Friday, July 24, 2020

கொரானா !!!

கொரானா !!!

கவிதை: 1


இன்று திறக்கப்படும்...
நண்பருக்கெல்லாம்
தகவல் சொல்லப்பட்டது
வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும்
பத்திரமாய்
பதுக்கிவைத்திருந்த
அழுக்குக்கைலியைத் தேடி
அலைந்து அழுத்து
துவைத்து வைத்த கூடையில்
தூங்குவதை தட்டியெடுத்து
தரையில் புரட்டி அழுக்காக்கி
அழகாக உடுத்தப்பட்டது
அனாதையாக கிடந்த
அறுந்த செருப்புகளில்
பொருத்தம் பார்த்து
ஜோடி சேர்த்து
நகம் வெட்டாத விரல்களில்
நலுவாமல் மாட்டப்பட்டது
குட்டிச்சுவரில் சாய்ந்து
பஞ்சராகிக் கிடக்கும்
பழைய சைக்கிளில்
பம்ப் வைத்து காற்றடித்து
ஒருவழிப் பயணத்திற்கு
தயார் செய்யப்பட்டது
கால்கதவு திறந்து
பால்வியாபாரம் செய்யும்
தெருமுனைப் பெட்டிக்கடையில்
பாக்கெட் ஊறுகாய் வாங்கி
பத்திரமாய் பதுக்கப் பட்டது
ஊரடங்கிலும்
முடங்காமல் பல
இடங்களில் பாத்திரம் தேய்த்து
பிள்ளைகள் பசிபோக்க
வைத்திருந்த பணம்
வாரிச்சுருட்டப் பட்டது
அண்டை மாநிலங்கள்
தரவரிசையில் முன்னேற
திற நம் மாநிலத்திலுமென
திறப்புவிழாவிற்கு நாள் குறிக்க
கொரோனா மறந்து போனது
குடும்பம் மறந்து போனது
உயிர்பயமும் விட்டுப் போனது
குடிமக்களின் ஊர்வலம்
நெடிதாகப் போகின்றது
படிதாண்டிய பாமரனின்
குடிவேண்டிய பயணம்
டாஸ்மார்க்கை நோக்கி...!!!!

கவிதை: 2


அழைப்பு மணி
அடித்துக்கொண்டே
இருந்தது
அருகிலிருந்தும்
யாரென்று பார்க்க
தோன்றவில்லை

ஊரடங்கில்
வீட்டில்
முடங்கிக்கிடந்து
முடமாகிப்போனது
மனதும்

ஹாலில் கிடக்கும்
இருக்கைகள் கூட
நாள் முழுவதும்
சுமையை தாங்கமுடியாமல்
இரைச்சலோடு
எரிச்சலாகிப் போனது

இடைவெளியின்றி
ஒலித்து
தொலைக்காட்சியும்
தொல்லை தாங்காமல்
அடங்கிப் போனது

அடுத்தடுத்து
சமைத்து
அடுப்படியும்
அலுத்துப் போனது

திறக்காத
வெளிக்கதவில்
கூடுகட்டி
குடித்தனம்
செய்ய ஆரம்பித்து விட்டது
குளவி

துரத்திவர
தைரியமில்லையென
அறிந்து
கொல்லையில்
திரியும் முயலுக்குக் கூட
பயம்விட்டுப் போனது

கராஜில் உறங்கும்
கார்களும்
ஓட்டமில்லாமல்
உடல்பருத்து
தூசிபடிந்து போனது

தகவல் சொல்ல வந்த
கடிதமெல்லாம்
தபால்பெட்டியில்
தஞ்சமடைந்து
விடுதலைக்காக
காத்துக் கிடக்கிறது

சுவருக்குள்
சுருண்டு கிடக்கும்
உயிர்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும்
நாளுக்காக
காத்திருக்கிறது

காலம் வெல்லுமா
காலன் வெல்லுமா
காலம்தான்
சொல்லவேண்டும் பதில்..!!!

கவிதை: 3


வீட்டில் முடங்கி இருப்பவர்க்கு
சங்க இலக்கிய அறிவுரை..!!!

