காலையில் விடிந்ததும் ஜன்னல் வழியாக கதிரவனின் கதிர்கள் அனுமதி இல்லாமல்
உள்ளே நுழைந்து மணி ஆறை தாண்டிவிட்டதை உணர்த்தியது. சரி இனியும் தூங்கினால்
சனி முடிந்து ஞாயிறு கடந்து திங்கள் ஞாபகம் வந்துவிடும் என்று பயந்து
மெத்தையில் இருந்து குதித்து எழுந்தேன். மேஜைமேல் வைத்திருந்த எனது கண்ணாடியை
எடுத்து மாட்டியவாறு நிலைக் கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரிசெய்து கொண்டு
ஹாலுக்கு வந்தேன். என்னங்க என்னமோ இன்றைக்கு தலைக்கு மேலே வேலையிருக்கு என்று
சொன்னீர்களே என்று கேட்டவாறு மெத்தையை விட்டு எழுந்து வர மனமின்றி திரும்பிப்
படுத்து விட்டாள் என் மனைவி. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது இன்றைக்கு
ஹேர் கட்டிங் போகவேணும் என்று நேற்று இரவே என் மனைவியிடம் சொன்னது.
சார்ஜ் ஆகி முடிந்து இரவு முழுக்க வந்த லைக்குகளையும், கமெண்டுகளையும்
கவுண்ட் செய்து வைத்துக் கொண்டு, எப்ப நம்ம எஜமான் எடுத்து அந்த பாரத்தை
பார்த்து இறக்கிவைப்பான் என்று எண்ணியவாறு எனது செல்போன் காத்துக்
கொண்டிருந்தது. அதை எடுத்து கிரேட் கிளிப்ஸ் ஆப்பை திறந்து, முடிவெட்டிக்
கொள்ள நேரத்தை முன்பதிவு செய்துவிட்டு காரில் ஏறி கடையை நோக்கி வண்டியை
செலுத்தினேன்.
கடையின் வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து உள்ளே
நுழைந்ததும் "welcome to great clips “ என்று அங்கு பணிசெய்யும் பெண்கள்
வரவேற்க சற்று பரவசமாகி, திரும்பி நன்றிகளை கூறிவிட்டு அங்குள்ள இருக்கையில்
அமரும் முன்பே கவுண்டரில் நின்ற இரு பெண்களில் ஒருவர் "did you already check
in? What is your name “ என்று கேட்டதும், “yes, vanchi “ எனப் பதில்
சொல்லிவிட்டு அமர்ந்தேன். அந்தப் பெண்மணி அவரோடு நின்ற மற்றொரு பெண்மணியிடம்
எப்படி வாடிக்கையாளர்களை பதிவு செய்வது, எப்படி வேலைக்கு அழைப்பது என்று
விளக்கிக் கொண்டிருந்தார். அதிலிருந்து அந்தப் பெண்மணி அன்றுதான் புதிதாக
வேலைக்கு சேர்ந்துள்ளார் எனத் தெரிந்தது. அந்தப் பெண்மணிக்கு சுமார் 75 முதல்
80 வயது இருக்கும். அவரது கைகளும் தலையும் லேசாக ஆடுவது கண்டு எனது மனம்
சற்று கலங்கியது. இந்த வயதிலும் இப்படி வேலை செய்துதான் பிழைக்க
வேண்டியிருக்கிறதே என்று டிரம்ப்பின் மீதும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின்
மீதும் எனது எரிச்சலை காட்டிவிட்டு, எனது பெயரை அழைப்பதற்கு காத்திருந்தேன்.
அந்தப் புதிய பெண்மணி "வாஆஞ்சிஇ” என்று அழைத்ததும் எனக்கு சிறுதயக்கம்
வந்தாலும், உடனே அந்தப் பெண்மணியின் முதல் வாடிக்கையாளனாகச் செல்ல வாய்ப்பு
கிடைத்தது கண்டு ஏதோ ஒரு வகையில் அவருக்கு உதவப்போகிறோம் என்று எண்ணியவாறு
அவர் பின்னால் சென்று அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன். அவர் எனது
கழுத்தைச் சுற்றி துணி கட்டுவதற்கும், துண்டினைச் சுற்றி கட்டுவதற்கும் பட்ட
சிரமம் கண்டு மனம் இன்னும் கூடுதலாக வருத்தம் அடைந்தது. அவர் எனக்கு எப்படி
முடிவெட்டுவார் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. எப்படியாவது நல்லபடியாக
முடிவெட்டி முடிக்க வேண்டும் என்றே இறைவனை வேண்டினேன். அவர் என்னிடம் எப்படி
முடி வெட்ட வேண்டும் என்று கேட்கும் போது கூட குரலில் ஒரு நடுக்கம்
தெரிந்தது. நானும் போனமுறை செய்ததன் குறிப்பில் உள்ளது போலவே வெட்டுங்கள்
என்று சொல்லி விட்டேன். அவர் எப்படி வெட்டினாலும் பரவாயில்லை அவருக்கு
நம்மால் முடிந்தது ஐந்து வெள்ளி டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று எனக்குள்
சொல்லிக் கொண்டேன். முடிவெட்ட ஆரம்பித்து சில நிமிடங்கள் நிசப்தமாக கழிந்தது.
