி செட்டில் ஆகிவிடுவாங்கலாம், பெத்தவங்க செத்தாக் கூட திரும்பி வர மாட்டாங்கன்னு நம்ம தெரு பார்வதி எங்கிட்ட சொன்னாடா” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தான். தனது செல்போனில் அந்த இடத்தை ஒரு போட்டோ எடுத்தான். “ஆம் அமெரிக்காவில் அவன் வாங்கிய சொந்த இடம் ஆயிற்றே” அந்த சமயம் பார்த்து சிவாவின் மகள் “அப்பா யாருக்குப்பா இந்த இடம்?” என்று கேட்க, அனிதா அவளின் வாயைப் பொத்தியபடி அவளையும் மகனையும் இறுக்கி அணைத்தபடி ஓவென்று அழுதாள். அந்த அமெரிக்கப் பெண்மணி அருகில் வந்து அனிதாவைத் தேற்றினாள். கவலைப்படாதே உன் கணவன் நல்லபடியாக குணமாகி விடுவான், கடவுளை நம்பு என்று சொல்லி அங்கிருந்து அனைவரையும் மீண்டும் வரவேற்பு அறைக்கு கூட்டிப் போனாள். சிவா அதற்கான முழுத் தொகையையும், அவன் போகப்போகும் மருத்துவமனையின் தொடர்பு எண்ணையும் கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

 

அங்கிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் ஹில் கிராப்ட் சாலையில் வந்தபோது, ஜாய் ஆலுக்காஸ் நகை மாளிகை கண்ணில் பட்டவுடன் காரை அந்த கடைக்கு திருப்பினான். திருமணம் ஆகி எட்டு ஆண்டுகளில் அனிதாவுக்கு என்று எந்த ஒரு நகையும் வாங்கிக்கொடுத்த தில்லையே என்று நினைவு வந்தவுடன் அவளுக்கு ஏதாவது தன்னுடைய ஞாபகார்த்தமாக வாங்கித் தர வேண்டும் என்று தோன்ற கடைக்குள் நுழைந்தான். அனிதா எவ்வளவோ வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல் அவளுக்கு ஐந்து பவுனில் ஒரு அழகான நெக்லஸ் வாங்கி அங்கேயே அணிவித்து அழகு பார்த்தான். கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டான். அனிதாவும் அழுகையை அடக்கியவாறு சிவாவின் நெஞ்சுக்குள் முகம் புதைத்து அழுதாள். கடையில் இருந்தவர்கள் ஏதோ இவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று நினைத்தபடி அதை பார்த்து ரசித்தார்கள்.

 

அடுத்து மகள் ஆதிரையிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க “ அப்பா எனக்கு ஹூஸ்டன் zoo (மிருகக்காட்சி சாலை) போகணும்பா “ என்று ஆதிரை சொன்னாள். சரியென்று அனைவரும் அங்கிருந்து கிளம்பி ஹூஸ்டன் மிருகக்காட்சி சாலை வந்து சேர்ந்தார்கள். அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்து அங்குள்ள சிற்றுண்டியில் பர்கரும் பிரைஸும் வாங்கி சாப்பிட்டார்கள். சிவாவுக்கு சற்று ஓய்வெடுத்தால் பரவாயில்லை என்று தோன்ற அவன் அங்குள்ள ஒரு மரத்தின் நிழலில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து விட்டான். அனிதா பிள்ளைகளுடன் உள்ளே சென்றிருந்தாள். இப்படியாக சிந்தனைகளில் மூழ்கியபடி இதோ இங்கே உட்கார்ந்திருக்கிறான் நம்  சிவக்குமார் என்ற சிவா. அடுத்து என்ன பண்ணப் போகிறான் என்று பார்ப்போம்.

