மிச்சிகன் ஏரியின் மேற்குக்கரையில் அலைகளின் சலசலப்புச் சத்தம் ஓய்ந்து அமைதியாகி குதித்து விளையாடிய ஏரித் தண்ணீர் குளிரில் விரைத்து பனிப்பாறையாகி பள்ளி செல்லும் பிள்ளைகளின் விளையாட்டுத் தளமாகிக் கிடந்தது. அதன் அருகில் இருந்த அழகிய சிற்றூர்தான் டர்னர். இருபது வீடுகள் மட்டுமே உள்ள சிற்றூர் என்றாலும் அனைவருமே ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். மொத்த மக்கள்தொகை சுமார் நூற்றி இருபது பேர் மட்டுமே இருந்ததால் அருகிலுள்ள ஊருக்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். தங்களுக்கென்று பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஒரு சிறிய லைப்ரரியாவது கட்ட வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து உழைத்து பணவுதவி செய்து கருங்கல்லால் ஆன லைப்ரரியை கட்டி முடித்தனர். எல்லா வீடுகளும் மரத்தினால் செய்த வீடாக இருந்த தால் கல்லாலான லைப்ரரி கட்டிடம் அந்த ஊரிலேயே தனித்து விளங்கியதோடு எல்லோரும் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடிப் பேசிப் பழகும் இடமாக மாறி அது அந்த ஊர் மக்களின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. அனைவரது பங்களிப்பில் லைப்ரரியில் சுமார் ஐந்தாயிரம் புத்தகங்கள் சேர்ந்து அழகாக காட்சியளித்தது.
வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் குளிர்காலமும் பனிப்புயல்களும் பலமுறை வந்து போனது. ஒவ்வொரு வருடமும் பனிப்புயல் காலத்தில் அனைத்து மக்களும் லைப்ரரியில் தஞ்சம் புகுந்ததால் அந்த ஊருக்கு வந்த சேதமெல்லாம் சில வீடுகளோடு போனதே தவிர மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கழிந்தது.
இவ்வாறாக பல வருடங்கள் கழிந்த நிலையில், ஒரு வருடம் குளிர் காலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தாக்கியது. பனிப்புயல் சூறாவளியோடு சேர்ந்து ஊரையே புரட்டிப் போட ஊர்மக்கள் அனைவரும் லைப்ரரியிலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் சேமித்து வைத்த உணவையே அனைவரும் பங்கிட்டு உண்ணவேண்டியதாயிற்று. புயலின் வேகம் அதிகரிக்க மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து விழ மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் போனது. குளிர் வேறு மிகக் கடுமையாக லைப்ரரிக்குள் இருந்த அனைவரும் குளிர் தாங்காமல் நடுங்க ஆரம்பித்தனர். எப்படி இதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் தவித்த நிலையில், லைப்ரரியன் ஒரு யோசனை சொல்ல, ஊர்மக்கள் அனைவரும் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர். இவ்வாறாக அரை இரவு முடிந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகளும், முதியோர்களும் குளிர் தாங்காமல் மயங்கி விழ ஆரம்பிக்க, வேறுவழியின்றி லைப்ரரியன் சொன்ன யோசனைக்கு ஒத்துக் கொண்டனர்.
அதன்படி லைப்ரரியில் அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கிச் சேகரித்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எரிக்க அதைச் சுற்றி ஊர்மக்கள் உட்கார்ந்து தங்களது குளிரைத் தவிர்க்கத் தொடங்கினர். இவ்வாறு அங்கிருந்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை காப்பாற்ற அவர்கள் கண்ணெதிரிலேயே எரிந்து சாம்பலானது. அரசாங்கத்திடம் இருந்து உதவி வர தாமதம் ஆக, லைப்ரரியில் இருந்த எல்லாப் புத்தகங்களும் எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டே இருந்தன. மறுநாள் மாலை மங்கிய நேரத்தில் லைப்ரரியின் கடைசிப் புத்தகம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில் ஆகாயத்தில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்க, அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அரும்பியது.
சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய புத்தகங்கள் இப்படி ஒரே நாளில் தங்கள் கண் முன்னே எரிந்து சாம்பலானதை எண்ணி ஊரார் எல்லாம் வருந்தியிருக்க, இந்தக் கடும்குளிரில் இருந்து தன் மக்களை காப்பாற்றிய நிம்மதியில், கம்பீரமாக காட்சியளித்தது அந்த கல் கட்டிடம்.
#வாஞ்சிகதை#
No comments:
Post a Comment