பாகம் - 1
ஹூஸ்டன் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் அந்த ஆண்டிற்கான
புதுமுகங்களை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாத கோடை வெயிலும்
தனது வெப்பத்தை பூமியில் செலுத்த மெதுவாக வானத்தை நோக்கி நகர்ந்து
கொண்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரிசையாக வாகனங்கள் வர
ஆரம்பித்திருந்தது. சரி இனி வரவேற்பு அறையைத் தாண்டி உள்ளே செல்வோம்.
பெரிய ஹால்..அதன் ஒரு முனையில் மேடை போடப்பட்டிருந்தது. ஹால் முழுவதும்
வரிசையாக மிக நேர்த்தியாக இருக்கைகள் போடப் பட்டிருந்த து. மேடையின் பின்னே
உள்ள வெள்ளைத் திரையில் புரொஜக்டரில் இருந்து உமிழும் ஒளிக்கற்றைகள் பல
வண்ணக் காட்சியாக வெள்ளைத்திரையை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதன் நடுவில்
"இளம் சிறுத்தைகளே வருக" என ஆங்கிலத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மின்னிக்
கொண்டிருந்தது. வளாகத்தின் வாசலில் இருந்து ஹால் வரை உள்ள சாலையின்
இருபுறமும் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவியர் கூட்டம்
கூட்டமாக நின்று புதிய மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்திய வண்ணம்
இருந்தார்கள். அரை டிரவுசரும் குளிர்த் தோள் சட்டையும் அணிந்த மாணவிகள்
கையில் "எங்கள் கல்லூரி பிடித்திருந்தால் கார் ஹாரனை அழுத்தவும்" என்ற வாசகம்
ஏந்திய பேனர்களை காட்டி நிற்க, அனைத்து கார்களும் ஹாரனை அழுத்தி அதை ஆமோதித்த
வண்ணம் நகர்ந்து பார்க்கிங்கிற்கு சென்றார்கள்.
மாணவ மாணவியர் கொஞ்சம் கொஞ்சமாக ஹாலை நிரப்ப ஆரம்பித்தார்கள். மேடையில்
நியான் விளக்குகள் பளிச்சிட பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும்
அமர்ந்திருக்க, கல்லூரி வேலிடிக்டேரியன் தனது பேச்சை ஆரம்பித்து எல்லா புதிய
மாணவரையும் வரவேற்றும் கல்லூரியின் பெருமைகளையும் ஆங்கிலத்தில் பேசிக்
கொண்டிருந்தார். அரங்கு நிறைந்திருந்தது. கல்லூரி முதல்வரின் உரைக்குப் பிறகு
கல்லூரி கவுன்சிலர் தலைவர் நிகழ்ச்சி நிரலை படித்து விட்டு இனி புதிய மாணவர்
மாணவியர் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து விட்டு
அமர்ந்தார். மாணவர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் புதிய முகங்களைக் கண்ட
மகிழ்ச்சியுடனும் அடுத்த நான்கு வருடம் கழிக்கப் போகும் இடத்தைப் பார்த்த
பூரிப்பிலும் இருந்தார்கள்.
மேடையில் நின்ற கல்லூரி மாணவி ஒவ்வொரு பெயராக அழைக்க ஹாலில்
அமர்ந்திருந்தவர்கள் தங்களது பெயர் சொன்னதும் எழுந்து நின்று தங்களை அறிமுகம்
செய்து கொண்டிருந்தார்கள். ஹால் நிசப்தமாக இருந்தது. எழுந்து நின்று பேசும்
மாணவர் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
நுனி நாக்கில் பேசும் ஆங்கிலத்தில் அந்த இளம் அமெரிக்கப் பெண் பெயரை
படிப்பது அந்தப் பெயருக்கு சொந்தக்கார ரால் மட்டுமே புரிந்து கொள்ளும்
வகையில் இருந்தது.
கிறிஸ்டோபர் ஜோன்ஸ் என்ற பெயரை அழைத்தவுடன் எழுந்து நின்று தன்னை அறிமுகப்
படுத்திக் கொண்டான் கிரிஸ். எனது பெயர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். நீங்கள் என்னை
கிரிஸ் என்று அழைக்கலாம். நான் விர்ஜீனியா மாநிலத்தில் இருந்து வந்துள்ளேன்.