 

காரை நண்பனிடம் மூவாயிரம் வெள்ளிக்கு விற்று அந்தப் பணத்தை மனைவியிடம் செலவுக்குக் கொடுத்தான். நண்பனிடம் மறுநாள் தன்னை மருத்துவமனையில் இறக்கிவிட்டு விட்டு காரை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்தான். அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் வீட்டை இந்த மாதத்துடன் காலி செய்ய விண்ணப்பம் கொடுத்து அதற்கான கட்டணங்களைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டான். அந்த ரசீது எதற்கு எனக்கு என்று எண்ணியவாறு குப்பைத் தொட்டியில் விசிறிவிட்டு வந்தான். அப்படியே வீட்டை சுத்தம் செய்தார்கள் இருவரும் சேர்ந்து. அன்று இரவே அனிதாவும் பிள்ளைகளும் இந்தியா செல்வதற்கான பெட்டிகளைத் தயார் செய்தார்கள். அனிதா நாள் முழுவதும் ஏதோ பறிகொடுத்ததைப் போல் அழுத வண்ணமே இருந்தாள். இடையில் “நான் அப்பவே சொன்னேனே ஏதோ விபரீதம் நடக்கப் போகுதுன்னு பார்த்தீங்களா, இப்படி ஆயிருச்சே” என்று புலம்பினாள். சிவாவும்  “ இவர்கள் எப்படி தானில்லாமல் வாழப் போகிறார்கள் என்று எண்ணி மனம் புழுங்கினான்” இருந்தாலும் அதை வெளியில் காட்டினால் எங்கே அனிதா மிகவும் உடைந்து போய்விடுவாளோ என்று எல்லாவற்றையும் மனதிற்குள் அடக்கிக்கொண்டான்.

அடுத்த நாள் செய்ய வேண்டிய அடுத்தடுத்த வேலைகளை நினைத்து மலைத்தவாறு அப்படியே சிவாவும் அனிதாவும் பிள்ளைகளோடு தூங்கிப் போனார்கள்.

 

அடுத்த நாள் எதுவுமே தெரியாதவாறு எப்போதும் போல புதிய நாளாக விடிந்தது. சிவாவும் அனிதாவும் எழுந்து விமான நிலையத்திற்கு போவதற்கான ஆவணங்களையும், விமான நிலையத்தில் என்னென்ன பண்ண வேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டார்கள். அதற்கிடையில், அனிதா மீண்டும் “நான் உங்களை இங்கே இப்படி விட்டு விட்டு போக மாட்டேன் “ என்று அழுது அடம்பிடித்தாள். “எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் உங்களை யார் கொண்டு போய் இந்தியாவில் சேர்ப்பார்கள் அனிதா?” தயவுசெய்து புரிந்து கொள் என்று அவளைத் தேற்றினான். எல்லோரும் கிளம்பி விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள். 

