Friday, July 24, 2020

அம்மாச்சி டெர்ரி




நான் நியூஜெர்சியில் பிரின்ஸ்டன் நகரில் வேலை செய்யும் காலத்தில் அங்கு அலுவலக கட்டிடத்திலேயே ஒரு கேண்டீன் இருந்தது. அங்கு தினமும் எட்டு வெள்ளிக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். நான் தினமும் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து போய்விடுவது வழக்கம். அதனால் அந்த எட்டு வெள்ளிக்கு தினமும் பிள்ளைகளுக்கு சாக்லெட், குக்கீஸ், பழங்கள், பழரச பானங்கள் போன்றவற்றில் ஏதாவது வாங்கிச் செல்வது வழக்கமாகி விட்டிருந்தது.


அந்த கேண்டீனில் கேஷ் கவுண்டரில் சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவர் வேலை பார்த்தார். அவர் பெயர்கூட எனக்குத் தெரியாது. அவர் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பைப் பார்க்க முடியாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல இருப்பார். எல்லோருக்கும் வாங்கிய சாமான்களை கணக்குப் பார்த்து எவ்வளவு என்று சொல்லும் போதே எவ்வளவு கறாராக இருக்கிறார் என்று சக நண்பர்கள் என்னிடம் கூறக் கேட்டிருக்கிறேன். எட்டு வெள்ளிக்கு மேலே இருந்தால் அந்த மீதியை கட்டிய பிறகுதான் சாமான்களை எடுத்துச் செல்ல விடுவார்.


நான் முதல் நாள் அவரை பார்த்த போது எனக்கும் மனதில் அவரைப் பற்றி அவ்வாறே தோன்றியது. ஆனால் அவரை கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ அவரைப் பற்றி ஒருவிதமான விவரிக்க முடியாத எண்ணம் தோன்றியது. அவர் எதற்கோ ஏங்குவது போல உணர முடிந்தது. அடுத்த நாள் முதல் அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் லேசான புன்முறுவல் செய்ய ஆரம்பித்தார். நானும் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். இவ்வாறு தினம் புன்னகைகளை பரிமாறிக் கொண்டவாறு நாட்கள் சென்றன. இருந்தாலும் என் மனதில் அவருக்குள் ஏதோ இனம் புரியாத சோகம் இருப்பதாக தோன்றிய வண்ணம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எனக்கு மட்டும் எப்போதும் எட்டு வெள்ளிக்கு மேல் சொல்ல மாட்டார். சில சமயம் நானும் என் சக நண்பரும் ஒரே சாமான்களை எடுத்திருந்தாலும் எனக்கு மட்டும் எட்டுக்கு மேல் சொல்ல மாட்டார். நானும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவர் தவறாக கணக்கு பண்ணியிருக்கலாம் என்று நினைத்தேன். என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமென்றே பத்து வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் எடுத்து அவரிடம் சென்றேன். ஆனால் அன்றும் அவர் எட்டு வெள்ளி என்று சொன்னதும் எனக்கு விளங்கி விட்டது. அவர் தெரிந்தேதான் எனக்காக செய்கிறார் என்று. அவர் எதற்காக எனக்கு மட்டும் அப்படி செய்ய வேண்டும் என எனக்கு இன்று வரை தெரியவில்லை. பிறகு ஒருநாள் நான் அவரை கடந்து செல்லும் போது என்னை அழைத்தார். அவருக்கு என் பெயர் கூடத் தெரியாது. அவர் அழைத்ததும் அருகில் சென்றேன். அவர் தன் பையிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து என்னிடம் நீட்டினார். இதில் நானே என் வீட்டில் செய்த கேக் உள்ளது. உனக்காக எடுத்து வந்தேன், சாப்பிடு என்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை எடுத்துக் கொண்டு போய் நானும் என் நண்பர்களும் சேர்ந்து சாப்பிட்டோம். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி உன்னிடம் மட்டும் இப்படி பாசமாக நடந்து கொள்கிறார் என புரியவில்லை என்று புலம்பினர். எனக்கும் அது புரியாத புதிராகவே இருந்தது. இது மாதிரி அடிக்கடி அவர் வீட்டில் செய்யும் கேக், ஸ்வீட் இவைகளை எனக்கு எடுத்து வந்து தருவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாச்சியை பார்ப்பது போலவே தோன்றியது. ஒருநாள் அவரை பார்க்காவிட்டாலும் ஏதேதோ எண்ணம் வந்தவண்ணம் இருக்கும். அதேபோல் நான் போகாத நாட்களில் அவர் என் நண்பர்களிடம் என்னை எங்கே என்று விசாரிக்க மறப்பதில்லை. நான் அவருக்கு எதுவும் திருப்பித் தந்ததில்லை. இப்படியாக சில வருடங்கள் கழிந்தது.