நான் எப்போதும் முடிவெட்டுபவரிடம் ஏதாவது பேச்சுக் கொடுப்பது வழக்கம்.(ஏதாவது
கதை கிடைக்கும் என்ற நப்பாசைதான்) இன்று ஏனோ எனக்கு எப்படி தொடங்குவது என்று
தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது பேசுவோம் என்று பேச ஆரம்பித்தேன்.
"நீங்கள் கேட்டியிலா வசிக்கிறீர்கள்?” என்று எனது முதல் கேள்வியை கேட்க,
அவரும் "ஆமாம். நீ இந்தப் பகுதியிலா வசிக்கிறாய்?” என்று அவர் சொல்ல, பேச்சு
ஆரம்பித்தது. அடுத்து அவரிடம் , இன்று தான் உங்களுக்கு இங்கு முதல் நாள்
வேலையா?” என்று நான் கேட்க, அவரும் , “ஆமாம் இன்று தான் நான் இங்கு
வேலைக்குச் சேர்ந்தேன். நீ தான் எனது முதல் வாடிக்கையாளர்” என்று சொன்னார்.
நான் உடனே அதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றதும், அவர்
மிக்க நன்றி என்று சொல்லி நகைத்தார். அடுத்து அவரிடம், ‘இதற்கு முன்னாள்
எங்கு வேலை பார்த்தீர்கள் “ என்று கேட்டதும், அவர் தனது கதையை சொல்லத்
தொடங்கினார்.
நான் இந்த கேட்டிப் பகுதியில் 33 ஆண்டுகளாக வசிக்கிறேன். இதற்கு முன்பு 26
வருடங்கள் சொந்தமாக முடி திருத்தும் கடை வைத்திருந்தேன். ஐந்து வருடங்களுக்கு
முன்பு, அதை விற்று விட்டு வீட்டில் வேலையேதும் செய்யாமல் இருந்தேன். ஆனால்
எனக்கு வீட்டில் வேலையேதும் செய்யாமல் வீட்டில் இருக்க முடியவில்லை. தனிமை
மிகவும் கொடுமையாக இருந்தது. அதனால் தான் மீண்டும் இந்த வேலைக்கு வந்துள்ளேன்
என்று சொல்லி முடித்தார். உடனே எனது அடுத்த கேள்வியை
ஆரம்பித்தேன். உனக்கு வீட்டில் யாரும் இல்லையா ? உனக்கு பிள்ளைகள்
இருக்கின்றார்களா ? என்று கேட்டேன். அதற்கு அவரும் எனக்கு மூன்று மகன்களும்
ஒரு மகளும் இருக்கிறார்கள் இருந்தாலும் நான் எனது வீட்டில் தனியாகத்தான்
இருக்கிறேன் என்று சொல்லி முடிக்கையில், எனக்கு அவரது பிள்ளைகள் மீது
கடும் வெறுப்பும் கோபமும் வந்தது. தொடர்ந்து அவரிடம் ஏன் அவர்களுடன்
சென்று இருக்க வேண்டியது தானே என்று கேட்க, அவரோ” நான் இங்கு
சுதந்திரமாக இருந்து பழகி விட்டேன்... அங்கு சென்றால் அவர்களது
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே. அதனால்தான் நான் மறுத்து விட்டேன்
என்றார்.” சரி அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கு இருக்கின்றார்கள்?
என்று கேட்டதும் அவர் அவர்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
எனது மூத்த மகன் மருத்துவம் முடித்துவிட்டு ஹூஸ்டனில் மருத்துவராய் பணி
செய்கிறார். இரண்டாவது மகன் பல் மருத்துவர், அவர் லாஸ் வேகாஸில் பல்
மருத்துவமனை வைத்து அங்குள்ளார். மூன்றாவது மகன் டாக்டர் பட்டம்
முடித்து விட்டு நாசாவில் விஞ்ஞானியாக உள்ளார். மேலும் அவர் எப்போதும்
ஹூஸ்டன் மேயருடன் சேர்ந்து அவரது திட்டக் குழு உறுப்பினராகவும்
உள்ளார். என் ஒரே மகள் கலிபோனியாவில் வேலை செய்கிறாள். எல்லோரும்
நல்லபடியாக படித்து முடித்து விட்டு நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
நானும் இங்கு தனியாக சுதந்திரமாக வாழ்வை கழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று
சொல்லி முடித்தார்.