பனிரெண்டாம் நூற்றாண்டில்
நனிசிறக்க வாழ்ந்து
தமிழுக்கு அணிசேர்த்த
தமிழன்னை ஔவையாரின்
பொன்னான வரிகளில்
"பொல்லா நோய்க்கு இடம் கொடேல்"
பொல்லாத நோயென்றால்
கொல்லாது காத்திடவே
தொல்லையின்றி தப்பிட
தொலைவாகச் சென்றிடுவீர்
என்றுரைத்த அறிவுரையை
நமக்குரைத்த அறவுரையாய்
கடைபிடித்து வாழ்ந்திடுவோம்
தொற்றுநோயை விரட்டிடுவோம்

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"
தமிழ் தந்த பலமொழிக்கு
சிரம் தாழ்த்தி பணிந்திடுவோம்
அளவுக்கு அதிகமாய் உண்ணாமல்
அளவோடு அன்னம் உண்டு
வளமோடு வாழப் பழகிடுவோம்

வலைத்தளமும் சமூகத் தளமும்
கணினி விளையாட்டும் திரைப்படமும்
அளவோடு பார்த்திடுவோம்
வள்ளுவரின் வழிநடந்து
உள்ளுவது உயர்ந்திடுவோம்
உண்ணுதலின் முறையறிந்து
உண்ணுவதை மாற்றிடுவோம்
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்"-குறள்
குறள் சொல்லும் போதனையை
பொருள் உணர்ந்து கடைபிடிப்போம்

முன் உண்ட உணவெல்லாம்
நன்றாக செறித்த பின்னே
உன் அடுத்த உணவை உண்டு
அருந்தும் அளவை மனதில் கொண்டால்
மருந்து ஏதும் தேவையில்லை

"அற்றம் அறிந்து கடைபிடித்தல் மாறல்ல
துய்க்க துவரப் பசித்து" -குறள் 944

உண்ணும் உணவு செரித்திட
உன்னுடலும் உணவிற்கு ஒத்துப் போக
உன்னுள் நீயும் அறிந்த பின்னே
பசித்தால் மட்டுமே புசிக்கும்
பழக்கம் நமக்கு வேண்டுமென்ற
வள்ளுவம் உரைத்த குறளிதுதே
உள்ளத்தில் நாமும் கடைபிடித்து
உள்ள உளைச்சலை விரட்டிடுவோம்
இல்லத்தில் இனிதே வாழ்ந்திடுவோம்


கவிதை: 4


செத்தவரைத் தெரியாது
சொந்தங்களும் அறியாது
சுற்றிவைத்த துணியிலே
சுற்றிவரும் பிணங்களாய்
சமூக வலைத் தளங்களில்
வலம் வரும் சடலங்களாய்
கற்றவரும் அதிலுண்டு
கல்லாதவரும் அதிலுண்டு
இல்லாதவரும் அதிலுண்டு
இருப்பவரும் அதிலுண்டு
மருந்தாளரும் அதிலுண்டு
மருத்துவரும் அதிலுண்டு

கம்யூனிசத்தில் பிறந்து
கழனியெலாம் சுற்றும்
கம்யூனிசக் கிருமிக்கு
எம்மதமும் ஒன்று தானே
எம்மனிதரும் சமம் தானே
பணத்தைப் பகிர்ந்து பழகியதால்
பிணத்தைப் பகிர்ந்து கொள்கிறதோ
தொற்றுக் கிருமி தாக்கி
கற்றுக்கொடுக்கும் பாடமிது

சுற்றுப்புறத் தூய்மை வேண்டும்
சுற்றத்தோடு வாழ வேண்டும்
கற்றுவிட்டோம் என்றெண்ணி
விற்றுவிட்ட நற்பண்புகளை
கடைபிடிக்கும் காலமிது

பணம் மட்டும் இருந்துவிட்டால்
பிணமும் வாய் திறக்குமென
குணம் கெட்டுத் திரிந்தவர்க்கு
சினம் கொண்ட கிருமிக்கூட்டம்
சீனத்தில் இருந்து சீறிவந்து
இனத்தையே அழித்துச் சிதைத்து
வனமாக்கிச் சொன்ன பாடம்

வாய்மொழிந்து சேதி சொல்ல
வாய்பொத்தி வளர்ந்த சமூகம்
வீட்டிற்குள் நுழையுமுன்னே
நீட்டிடுவர் செம்பில் தண்ணீர்
வாசல் தெளிக்க சாணம் கரைத்து
விஷக்கிருமிகளைத் தடுத்த வியூகம்
குளத்துநீரை குடித்த போதும்
காய்ச்சிக் குடித்து வளர்த்த தேகம்

காலைமடித்து கோரை விரித்து
தரையில் அமர்ந்து உணவு உண்டு
முக்கால் வயிறு நிறைய கால் உதைத்து
கால்வயிறு கரைக்கவென விட்டிடுவோம்
மென்று தின்ன ஈற்றில் நிற்கும் கிருமிகளை
வெற்றிலை சுண்ணாம்பில் அழித்திடுவோம்
கட்டாந்தரையில் பாயில் படுத்து
தண்டுவடத்தை தடவிக் கொடுத்திடுவோம்
குத்தவைத்து கால்வாய் பக்கம் சென்று
முழங்கால் வலியை விரட்டிடுவோம்

பழமையென்று தவிர்த்தவற்றை
பலன் அறிந்து புகுத்திடுவோம்
முன்னோர் சொன்ன பாடத்தை
கண்ணாய் பேணி படித்திடுவோம்
இன்னோர் கிருமி வந்தாலும்
இந்நாள் போலே விரட்டிடுவோம்


கவிதை: 5


முன்னாள் செய்வினையோ
என்னுள் அறியாது செய்த
இந்நாள் வினையிதுவோ
இந்நோய் வந்ததையா
என்காயம் வலிக்குதையா

என்தோள் தாங்கலையே
முன்போல் முடியலையே
புண்போக்க முடியாமல்
பண்பாடி வேண்டுகிறேன்
பணிவோடு வணங்குகிறேன்

பொன்னாற் மேனியனே
பொன்திரி சடையனே
புண்ணியனே புனிதனே
உன்னடி சரணடைந்தேன்
அன்னையாய் எனைக் காக்கும்
உன்னையே வேண்டுகின்றேன்
என்நோய் தீர்த்திட
உன்செய் பார்த்து நிற்கும்
உன்சேய் எனைக் காத்து
நன்செய் நாயகனே
நான் உன் சேவகனே..!!!!

மூலப்பாடல்:
#2-063 இரண்டாம் திருமுறை / எண்ணத் திரங்கல்
முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

கவிதை: 6


ஓசோன் ஓட்டையை
அடைக்க வந்த ஈசனோ
தேசத்தின் ஓட்டையை
அடைக்க வந்த மேசனோ
பண்பாட்டின் பெயரில்
பன்னாட்டு வணிகத்தில்
சேர்ந்து கிடக்கும் குப்பையை
பகிர்ந்து கொடுக்க வந்த ரேசனோ

விண்வெளியை சுத்தமாக்க
விமானத்தை நிறுத்தி வைத்தாயோ
மண்வெளியை சுத்தமாக்க
வாகனத்தை நிறுத்தி வைத்தாயோ
கரைபடிந்த கரங்களை
நுரைகொண்டு கழுவ வைத்தாயோ
புரைபடிந்த மனங்களை
சிறைகொண்டு சிணுங்க வைத்தாயோ

வீட்டுப்பாடம் வேண்டாமென்றோரை
வீட்டிலேயே பாடம் படிக்க வைத்தாயோ
கூட்டுக் குடித்தனம் வேண்டாமென்றோரை
கூட்டிலடைத்து பாடம் படிக்க வைத்தாயோ
வீட்டுவேலை செய்வோரை மதிக்காதவரை
வீட்டில் அடைத்து உணர வைத்தாயோ
நோட்டை எறிந்தால் நடக்குமென்போரை
மூட்டை உடைத்து வேலை செய்ய வைத்தாயோ

மதவெறி பிடித்த மனிதரை ஒடுக்க
நிதம் நடக்கும் கூட்டத்தை நிறுத்தி வைத்தாயோ
இனவெறி பிடித்த ஈனரை ஒழிக்க
பணமுடை தந்து பயம் கொள்ள வைத்தாயோ

புதியோரை வழிநடத்தும்
மதியோரென அறிந்தும்
முதியோரைக் கொல்வது
மதியோ இல்லை சதியோ
விதிவந்தால் இறந்திட
கதியற்றுக் காத்திருக்கும்
முதியோரை பலியாக்கும்
சதியுனக்கு கற்றுத் தந்தது யாரோ

உயிர்க்கொல்லி எனத் தெரிந்தும்
இதயத்தில் இடம் தந்து
இருமலால் தலாட்டுப் பாடி
இன்னல்களைத் தாங்குவோரை
இறந்திடச் செய்வது முறையோ

நேசல் வழி வந்து
ஈசல் போல் வாழ்ந்து விட்டு
வாசல் வழி போய்விடு
தேசத்தை முன் போல வாழவிடு


கவிதை: 7


கொரானா வந்தது
மரண பயம் தந்தது
கரங்கள் இணைவதை
கத்திரித்துச் சென்றது
முத்தம் கொடுப்பதை
முறித்துச் சென்றது

நித்தம் குளித்திடும்
புத்திமதி சொன்னது
சுத்தமாய் இருப்பதன்
சூட்சுமத்தைச் சொன்னது
குடும்பத்தினர் கூடி
நடுவீட்டில் அமர்ந்து
நன்றாகப் பேசி
ஒன்றாக மகிழ்ந்த
பழங்கால நினைவுகளை
இக்கால மாந்தரின்
மதியினில் சொன்னது

கூட்டாய் சேர்ந்து
கூட்டும் பொறியலும்
வீட்டுக் கொல்லையில்
நாட்டுக் கோழி பிரியாணியும்
பாட்டும் கேலியும்
பாட்டில் சகிதமாய்
உண்டு மகிழ்ந்திடும்
நன்மையைச் செய்தது

வலைத்தளத்தில் மூழ்கி
வாழ்வைத் தொலைத்து
மனநல மருத்துவமனையில்
மனதைத் திருத்திட
மருந்துதேடி அழைந்தவரை
வலைத்தளத்தின் நன்மையை
உலகுக்கு உணர்த்தி
அஞ்சல்வழிக் கல்வி போல
ஆன்லைன் கல்வியை
மாணவருக்குத் தந்து
தொழில்நுட்பத்தின் பயனை
காட்டிட வந்தது

சிக்கலில் வாழ்ந்தோரை
சிக்கனமாய் வாழ்ந்திட
சில்லறைச் சாமான்களும்
சில் அறைச் சாமான்களும்
சில்லறையாய் வாங்கிட
சில்லறை இருந்தும்
இருப்பு இல்லாமல்
காத்துக் கிடக்க வைத்து
படிப்பினை தந்தது

பணியென்னும் பிணியில்
பணம் பண்ணும் பணியில்
குணம் எல்லாம் மறந்து
பிணமாக அலைந்து திரிந்து
இனம் மறந்து இருந்தோரை
குடும்பத்தோடு இணைத்து
கூட்டுச்சிறையில் அடைத்து
பாசமென்னும் உணர்வை
நேசத்தோடு அனுபவிக்கும்
உணர்வினை ஊட்டியது
உன்னால் இறந்தவர் சிலர்
உன்னால் பிறந்தவர் பலர்
வந்த வேளை முடிந்தது உனக்கு
வந்த வழி போவதேயுன் கணக்கு

கவிதை: 8


கரோனா இன்று...
திகைக்கும் நெஞ்சோடு
குகைக்குள் ஒளிந்து
போர்க்கால நடவடிக்கையாய்
போர்வைக்குள் பதுங்கி
தற்காலம் மறந்து
கற்காலம் உணர்ந்தது
மரணத்தின் வலியுணர
கரோனாவிற்குப் பயந்து
திரளான கூட்டம் தவிர்த்து
நிரலெல்லாம் நிறுத்தி வைத்து
நிகழ்ச்சிகள் இல்லாமல்
மகிழ்ச்சிகள் தொலைத்து
காய்ச்சல் வந்தவர்க்குத் துணையாக
வராதவரும் தனிமைச்சிறையில்
முடங்கி வீட்டில் கிடக்க
அடங்கிப் போனது நகரம்
உற்றார் உறவினரோ
தாய்நாட்டில் தனித்திருக்க
பெற்றோர் உடன்பிறப்பும்
தாய்மண்ணில் தவமிருக்க
தொல்லைகளைத் தடுக்க
எல்லைகளோ மூடிக் கிடக்க
மூச்சுவிடப் போராடும்
மூத்தவரும் நோயுற்றவரும்
மூச்சினைப் பிடித்து வைக்க
பேச்சிலே கயிறுகட்டி இழுக்க
காலனுடன் பேச்சுவார்த்தை நடத்தி
காலத்தை கழித்திடும் மக்கள்
பள்ளிகள் மூடிவிட
கணினிக் கட்டுப்பாடு அவிழ்ந்து
கணினியிலே பாடம் நடக்க
செய்வதறியாது பெற்றோர் தவிக்க
திண்ணைப் பள்ளியின் ஞாபகம்
தினம் வந்து போகிறது இங்கே
வீட்டில் இருந்து வேலை செய்து
வீட்டுவேலையும் சேர்த்து செய்து
செய்யும் வேலையின் சூட்சுமத்தை
மனைவியும் மறைந்து ரசித்திட
இதற்கா இவ்வளவு சம்பளமென
இடித்துக் கேட்டு இம்சை செய்ய
நடித்துப் பழகிய ஆண்களுக்கு
பிடித்த கணங்களாய் ஆனதிங்கே
....இன்னும் வரும்

கவிதை: 9


உலகம் முழுவதும்
வீட்டுச் சிறைக்குள்..
சாலையில் யாருமில்லை
ஆலையில் யாருமில்லை
வேலையில் யாருமில்லை
கல்விச்சாலையில் யாருமில்லை
கோவிலில் பூஜையில்லை
வாகனங்கள் ஓடவில்லை
விமானங்கள் பறக்கவில்லை
வர்த்தகம் நடக்கவில்லை
விளையாட்டு ஏதுமில்லை
குடிக்க நீர் கிடைக்கவில்லை
கைதுடைக்கும் களிம்பு கடையிலில்லை
பாலும் பழமும் தீர்ந்து போச்சு
காய்ச்சல் மாத்திரை முடிந்து போச்சு
வருமா வராதா என்று ஆச்சு
கரோனா கரோனா என்றே பேச்சு
கூட்டுக் குடும்பம் மாறிப் போச்சு
வீட்டில் சண்டை நாறிப் போச்சு
நாட்டில் நடக்கும் நிலைமை அறிய
வீட்டில் தினமும் செய்தி பார்த்து
கூட்டில் அடைந்து வாழும் வாழ்க்கை
வீட்டில் சிறைக்குள் உலகம் இன்று...

