**********மன்னிப்பாயா !!! **********
அப்போதெல்லாம், கிராமத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள
மாணவிகளில் ஒன்று அல்லது இரண்டு மாணவிகளே கொஞ்சம் வெள்ளையாக இருப்பார்கள்.
மற்ற பெண்கள் எல்லாம் சாக்லேட் கலரில் மிக அழகாகவும் பளிச்சென்றும்
இருப்பார்கள். இருந்தாலும் எல்லா மாணவர்களுக்கும் அந்த வெள்ளை கலர் பெண்கள்
மேல் தான் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர்களை பற்றிய செய்திகள் சேகரிப்பது,
வதந்திகள் பரப்புவது இவையே அவர்களின் முழு நேர பணியாக இருக்கும்.
நான் பள்ளியில் படிக்கும் போது மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும் போது சற்று
குள்ளமாகவும் மெலிந்தும் இருப்பேன்(நிஜமாத்தாங்க நம்புங்க). அதனால் எல்லா
பெண்களும் என்னுடன் மிக நெருக்கமான தோழமையுடன் பழகுவார்கள். அப்போது
ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒரு பெண் எங்கள் வகுப்பில் படித்தாள்.
எங்கள் வகுப்பிலேயே மிகவும் அழகு. அழகில் மட்டுமல்ல, கடவுள் எல்லாவற்றையும்
அவளுக்கு குறைவில்லாமல் கொடுத்திருந்தார். அவளுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப
அதிகம். ஒப்பனை அதிகம் செய்ய மாட்டாள். நீளமான கூந்தல் வேறு. அந்த காலத்தில்
லூஸ் ஹேர் விட்டு கட்டுவது ஆண்கள் மது அருந்துவதை போன்ற ஒரு குற்றம்.
இருந்தாலும் அவள் அப்படி தான் தினம் பள்ளிக்கு வருவாள். அவள் நடந்து வரும்
போது தெருவில் ஒரு அலங்கார தேர் வருவது போல் தான் இருக்கும். அவளது கால்
கொலுசு சத்தத்தின் சலசலப்பு மாணவர்களில் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும். முழு நீள
வெள்ளைப்பாவாடையில் அரைஅடிக்கு பச்சை நிற பட்டு பார்டரும், ஆரஞ்சு நிற
பூப்போட்ட தாவணியும் அவள் உடுத்தி வரும் போது , பெரிய துணிக்கடையில்
விளம்பரத்திற்காக நிற்கும் சிலிகான் சிலை போல ஜொளிப்பாள். அவள் சற்று
குனிந்தவாறு, வண்ணப்பாவாடை காற்றில் பறந்து வர, ஒத்தக்கல் மூக்குத்தி அவள்
புன்னகை கண்டு மின்னும் அழகில் அவளைப் பார்க்கும் எல்லா வயதினருக்கும் ஒரு
பரவசம் வராமல் போகாது.
அன்றும் அதே உடையில் தான் பள்ளிக்கு வந்திருந்தாள். அவளுடன் பேரூந்தில்
வரும் சக மாணவர்களில் ஒருவன் என்னிடம் வந்து அவளை பற்றி ஒரு செய்தியை சொல்லி
அதை வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் படமாக வரையுமாறு வற்புறுத்தினான். அந்த
செய்தி என்னவென்றால்.
பேருந்தில் வரும் போது ப்ரியாவும் பஸ் கண்டக்டரும் சிரித்து
பேசிக்கொண்டதாகவும், அவர் இவளது தோளில் கைபோட்டதாகவும் சொன்னான். எனவே இதை
அவளுக்கு சொல்லிக்காட்டவும், மற்றவர்களுக்கு முன் அவளை கிண்டல் செய்யவும்
அவளது உருவத்தையும் கண்டக்டர் உருவத்தையும் அருகருகே வரையுமாறு என்னிடம்
சொன்னான். நானும் அவளும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். இருந்தும் அப்போது
அவன் சொன்னதும் எந்த பின்விளைவுகளை பற்றியும் யோசிக்காமல் நானும் அதே மாதிரி
வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் கரும்பலகையில் வரைந்து விட்டேன். மதியம்
இடைவேளைக்கு பிறகு மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பிற்குள் நுழைய
ஆரம்பித்தார்கள். எல்லோரும் இந்த படத்தை பார்த்து ஒன்றும் புரியாமல் மற்ற
மாணவர்களுடன் விசாரித்து கொண்டிருந்தனர்.
ப்ரியா துள்ளலும் நடையுமாக சந்தோச புன்னகையுடன் வகுப்பிற்குள் நுழைந்தாள்.
கரும்பலகையில் உள்ள ஓவியத்தை பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டாள். மெதுவாக
நடந்து அவளது இருக்கையில் அமர்ந்தாள். அவளது முகம் சிவந்தது. அப்படியே
முகத்தை கையால் பொத்திக்கொண்டு மேஜையில் குனிந்து அழ தொடங்கினாள். அப்போதே
நான் செய்த அந்த செயல் எவ்வளவு தூரம் அவளை பாதித்திருக்கும் என என்னால் உணர
முடிந்தது. இளமை பருவத்தில் நாம் செய்யும் செயல்கள் மற்றவரை எந்த அளவுக்கு
பாதிக்கும் என உணர முப்பத்தி மூன்று வருடம் ஆகும் போல.
அவளது கண்ணீரை பார்த்ததும் என்னுள் ஏற்பட்ட குற்ற உணர்விற்கு அளவேயில்லை.
சற்று நேரம் கழித்து அவளது அழுகை அடங்கியவுடன் அருகே சென்று அமர்ந்தேன்.
அவளது இருக்கை என்னுடைய பெஞ்சுக்கு முந்தியதுதான் என்றாலும் யாரும் கேட்காத
வண்ணம் அவளிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டேன். அவள் இந்த அளவு
பாதிப்பு அடைவாள் என நான் நினைக்கவில்லை. நீண்ட நேரம் யோசித்து பிறகு பேச
ஆரம்பித்தாள். அவள் பேசியது அப்படியே ஞாபகம் இருப்பதால் அதை அப்படியே
எழுதுகிறேன். இதோ..
“நண்பனே (என் பெயரை போட மனம் ஒப்பவில்லை) நீ என்னைப்பற்றி இவ்வளவு
தெரிந்திருந்தும் இந்த மாதிரி படத்தை வரைந்தது எனக்கு மிக்க வேதனையை
தந்துவிட்டது. மற்றவர்கள் செய்திருந்தால் இந்த அளவு பாதித்திருக்காது.
அவர்கள் உன்னிடம் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. நான் அந்த
கண்டக்டரிடம் பேசியது உண்மைதான். ஆனால் அவர் என் தூரத்து உறவினர் மற்றும்
எனக்கு அண்ணன் முறை வேறு. அவரோடு இணைத்து படம் வரைந்ததும் என்னை மிகவும்
பாதித்து அழவைத்துவிட்டது. உண்மையில் நான் அவரிடம் என்ன பேசினேன் என்றால் என்
வீட்டில் எனக்கு நடந்து கொண்டிருக்கும் பாலியல் கொடுமை பற்றியும் அதிலிருந்து
எப்படி வெளியேறுவது என்றும் ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். ஆம் என் வீட்டில்
உள்ள ஒரே ஆண்மகன் என்னுடைய தமக்கையின் கணவர். அவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு
வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் அவன் எப்போதும் என்னை தவறான
கண்ணோட்டத்தோடு பேசுவதும் பாலியல் கொடுமை செய்து கொண்டும் உள்ளான். அது
மட்டுமன்றி என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறான்.
என் அம்மாவிடமும், அக்காவிடமும் இது பற்றி சொல்லி அவர்களை மிரட்டுகிறான்.
எங்களுக்கு அவனை விட்டாலும் போவதற்கு போக்கிடம் இல்லை. எனவே தினமும் இந்த
நரகவேதனை அனுபவித்து வருகிறோம். இதை பற்றித் தான் நான் அவரிடம் பேசிக்கொண்டு
வந்தேன் என்று சொல்லி நிறுத்தினாள் .”
இதை கேட்டவுடன் என் மனம் அப்படியே உறைந்துவிட்டது . அவளுக்கு என்ன ஆறுதல்
சொல்லுவது என்றே தெரியவில்லை. அப்படியாக அந்த நாள் முடிந்தது. அதன் பிறகு
நானும் பள்ளி முடிந்து கல்லூரி சென்று விட்டேன். அவள் என்ன ஆனால் என்று
தெரியாது. சுமார் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவளை எங்கள் ஊர் பேரூந்து
நிலையத்தில் பார்க்க முடிந்தது. அப்போது அவள் தன் இரண்டு குழந்தைகளுடன்
பேருந்துக்காக காத்திருந்தாள். அவளிடம் சென்று எப்படி இருக்கிறாய் என்று
விசாரித்தேன். அவள் தனது அக்காவின் கணவரையே திருமணம் செய்து கொண்டதாகவும்,
தற்போது இரண்டு குழந்தைகளுடன் அவனுடனே வாழ்வதாகவும் கூறி வருத்தப்பட்டாள்.
அவளது அக்காவும் அவளுடனே வாழ்வதாக கூறினாள். விதியை நினைத்து நொந்து கொண்டு
அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை சொல்லி விடை
பெற்றேன்.
இப்போது அவர் எங்கு வசிக்கிறார் எப்படி இருக்கிறார் என்றெல்லாம் தெரியாது.
இருந்தாலும் அன்று அவரை அழவைத்த நிகழ்வு மட்டும் எப்போது அவரைப் பற்றிய
நினைவுவந்தாலும் என் மனம் வருந்துகிறது. அவரிடம் அதற்காக மீண்டும் ஒருமுறை
மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.
#வாஞ்சிவரிகள்#வலிகள்
No comments:
Post a Comment