இதற்கிடையில் எனக்கு அவர் முடி வெட்டி முடித்துவிட்டார். எனக்கு
என்னுள் ஏற்பட்ட வியப்பையும், அவர் மேல் ஏற்பட்ட மரியாதையும்
கட்டுப்படுத்தமுடியாமல் கண்களின் ஓரத்தில் லேசாக கண்ணீர் கசிந்தது.
அவர் என்னிடம்’ எப்படி இருக்கிறது ஹேர்கட் ‘ என்று கேட்டு கண்ணாடியை எடுத்து
எனக்குப் பின்னே வைத்து கேட்டார். நான் இன்னும் எனது மூக்கு கண்ணாடியை
போட வில்லை இருந்தாலும் அவரிடம் மிகச் சிறப்பாக உள்ளது என்று சொன்னவுடன் அவர்
முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்ந்தேன்.
அவரிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவர்
மிக்க மகிழ்ச்சியுடன் வந்து என்னோடு நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்க நான்
எடுத்த செல்பி தான் இந்த புகைப்படம். நான் முன்னரே முடிவு செய்த
மாதிரி ஐந்து வெள்ளியை அவருக்கு டிப்ஸாக கொடுத்துவிட்டு கடையை விட்டு
வெளியேறும் முன் அவரிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். “ ஆமா உங்கள்
பெயர் என்ன?” என்று.
“ என் பெயர் செனாக் என்ற செர்ரி” என்று சொல்லிவிட்டு அடுத்த
வாடிக்கையாளரை கவனிக்கச் சென்றுவிட்டார். முடி வெட்டும் இடத்தில்
கிடைத்த மகிழ்ச்சியுடன் கடையை விட்டு செர்ரியின் நினைவுகளைச் சுமந்து
வெளியேறினேன். கடையை விட்டு வெளியில் வந்ததும் கணவனை இழந்த பிறகு இந்தியாவில்
வசிக்கும் எனது அன்னையின் நினைவு வந்தது மட்டுமல்லாமல் குறுந்தொகையில் கபிலர்
எழுதிய பாடல் வரிகளும், அதற்கு நான் எழுதிய எளிய தமிழ் கவிதையும் நினைவில்
வந்தது.
#115 குறிஞ்சி திணை - தோழி கூற்று
தலைவனும் தலைவியும் இளமைக் காலத்தை இனிமையாக கழித்து முதுமை அடைகிறார்கள்.
முதுமைக் காலத்தில் தலைவியை தலைவன் சரியாக பாதுகாக்கத் தவறிவிடுகிறான்.
தலைவியின் தோழி தலைவனிடம் " இளமைக் காலத்தில் தலைவியை நீ போற்றிப்
பாதுகாத்தது சிறப்பாகாது. முதுமைக் காலத்திலும் அவ்வாறே காப்பதுதான் அதைவிட
சிறப்பு " என எடுத்துச் சொல்லும் பாடல் வரிகள்.
குன்றினில் புகுந்து வரும்
தென்றல் இதமாய் தீண்டிட
அசைந்தாடும் மூங்கிலில்
இசைத்திடும் நாதத்தில்
மெல்லிடை வளைத்து
துள்ளிடும் வனமான்கள்
களிறுகள் உதிர்த்த
தளிரிலை ருசித்து
குளிரினில் விடைத்து
வெளியிடை ரசித்து
துஞ்சும் மலைதனை
நெஞ்சில் வீரமொடு
அஞ்சாது ஆளும் எந்தன்
தலைவனே மலைநாடனே
பெருநன்மை செய்தாரை
பெரும்பேறாய் எண்ணி
போற்றாதாரும் உளரோ
போற்றுதல் இயல்பேயன்றி
சிறப்பேதும் அதில் உண்டோ
உன்வழி நடந்து
தன்வலி மறந்து
உன்னுயர்வு காண
கண்ணயர்வு துறந்து
உனையன்றி வேறுலகை
உணர்வாலும் அறியாது
இளமயிலாய் தோகைவிரித்து
இளமையை ஈன்று தொலைத்து
முதுமையைத் தழுவி நிற்கும்
பதுமையென் தலைவியை
பாதுகாப்பாய் சிறப்புடனே
பேதமில்லாப் பெருமகளை
பேணிடுவாய் விருப்புடனே
நிழலாய் வரும் நிலவவளை
நெஞ்சில் வைத்துப் போற்றிடுவாய்..!!
பாடியவர்: கபிலர்
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.
# வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment