குறுந்தொகை பாடல் 25 ஐ மையக் கருத்தாகக் கொண்டு எழுதியது.
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
தலைப்பு: அரங்கனே சாட்சி !!!
காலைக் கதிரவனும் ஊரை எழுப்பிட ஒருமணி நேரம் ஆகும் அந்த ஊரில் உள்ள மலையை
தாண்டி வர. எதிரி யாரும் எளிதில் வரமுடியாது ஊரைச் சுற்றி வளைவாய்ச்
சாலையுண்டு, கோட்டையுண்டு, சந்தைப் பேட்டையுண்டு, கோட்டையைச் சுற்றி கோட்டைச்
சுவருண்டு, சுவற்றுக்கு வெளியே நீரால் சூழ்ந்த அகல அகழியுண்டு, அகழியின்
மறுபுறம் அகழிக்கரை உண்டு, கோட்டைச் சுவரில் ஆட்கள் நடந்து காவல் காக்க
கட்டைச் சுவருண்டு. போர் வந்தால் மூடிக்கொள்ள ஒற்றைக் கதவுண்டு, மற்ற நேரம்
மக்கள் வந்து போக மாற்று வழியுண்டு. கருங்கல் பாறையில் செதுக்கி வடித்த
அடுக்காய் படியுண்டு, தடுக்கி விழாமல் ஏறி இறங்க ஒற்றைக் கைப்பிடியுமுண்டு.
மலையின் மேலே போகப் போக மாடிகள் பலவுண்டு, ஒவ்வொரு மாடிக்கும் மரத்தால் செய்த
பெரிய மரக்கதவுண்டு. வெயில் வந்தால் ஒதுங்கி நிற்க குன்றுகள் பலவுண்டு,
தொடுக்கி நிற்கும் குன்றுகள் கண்டு பார்ப்பவர் பயமுண்டு. கனமழை வந்தால்
பதுங்கி கொள்ள மண்டபம் பலவுண்டு.
மலையடிவாரத்தில் குடைவரை கோயில்கள் இரண்டு உண்டு. நின்ற கோலத்தில்
சிவபெருமான் அவதரித்த சிவன் கோயில் ஒன்றுண்டு. அனந்த சயனத்தில் பள்ளிகொண்டு
ரட்சிக்கும் பெருமாள் கோயில் ஒன்றுண்டு. கோவிலில் தொண்டூழியம் செய்பவர்கள்
வாழ தனி இடமும், கோவில் அர்ச்சகர்கள் வாழ தனி இடமும் உண்டு. அந்த
இடங்களுக்குள் போவதற்கு நிறைய கட்டுப்பாடு உண்டு. கோவில் திருவிழாக்களில்
மட்டுமே அவர்கள் ஒன்றாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள், மற்றபடி
அவர்களுக்கு இடையில் எப்போதும் ஒரு காழ்ப்புணர்வு இருந்து கொண்டேதான்
இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், நமது நாயகனும், நாயகியும் வாழ்ந்து
வருகிறார்கள்.
நாதத்தின் கீதத்தை வேதமாய் நேசித்து வளர்ந்தவள். சாதத்தைப் பகிர்ந்து உண்டாலும் பாசத்தைப்
பங்கிடத் தெரியாதவள். பூப்படைந்த நாள் முதல் பூரிப்பாய் மலர்ந்து பூவிற்கே
போட்டியானாள் உலக அழகிப் போட்டியில்.
கிராமத்துக் குயில் என்றாலும் கூவுவது அக்ரஹாரத்துக் குடிலில் தானே.
கலை அழகு என்றாலும் கலையாத இந்தச் சிலையழகு நம் நாயகி. சிற்பமாய் செதுக்கி
காலைக் கதிரவனின் காமாப் பார்வைக்குப் பயந்து, கருவறையில் பதுங்கி, பழரசமும்
பாலும் கலந்து, பலமுறைக் குளித்து, பலவண்ணப் பட்டுடுத்தி அலங்கரித்த
அம்மனும், தரிசிக்க வரும் நாயகியின் தரிசனத்திற்கு காத்து நிற்கும். தந்தை
நாதஸ்வரம் வாசிக்க, தாயோ நட்டுவாங்கம் செய்ய, தனுசாய் வளைத்து ஆடும்
சலங்கையில்லாத கால்களும் சலங்கை ஒலி எழுப்பும். கடவுளின் முன்னே கைவிரல்
கோர்த்து கைவளை குலுங்க கைமாலை சூட்டிடும் காட்சிகண்டு வியந்து சாட்சியாய்
நிற்பர் அனைவரும். ராகங்களில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த அபூர்வ ராகத்தின்
பெயர் கல்யாணி.
கருவறை வரைச் சென்று வர கடவுச்சீட்டு பெற்ற குடும்பத்தில் கடைக்குட்டியாகப்
பிறந்து மடையாக வரும் மந்திரங்களை தடையில்லாது உச்சரித்து பெருமாளையும்
பெருந்தேவியையும் திருப்பள்ளி எழுந்தருளச் செய்யும் திருப்பணி செய்பவனின்
திருநாமம் விச்சு என்ற விஸ்வநாதன். திருமாலின் திருமேனியை தினம்
துடைத்தாலும், திருமகளின் திருமேனியை தினம் துதித்தாலும், நடனத்து நாயகியின்
நயனத்தில் விழுந்து மொழியில்லாக் கிளியின் விழிபேசும் மொழிகண்டு மொழிந்தான்
தன் காதலை.
நாதமும் வேதமும் நேசமாய் கலந்து வாசம் வீசியது எங்கும். சன்னதியில்
ஆரம்பித்து பிரகாரத்தில் உறவாடி பிரவாகமாய் பெருகி பிரசாதமாய்
இனித்தது.
மண்டபத்துக் கற்சிலைகள் மண்டியிட்டு மலைத்து நிற்க காதலரின் காதல் காட்சிகள்
கோவில் சுவர்களில் சித்திரமாய் சித்தரிக்க மாடங்களில் கூடி மகிழும்
மாடப்புறாக்களும் மயங்கி கூடுவிட்டுப் பறந்து கூச்சலிட விடைபெற விரைந்தவளை
இடைமறித்து இடை வளைத்திட நடை தளர்ந்து மடை திறந்து உடை அவிழ்ந்து கடை
விரித்திட தடை மறந்து தாங்கி நின்றான். அம்மனுக்கு ஆடை மாற்றி அழகு
பார்க்கும் விச்சுவிற்கு, கல்யாணியின் ஆடைகள் விலகிட கற்சிலை கண்டு பழகியவன்
பொற்சிலை கண்டு மலைத்து சிற்பங்கள் எல்லாம் மலர் தூவிட சில்வண்டுகள் நாதம்
இசைத்திட அரங்கனின் அருகிலேயே அரங்கேற்றமானது அவர்களது அந்தரங்கக்
காதல்.
நாதமும் வேதமும் கீதம் இசைத்திட பாதம் கலந்திட மாதம் மூன்றானது அவள் அதை
உணர. அகத்தின் அசைவுகள் முகத்தில் தெரிந்திட நகத்தின் விளிம்புகள்
நனைந்து உதிர்ந்திட தாய்மையின் முகத்தை தாயும் அறிந்திட சின்னதாய் போர்
மூண்டது வீட்டில். மூலம் தெரிந்ததும் ஞாலமே நின்றது. சாதியும் மதமும்
சேதியாய்ச் சொன்னது, வீதியும் ஊரும் மீதியைக் கொன்றது. எச்சில் வழியும்
நாதஸ்வரத்தில் ஒருநாள் ரத்தமாய் வழிந்து சத்தமும் நின்றது மொத்தமும்
முடிந்தது கல்யாணியின் தந்தைக்கு. கலையிழந்த மகளின் களைப்பைக் கண்டு கலைக்க
அவள் அம்மா எவ்வளவோ கெஞ்சியும், மறுத்துவிட்டாள் மருத்துவமனை செல்ல.
செய்தியறிந்த வேதமோ, செய்வதறியாது திகைத்து வெளிநாட்டில் வாழும் சொந்தத்தின்
வீட்டிற்கு சொந்தம் யாரும் அறியாமல் கடத்திவிட்டது விச்சுவை.
காதலித்து கரு தந்தவன் சாதலுக்கு முன் வருவானென நம்பியே வாழ்ந்தது நாதமும்.
மாதங்கள் கழிந்ததில் மகவைப் பெற்றெடுத்தாள் கல்யாணி.
தாசி குடும்பத்தில் வேசியாக வாழ்ந்து காசிற்காக பிறந்த பிள்ளையென கூசாமல்
ஊரார் ஏசிட, மாசற்ற காதலின் மகத்துவம் அறியாத மக்கட்பதரென மன்னித்தாள்.
பெண்மையின் இலக்கணமாய் உண்மையாய் நேசித்தவனோடு தன்னைப் பகிர்ந்ததால், மண்ணில்
பிறந்த மைந்தனை கண்ணில் வைத்து காத்திட கண்ணன் என பெயர் வைத்தாள்.
காலங்கள் உருண்டோடியது. கல்யாணியும் ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு
பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாள். கண்ணனும் பள்ளியில் படித்து
வந்தான். அவனுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அப்பா தான். அந்த அளவிற்கு அவன்
அவமானத்தை அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அவமானங்களை எல்லாம்
தனது படிப்பில் காட்டினான். பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக
வந்தான். மாநில முதலமைச்சர் கையால் பரிசு வாங்க அவனுக்கு சென்னை போகும்
வாய்ப்புக் கிடைத்தது.
பேரூந்தில் சென்னை சென்று இறங்கினான். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி
விழாநடக்கும் மண்டபத்திற்குச் சென்றான். விழா மிக சிறப்பாக நடைபெற்று
முடிந்தது. அம்மாவைக் கூட்டி வந்திருக்கலாமே என நினைத்து வருத்தப் பட்டான்.
கையில் பரிசுக் கோப்பையையும், சான்றிதழையும் வைத்துக் கொண்டு சாலையை கடக்க
முயன்றான். அப்போது இரண்டு கால்களும் இழந்து, நடக்க முடியாத நிலையில் ஒரு
பெரியவர் சாலையை கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து
வருத்தப்பட்ட கண்ணன், அவருக்கு உதவிசெய்ய அவரை நெருங்கினான். அவரிடம், தனது
கோப்பையையும், சான்றிதழையும் கொடுத்துவிட்டு, அவரை தனது இருகைகளால் தூக்கிக்
கொண்டு சாலையைக் கடந்தான். போகும் வழியில், அந்தப் பெரியவர் அவனை அருகாமையில்
பார்க்க மனதுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு வருவதை உணர்ந்தார்.
சாலையை கடந்ததும், அவரிடம் எங்கே போக வேண்டும் எனக் கேட்டான் கண்ணன்.
அதற்கிடையில், அவர் கண்ணனிடம் அவனைப் பற்றி விசாரிக்க, அவனும் தனது கதையை
சொல்லி முடித்தான். அவன் சொன்னதில் இருந்து அவன்தான் தனது மகன் என்பதை அந்த
பெரியவர் அறிந்து கொள்ள நிறைய நேரம் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனிடத்தில்
தான் தான் அவனது அப்பா என்று சொல்லவும் முடியவில்லை. அவரையும் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு அவர் செல்ல வேண்டிய இடத்தில இறக்கி விட்டு விட்டு அவன்
எழும்பூர் பேரூந்து நிலையம் நோக்கி சென்றான். அப்போதுதான் அவர் தனது பர்ஸை
விட்டுப் போய்விட்டதை பார்த்தான். அதில் என்ன இருக்கிறது என பார்க்க, அதில்
அந்த பெரியவரும், தனது அம்மாவும் இளவயதில் சேர்ந்து எடுத்த புகைப்படம்
இருந்ததைப் பார்த்தான். உடனே ஆட்டோவை அந்த பெரியவர் வீட்டிற்கு திரும்பிப்
போகச் சொன்னான்.
இதற்கிடையில், வீட்டிற்குச் சென்ற பெரியவர், தனது பர்ஸை ஆட்டோவில்
விட்டுவந்ததை அறிந்தார். அது எப்படியும் தனது மகன் கையில் கிடைத்து விடும்,
அவனும் உடனே இங்கே திரும்பி வருவான் என உணர்ந்தார். விரைவாக தான் ஏன்
அவர்களைப் பார்க்க வரவில்லை, எப்படி கால் ஊனமானது என்ற விவரங்களை ஒரு
கடிதத்தில் எழுதினார். அதை வீட்டு வாசலில் செருகி வைத்துவிட்டு, அவர் தனது
காதல் துணைக்காக பல வருடங்கள் முன்பு வாங்கி வைத்து இருந்த சேலையை எடுத்தார்.
அதன் ஒரு முனையில் தன் கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டுவிட்டு அடுத்த
முனையை மின் விசிறியை நோக்கி வீசினார். சேலையை நன்றாக இழுத்துப் பார்த்து
உறுதி செய்து விட்டு, தனது சக்கர நாற்காலியில் இருந்து கீழே குதித்தார்.
அவரது அறையில் இருந்த அரங்கனின் படம் அப்படியே அசையாமல் நின்றது. அவரது உயிர்
பிரியும் நேரத்தில், அரங்கனின் முன் அரங்கேற்றம் ஆன தனது காதல் நினைவுகள்
வந்து போனது.
தனது உயிருக்குயிரான காதலி, தனது இந்த நிலையைப் பார்த்து வருத்தப் படக்
கூடாது என்பதற்காக தனிமையில் வாழ்ந்து, தன் மகனும் வருத்தப் படக்கூடாதென தன்
உயிரை மாய்த்துக் கொண்ட தனது தந்தையை தவறாக எண்ணி பலமுறை அவரை திட்டியது
எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் கண்ணன். அரங்கனை விட உயரமாகத் தெரிந்தார்
விஸ்வநாதன் அவனுக்கு.
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment