Friday, July 24, 2020

அப்பா பைத்தியம்

சிறுகதை
தலைப்பு: அப்பா பைத்தியம்
எழுத்து வடிவம் : வாஞ்சி கோவிந்த் , கேட்டி டெக்ஸாஸ் 

பத்துவருடம் ஆகிவிட்டது..ரவி இப்போது அமெரிக்காவில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக இருக்கிறான். அவனுக்கு லதா என்ற அழகான மனைவியும் சேசு, நீலு எனமகனும் மகளும் இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து கிட்ட தட்ட பத்துவருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இப்போது தான் முதன் முறையாக தனது குடும்பத்துடன் வந்துள்ளான். லதா வீடு சென்னையில் உள்ளது. ரவியின் வீடு திருச்சி தாண்டி ஒரு சிற்றூர்.சென்னையில் வந்து இறங்கியதுமே லதா தானும் பிள்ளைகளும் அப்பா வீட்டில் நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். வெயிலில் உங்கள் ஊருக்கெல்லாம் வர முடியாது என்று சொல்லிவிட்டாள். பிள்ளைகளையும் அவளோடு இருக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவர்களும் அங்கேயே தங்கினார்கள். ரவி மட்டும் சென்னையில் இருந்து சேது எக்ஸ்பிரஸில் பர்த் டிக்கட் எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு கிளம்பினான். ரயில் ஒவ்வொரு ஊரை கடக்கும் போதும் அவனுக்கு தனது பழைய நினைவுகள் வந்து போனது. ரயில் திருச்சியை தாண்டியது. புதுக்கோட்டையில் இறங்க வேண்டும். கீரனூரை தாண்டிய போது திடீரென ஏதோ சத்தம் கேட்க ரயில் அங்கேயே நின்றது. ரவியின் மனம் எப்போது புதுகையை அடையும் என ஏங்கிக்கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடலாம். அங்கு சந்தானம் மாமா டாக்சி எடுத்து வந்திருப்பார். அவரோடு ஊருக்கு போவதாக ஏற்பாடு செய்திருந்தான்.

ரயில் புறப்பட சற்று நேரம் ஆகும் என சக பயணி வந்து சொன்னதும் அப்படியே இருக்கையில் சாய்ந்தவாறு தனது கடந்த காலத்தை எண்ணி மனம் அசைபோட்டது…

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அம்மாவோடு தான் இருந்தான். மாமா, அத்தை, ஆயா, தாத்தா எல்லோரும் இருந்தார்கள். ஆனால் அப்பா மட்டும் அவர்களோடு இல்லை. அம்மாவிடம் அப்பாவைப்பற்றி கேட்பான். ஆனால் அவர் ஆத்திரம் அடைவார். அதோடு அப்பா இறந்துவிட்டதாக சொல்வார். இப்படியே அவனது இளம்பருவம் கடந்தது. பள்ளிக்கு போக ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் பள்ளிக்கு செல்லும் போது  யாரோ ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வருவது போல தோன்றியது. அவன் பயந்து வேகமாக வீட்டிற்கு ஓடிவிட்டான். மறுநாளும் அந்த நபர் அவனை பின்தொடர்ந்து பள்ளி வரை வந்தார். இவனை பார்த்து சிரித்தார். ஆனால் அவர் கிழிந்த சட்டையும் அழுக்கு வேஷ்டியும் கட்டிக்கொண்டு தோளில் பெரிய துணிப்பை தூக்கி கொண்டு பார்ப்பதற்கு பிச்சையெடுப்பவர் போல இருந்தார். இப்படியே சிலநாட்கள் சென்றது. ஒருநாள் பள்ளி போகும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் பக்கத்துக்கு வீட்டு விசுவும்  எதிர்வீட்டு சுரேஷும் கடலைமிட்டாய் வாங்கித் திங்க இவனிடம் காசு இல்லாததால் கடைக்கு வெளியே நின்றான். அதை பார்த்த அந்த  பைத்தியக்காரர் அவனருகில் வந்து அவனுக்கு காசு கொடுக்கிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத ரவி காசுவாங்க மறுத்து விடுகிறான். ஆனால் அவன் மனதில் ஏதோ இனம்புரியாத நெருடல் தாக்கியது. அன்று இரவே அவனது ஆயாவிடம் இந்த விஷயத்தை சொல்லி அவர் யாரென்று கேட்கிறான். ஆயா கண்களில் கண்ணீர் வழிய அவனிடம் உண்மையை சொல்கிறார். அது ரவியின் அப்பா என்றும் அவர் மனநிலை சரியில்லாததால் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் சொல்கிறார். அன்றிலிருந்து ரவிக்கு அவன் மனதில் அப்பாவை பற்றிய எண்ணங்கள் அலைமோத ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு அவரை பார்க்கும் போதெல்லாம் புன்முறுவல் செய்வான். தன்னிடம் உள்ள காசை அவருக்கு கொடுப்பான் ஆனால் அவர் வாங்க மறுத்து விடுவார். இருந்தாலும் எல்லோர் முன்னிலையில் அவரை அப்பா என்று அழைக்க அவனுக்கு ஏனோ மனம் வரவில்லை.

ஒருநாள் அவன் வீட்டு கொல்லையில் விளையாடிக்  கொண்டிருந்தான். அப்போது அவனது அப்பா தொலைவில் நின்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனும் அருகில் சென்று என்ன என்று சைகையில் கேட்டான். அவர் ஒன்றுமில்லை சும்மா உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொல்லவும் அவனுக்கு அழுகை பீறிட்டது. அப்போது அவர் கொல்லைக்குள் வந்தார். கொடியில் காய்ந்து கொண்டிருந்த அவனது நீலநிற சட்டையை எடுத்து தனது பையில் அடைத்துக்கொண்டார். அவனும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலசமயம் மரத்தடியில் உட்கார்ந்து அந்த சட்டையை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பார் அவனது அப்பா. அப்போதெல்லாம் அவரை அப்படியே கட்டி அணைக்க தோன்றும் ஆனால் மனம் இடம் கொடுக்காது. ஒரு நாள் அவன் வகுப்பில் முதல் மாணவனாக தேர்வு பெற்று சான்றிதழுடன் பள்ளிக்கு வெளியே வந்தான். அங்கே தனது அப்பா நிற்பதை பார்த்ததும் அவரிடம் சென்று காட்ட விரைந்து சென்றான். ஆனால் அவர் அருகில் சென்றதும் ஏதோ அவனை தடுக்க அப்படியே கலங்கி நின்றான். அப்பாவும் வேறு ஏதோ சிந்தனையில் இருந்த மாதிரி அவனுக்கு தோன்றியது. உடனே அங்கிருந்து கண்ணில் நீர் வழிய வீட்டிற்கு ஓடிவிட்டான். இப்படி பலமுறை அவரை பார்க்கும் போதெல்லாம் ஏதோ சின்ன சின்ன மன நெருடல் அவனை வாட்டி வதைக்கும்.
அவரை வீட்டிற்கு கூட்டிப்போகும் அளவிற்கு அவனுக்கு தைரியமும் இல்லை. அம்மா மாமா என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. இவ்வாறாக தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, பாலிடெக்னிக்கில் பட்டயம் பெற்று சென்னையில் வேலையில் சேர்ந்தான். அங்கிருந்து அவனுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்று நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க அப்படியே செட்டில் ஆகிவிட்டான்.

இதற்கிடையில் அவன் சென்னையை சேர்ந்த லதாவை திருமணம் செய்து கொண்டான். திருமணம் முடிந்து அவனது ஊருக்கு மனைவியுடன் வந்து கோவிலுக்கு சென்றான். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது அவனது அப்பா தூரத்தில் நின்று இருகைகளை தூக்கி ஆசிர்வாதம் செய்வது போல் செய்தார்.அதை பார்த்ததும் அவனது கண்கள் கலங்கியது. கைக்குட்டையால் கண்களை துடைக்க அவனது மனைவி என்ன ஆயிற்று என்று கேட்க ஒன்றுமில்லை என்று சொல்லி சமாளித்தான். பிறகு அவன் மட்டும் தனியாக சென்று அப்பாவை பார்த்து நலம் விசாரித்து விட்டு அவருக்கு செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு வந்தான்.
அதன்பிறகு எப்படியோ அவரை மறந்தே போய்விட்டான்.

தனது அம்மாவையும் அமெரிக்கா அழைத்துச்சென்று தன்னுடனே வைத்துக்  கொண்டான். இருந்தாலும் தனது சிறுவயதில் இருந்து வந்த ஏக்கம் அவனுள்  குறையவில்லை. எப்படியாவது இந்த முறை அதை நிறைவேற்றியே தீர்வது என்ற முடிவோடுதான் வந்துள்ளான்.

ஆம், இந்த முறை எப்படியாவது தனது அப்பாவை தேடி கண்டு பிடித்து அவருக்கு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு அவரை உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். இப்போது இதை எதிர்க்க யாரும் இல்லை என்று தீர்மானம் செய்து தான் இந்தியாவிற்க்கே வந்துள்ளான். அதோடு அமெரிக்காவில் மனநலம் குன்றிய பெற்றோரை எப்படி அவர்களது உறவினர்கள் பராமரிக்கிறார்கள் என்று நன்கு தெரிந்து, தான் இப்படி தனது அப்பாவை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணி வருந்தாத நாளில்லை.

ரவியால் இருக்கையில் உட்கார முடியவில்லை. அவனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. எப்போது ஊருக்கு போவோம். போனவுடன் எப்படியாவது அப்பாவை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என திரும்ப திரும்ப மனதில் வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டிருந்தான். ரயில் இன்னும் அங்கேயே நின்றது. வெளியே சென்ற ஒரு பயணி உள்ளே நுழைந்ததும் அவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ரயில் புறப்பட என்று கேட்டான். அவரும் தெரியலைங்க. யாரோ ஒரு வயதான பெரியவர் ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார். அவரை இப்போதுதான் சக்கரத்தில் இருந்து வெளியே எடுத்தார்கள். பார்க்கவே படு கோரமாக இருக்கிறது. வயதான பெற்றோரை இப்படி அனாதையாக விடும் பிள்ளைகளை ஜெயிலில் போடவேண்டும் என்று புலம்பிவிட்டு சென்றார்.

ரயில் புறப்பட இன்னும் சற்று நேரம் ஆகும் என்றவுடன் ரவி வண்டியில் இருந்து இறங்கி கூட்டமாக உள்ள இடத்தை நோக்கி நடந்தான். எல்லோரும் கூடி நின்று அந்த பெரியவரின் சடலத்தை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தனர். ரவி அந்த கூட்டத்தின் அருகில் சென்றான். அங்கு தரையில் அந்த பெரியவரின் துணிப்பை கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. அதைப் பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டான். ஆம் அந்த பொருள்களில் தனது நீலநிற சட்டை கிடந்தது. அது இவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு தோன்றியது. கால்கள் நடுங்க கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே புகுந்து அந்த பெரியவரின் முகத்தை அருகில் பார்த்தான். வெளிச்சம் குறைவாக இருந்தாலும் தனது அடிமனதில் ஆழமாக பதிந்திருந்த அந்த முகம் தனது மூளையில் மின்னல் போல் வெட்டு வெட்டியது. தனது துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே அப்பாவின் மேல் விழுந்து அப்பா என்று கதறி அழுதான்.

இந்த பெரியவரை ரொம்ப வருசமா எனக்குத் தெரியும். அந்த ரயில்வே ஸ்டேஷனிலேயே காத்துக் கிடப்பார். எதுக்காக இங்கயே இருக்கீங்க என்று கேட்டால் தனது மகன் ரயிலில் வருகிறான் அவனை வரவேற்க என்று சொல்லுவார். இத்தனை வருஷம் காத்திருந்தவருக்கு இன்றைக்கு தன் மகன் வருகிறான் என்று தெரிந்துதான் இப்படி உசிரை இந்த ரயிலில் விட்டுவிட்டார் போலிருக்கு என்று யாரோ பேசியது ரவியின் காதில் விழுந்தது.

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...