சர்வதேச விமானங்கள் வந்து போகும் டெர்மினல் நான்கில் வந்து சேர்ந்தனர். கத்தார் விமானத்திற்கான செக்கின் கவுண்டரில் கூட்டம் சற்று குறைவாக இருக்கவே அவசரமாக வரிசையில் நின்று மூவருக்கும் செக்கின் முடித்து போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு பெட்டிகளை எடைபார்த்து அனுப்பி விட்டு போர்டிங் செல்லும் நுழைவாயில் அருகில் உள்ள நீள இருக்கையில் சிவாவும் அனிதாவும் உட்கார்ந்தனர். அதுவரை சிவாவின் கைகளைப் பிடித்தவாறே அவனது வாசத்தைக் குடித்து கவலைகளை தலையில் ஏற்றியபடி வந்தாள். அவளது கைப்பிடியே சிவாவின் இதயத்தை கெஞ்சியது தெரிந்தது. மௌனமாக இருந்த வேளையில், சிவாவின் காலைப் பிடித்தவாறு நின்ற சிவாவின் மகன் ராம், “அப்பா இந்தாப்பா காசு என்று எப்போதோ கொடுத்த இருபத்தைந்து அமெரிக்க காசை சிவாவின் கைகளில் வைத்து, நீமோவுக்கு food வாங்கிக்கொடு அதுக்குப் பசிக்கும் “ என்று வீட்டில் அவன் வளர்த்த குட்டி மீனை ஞாபகப்படுத்தியவுடன் அழுகையை அடக்கிவைத்திருந்த அனிதா ஓவென கதறினாள். ராமையும் ஆதிரையையும் கட்டியணைத்தவாறு “இவர்களை நான் எப்படி வளர்க்கப் போகிறேன் நீங்கள் இல்லாமலென்று “ கண்ணீர் வடித்தாள். “நீங்களும் எங்களோடு வந்துவிடுங்கள் இப்படியே. அங்கே போய் எப்படியாவது உங்களை பிழைக்கவைத்து விடலாம் வாங்க சிவா பிளீஸ்” என்று அவனை கட்டிக்கொண்டு கெஞ்சினாள். சிவாவிற்கும் அந்த நொடி அப்படித்தான் இருந்தது என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று விட்டுவிட்டான். அறிவிப்புப் பலகையில் “Boarding Open “ என்று பச்சை விளக்கு பார்த்தவுடன் எல்லோரும் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்கள், வாசலின் அருகில் வந்ததுதான் தாமதம், அது விமான நிலையம் என்பதையும் மறந்து அனிதா சிவாவின் கால்களைக் கட்டிக்கொண்டும், அவளது மார்பில் அடித்துக்கொண்டும் சத்தமாக அழுதுபுரண்டாள் தரையில். ஐயோ ஐயோ உன்னைவிட்டு என்னால் போக முடியாது நான் இங்கேயே இருக்கிறேன் என்று புலம்பினாள். தனது தாலியை எடுத்து அவனது கண்களில் ஒற்றினாள். அவளது செய்கைகள் இறந்த கணவனது உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது கதறியழும் மனைவியை நினைவுபடுத்தியது. எப்படியோ கத்தார் விமானத்தில் அனிதாவையும் பிள்ளைகளையும் இந்தியாவிற்கு அனுப்பி விட்டு வீடு திரும்பினான் சிவா. விமான நிலையத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் தான் பார்க்கப் போவது இது தான் கடைசி என்று தெரிந்ததால் அவர்களை தனது கண்ணுக்குள் முடிந்தவரை அடைத்துக்கொண்டான். அனிதாவும் சிவாவின் உடம்பு முழுவதையும் கைகளில் அள்ளிக்கொண்டு தான் உள்ளே போனாள். “நான் சொல்றேன் நீங்க நிச்சயம் குணமாகி எங்களை பார்க்க இந்தியா வரத்தான் போறீங்க” என்று சொல்லி விட்டுத் தான் போனாள் அனிதா. அவள் சொன்னது நடந்திடக்கூடாதா என்ற ஏக்கத்துடன் காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சிவா.

 

ஓரளவுக்கு தான் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் முடித்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். குளியலறையில் சென்று நன்றாக குளித்துவிட்டு, தனது பாஸ்போர்ட், வங்கி அட்டைகள் இவற்றை மட்டும் ஒரு பேக்கில் எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டான். மறக்காமல் நீமோவை எடுத்து மணியிடம் கொடுத்துவிட்டு வந்தான். கிச்சன் மேடையில் “அன்புள்ள அப்பாவுக்கு” என்று எழுதிய கடிதம் ஒன்று இருப்பதைக் கவனித்தான். அதை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் மடித்துவைத்துக் கொண்டான்.

காரை கடைசியாக ஸ்டார்ட் செய்தான். மெதுவாக மருத்துவமனையை நோக்கி காரை ஓட்டிச் சென்று அங்கே பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நண்பனுக்கு தகவல் சொன்னான். அவனும் உடனே அங்கு வந்து சேர்ந்தான். அவனிடம் காரை ஒப்படைத்தான். அதோடு அவனது வீட்டுச் சாவியை அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் உள்ள தகவல் பெட்டியில் போடச் சொன்னான். நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு கடைசியாக மருத்துவமனைக்குள் நுழைந்தான் சிவா. வரவேற்பறையில் காத்திருந்த சமயம், தனது மகள் ஆதிரை எழுதிய கடிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அவள் ஒரு படம் வரைந்திருந்தாள். அவர்கள் சென்று பார்த்த கல்லறையில், இரண்டு கல்லறைகளுக்கு இடையில் உள்ள சிறிய இடத்தில் ஒரு ரோஜாச் செடியும், அதன் மேலே வானத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் பறப்பது போலவும், அதிலிருந்து கண்ணீர் துளி விழுந்து அந்த ரோஜாச் செடியின் கீழே ஆங்கிலத்தில் எழுதியிருந்த “ i love you appa “ வின் i இன் தலையில் அந்த கண்ணீர்த்துளி நிற்பதாக வரைந்திருந்தாள். அதைப்  பார்த்ததும் சிவாவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு வந்து அந்த i இன் தலையில் விழுந்து உடைந்தது. 

#வாஞ்சிவரிகள்#

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...