கவிதை: 10


கரோனா!!!
சீனமண்ணில் பிறந்து
ஈனமில்லாது வளர்ந்து
இனமெல்லாம் அழித்து
பிணமாக்கிக் குவித்து
வனமெல்லாம் சிதைத்த
மனமில்லாத மாந்தரை
உன்னுள்ளே இழுத்து
மண்ணுள்ளே புதைக்க வந்தாயோ
பணமென்னும் மாயையில்
குணமிழந்த மேலைநாட்டினரை
சினம் கொண்டு ஒழிக்கும்
சீனரின் சக்கராயுதமோ நீ
வேளை சோறு உண்ண
வேலைப் பளுவில் சிக்கி
ஓய்வினை மறந்து விட்ட
உழைக்கும் வர்க்கத்திற்கு
நோய்கொண்டு தாக்கி
ஓய்வினை கொடுக்க வந்த
மெய்காக்கும் கிருமியோ நீ
விமானங்கள் மலிந்து
விண்வெளியில் பறந்து
வான்வெளியில் திரிந்து
மாசுபடிந்து போனதை
தூசுதுடைக்க வந்த
ஏசுநாதரின் தூதுவனோ நீ
குடும்பத்தை மறந்து
கடமையென்ற பெயரில்
இடம்பெயர்ந்து வாழும்
மடமான மக்களுக்கு
குடும்பத்தின் அருமையை
உணர்த்திட வந்த
திருமாலின் திரிசங்கோ நீ
நிறவெறி கொண்டு
பிறமத த்தினரை இகழ்ந்து
மதமென்ற பெயரில்
மதம்பிடித்து மற்றவரை அழிக்கும்
மதவெறிக் கூட்டத்தை
வதம் செய்ய வந்த
நபிகளின் நண்பனோ நீ
பௌத்த மதத்தில் பிறந்து
பௌத்த மதத்தை அறிந்த நீ
உயிர்வதை கூடாதெனும்
உயரியக் கொள்கையை மறந்து
உயிர்களைக் கொல்வது நியாயமா
மேலைநாடுகளை தாக்கினால்
தடுப்பு மருந்தால் தாக்கிடுவர்
தடுப்பேதும் இல்லாது தவிக்கும்
ஏழைநாடுகளை தாக்குவது தகுமா
கோழையில் ஒளிந்து பரவி
கோழையாக மறைந்து தாக்காமல்
வீரமாக வெளிவந்து முகம் காட்டு
ஈரமான காற்று முடியும் போது
சோரம் போகப் போகிறாய் மாண்டு

கவிதை: 11


கான்கிரீட் ஊசிகள் துளைத்து
காற்று மண்டலமே
ஓட்டையான அவலம்
அண்ணாந்து பார்த்தும்
உச்சியெட்ட முடியாமல்
கழுத்துடைந்து போகும்
மேகத்திற்கே
வேகத்தடை போட்டு
வேகத்தைக் குறைத்து
மேலைநாட்டு மோகத்தை
திணிக்கும் மாநகரம்

இன்று காலனின் பிடியில் சிக்கி
அலங்கோலமாய் கிடக்கிறது 
விலை கொடுத்தாலும்
வாங்க முடியாத உயிர்கள்
சாலையோர சந்நுகளில்
ஓலைப்பெட்டிக்குள் ஒளிந்து
கிடங்குகளில் வரிசையில்
முடங்கிக் கிடங்கும் சவங்கள்
அடங்கிப்போன உயிர்களை
அடக்கம் செய்யவும் ஆளின்றி
நடக்கும் பாதையெல்லாம்
கிடக்கும் பரிதாபம்

மருத்துவனைக்கு அனுப்பிவைத்த
உறவுகளின் உடல்நலத்தை
தொலைவிலிருந்தே பார்த்து
தொலைபேசியில் பேசும்
நிலையற்ற நிலைமை
உயிர்பிரிந்த தகவலை
குறுஞ்செய்தியில் அறிந்து
சடலம் கூடக் காணாமல்
சடங்கு நடத்தும் உறவுகள்

ஐரோப்பாவை ஒப்பிட்டு 
அமைதியாகும் அமெரிக்கா 
இறந்தவரின் எண்ணிக்கை
இறங்குமுகமாக வேண்டி
இருட்டறையில் ஒளிந்நு
இறைவனிடம் வேண்டும்
இறையியல் விஞ்ஞானிகள் 
நிலவுக்கும் செவ்வாய்க்கும்
நேரில் சென்று பார்த்தவர்கள்
நிலத்தினை அழிக்கும்
சீனக்கிருமியை ஒழிக்க வழிதேடி
விழிபிதுங்கி நிற்கும் விபரீதம்

கருவூலத்தைக் காலிசெய்து
வல்லரசுகளை வறுமையாக்கி
வாரிசுகளை வதம்செய்து
மரணவோலத்தை அரங்கேற்றும்
கொரோனாவின் கோரதாண்டவம்

உலக வணிகத்தின் தலைநகரம்
உலவும் பிணியிலிருந்து மீண்டுவந்து
உயர்ந்து நிற்கும் தினத்தைக் காண
உழைத்திடுவோம் இனத்தை மறந்து
சமூக இடைவெளி கடைபிடித்து
சாகும் உயிர்களுக்குத் தடையிடுவோம்

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...