ஒரு நாள் வழக்கம் போல கேண்டீனுக்கு போனேன். அன்று அவர் அங்கு இல்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண்மணி இருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரிக்க கேண்டீன் உரிமையாளரைத் தேடினேன். என்ன ஆயிற்று அவருக்கு நேற்று கூட வந்திருந்தாரே என என் மனம் கவலைகொள்ள அன்று முழுவதும் அவரைப்பற்றிய எண்ணங்களோடு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அந்த நாள் கழிந்தது. அடுத்த நாள் சற்று முன்னராகவே கிளம்பி கேண்டீனுக்கு சென்றேன். செல்லும் வழியெல்லாம் இன்று அவர் திரும்ப வந்திருக்க வேண்டும் என இறைவனை வேண்டியவாறு பதைபதைப்புடன் நடந்து கேண்டீனை அடைந்தேன். அவரது இருக்கையில் வேறொருவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போனது. கேண்டீன் உரிமையாளரைத் தேடி ஒருவழியாக அவரைப் பிடித்தேன். அவரிடம் எங்கே அந்த பெண்மணி என்று விசாரித்தேன். அவர் இனிமேல் வரமாட்டார் என ஒருவரியில் சொல்லிவிட்டு நகர்ந்தார். சரி அவர் வேறு எங்காவது வேலையில் சேர்ந்திருப்பார் என்று மனதை தேற்றிக் கொண்டேன். இருந்தாலும் இந்த தள்ளாத வயதிலும் வேலை செய்துதான் இருக்க முடியும் என்ற நிலையில் உள்ள வயதானவர்கள் மீது ஒருவித பரிவும் அரசாங்கத்தின் மீது கோபமும் வந்தது. வயதான காலத்தில் நாம் நிச்சயம் நமது தாய்நாட்டிற்கு போய் விடவேண்டும் என எனக்கு நானே பேசிக் கொண்டேன். அவரைப் பற்றி வேறு யாரிடம் விசாரிப்பது என்ற எண்ணத்தோடு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்தேன். அன்று ஏனோ எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. ஒருவித கவலையுடன் நடந்து வந்து என்னுடைய இருக்கையை அடைந்தேன். வரும் வழியில் என் நண்பன் மறித்து உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா மிகவும் சோர்வாக தெரிகிறாயே என கேட்டான். அவனிடம் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன்.


எனது கணினியை திறந்தேன். வழக்கம் போல அலுவலக மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன்.புதிதாக வந்திருந்த அஞ்சல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மின்னஞ்சல் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த மின்னஞ்சலில் இருந்த லிங்கை வேகமாக கிளிக் செய்தேன். அன்று ஏனோ திடீரென இணைய இணைப்பு மிகவும் மெதுவாக இருப்பது போல தோன்றியது. அந்த ஒரு சில வினாடிகள்  கூட எனக்கு ஒரு யுகமாக தோன்றியது. அந்த இணையப் பக்கம் முழுமையாக என் கணினித் திரையில் வந்திருந்தது. அந்த பக்கத்தில் அந்த கேண்டீன் பெண்மணியின் புகைப்படம் என்னைப் பார்த்து சிரித்தபடியே இருந்தது. அதை பார்த்ததும் என் விழித்திரையில் இருந்து மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. அதில் எழுதியிருந்த வாசகத்தை படித்தேன்.


“ சில வருடங்களாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நம்முடைய கேண்டீனில் பணியாற்றி வந்த திருமதி டெர்ரி நேற்று காலமாகி விட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வரும் ஞாயிறு அன்று கிறித்துவ தேவாலயத்தில் நடைபெறுகிறது. அதற்கான செலவிற்கு தங்களால் முடிந்த காணிக்கையை வழங்க இந்த பக்கத்தில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யவும் “
என்றிருந்தது.


சில நிமிடங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் டெர்ரியின் (ஆம் அன்று தான் அந்த அன்னையின் பெயர் எனக்குத் தெரிந்தது ) அந்த புன்சிரிப்போடு இருக்கும் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் என்னைப் பார்த்து சிரிப்பது போலவே தோன்றியது. அந்த புகைப்படத்தின் அருகில் சென்றேன். என் கண்கள் இன்னும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. அந்த புகைப்படத்தில் டெர்ரியின் முகத்தில் எனது விரல்களால் வருடினேன். இன்னும் அதன் அருகில் சென்று எனக்குள் நீண்ட நாட்களாய் என் உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த எனது ஆசையை அவருக்கு அன்புப் பரிசாக கொடுத்தேன்.ஆம் அந்த அன்னையின் புகைப்படத்தில் அந்த கருணை நிறைந்த உள்ளத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். பிரியா விடை பெற்று சென்ற அந்த மாசற்ற மாணிக்கத்திற்கு நான் அளித்த அன்புக் காணிக்கையை நினைக்கும் போதெல்லாம் இன்றும் என் கண்கள் நனைவது நிற்கவில்லை.


கதையாக்கம் : வாஞ்சி கோவிந்த் 

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...