இந்தக் கல்லூரியில் படிப்பது எனது இளம் வயதுக் கனவு. உங்களை எல்லாம்
சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசிவிட்டு அமர்ந்தான்.
அடுத்தடுத்து நிறைய ஆசிய மாணவ மாணவியர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு
இருந்தார்கள். வேண்டா வெறுப்புடன் தனது ஆண்டிராய்டை பார்த்துக்
கொண்டிருந்தான் கிரிஸ். எப்போது இந்த நிகழ்ச்சி முடியும் எப்போது வளாகத்தை
சுற்றிக் காட்டப் போகின்றார்கள் என்ற எண்ணத்துடன் நேரத்தைக் கழித்துக்
கொண்டிருந்தான்.
மேடையில் அடுத்த பெயரை தனது நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாசித்தாள் அந்த
கல்லூரி பளிங்குச் சிலை. கேட்டி டெக்ஸாஸில் இருந்து வைஷ்ணவி என்று சொல்லி
முடிப்பதற்குள் கிரிஸின் இதயத்தில் ஒரு மின்னல் வெட்டியது. ஆண்ட்ராய்டை
மடக்கி வைத்துவிட்டு தனது பார்வையை மாணவர் மத்தியில் சுழலவிட்டான். வைஷ்ணவி
என்ற பெயருக்குச் சொந்தமான உருவத்தைத் தேடினான். நெஞ்சு படபடத்தது. ஏதோ
மனதில் இனம்புரியாத தவிப்பு உருவானதை அவனால் உணர முடிந்தது. அவனது பார்வைக்
கதிர்கள் கூட்டத்தைச் சுற்றிவரும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றியது.
சில வினாடிகளில் லேசர் கதிர்பட்டு நிற்கும் கருவி போல அவளது உருவத்தில்
இடித்து பார்வை நிலைபெற்று நின்றது. ஏதோ அவளை பல வருடம் பார்க்காமல் இருந்து
மீண்டும் இன்றுதான் பார்த்தது போல உணர்ந்தான். அவனது உதடுகள் அவனை அறியாமல்
வைஷ்ணவி என்று முணுமுணுத்தது. நிகழ்ச்சி முடியும் வரை அவள் இருந்த இடத்தை
நோக்கியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். மனதில் அவளைப் பற்றிய
நினைவுகள் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தண்ணீர் பட்டு கலைந்து போன
காட்சியாய் வந்து வந்து போய்கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அவனை
அறியாமலே அவளை நோக்கி கால்கள் நகர அவள் எதிரில் போய் நின்றான். ஆயிரம் வாட்
பல்பாய் அவனது முகம் மலர்ந்திருந்தது. அயம் கிரிஸ் என்று அவளது வலது கையைப்
பிடித்து குலுக்கினான். அவளும் அயம் வைஷ்ணவி என்று சொல்லி ஒரு சிறு புன்னகையை
உதிர்த்தாள். தன்னை மறந்து யெஸ் ஐ நோ என்று அவன் பதிலுரைக்க அவள் சற்றே
அதிர்ந்து அவனது கண்களை நோக்கினாள்.
பாகம் - 2
வைஷ்ணவி
இந்தியாவில் தமிழ்மண்ணில் பிறந்து அரசு பள்ளியில் பள்ளிக் கல்வி முடித்து,
நுழைவுத்தேர்வு எழுதி, பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் கிடைத்த தனியார்
கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கேம்பஸ் இண்டர்வியூவில்
தேர்வாகி, பிரபல இந்தியக் கணினி கம்பெனியில் சில வருடம் வேலை பார்த்து, பிறகு
ஹெச் விசாவில் அமெரிக்கா வந்து செட்டில் ஆன அசோக்குமாருக்கும், இதே போல
படித்தாலும், கல்லூரி நாட்களில் கூடுதலாக ஒரு எலெக்டிவ் படித்து (அதாங்க
காதல்), காதலனையே திருமணம் செய்து, அவருடனே அமெரிக்கா வந்த கவிதாவிற்கும்
பிறந்த செல்லக் குட்டிதான் நம் வைஷ்ணவி. பெற்றோருக்கே ஒரு பாரா என்றால், நம்
ஹீரோயினுக்கு குறைந்தது ஒரு பாகமாவது தேவைப்படும் அவளை அறிமுகம் செய்ய
அல்லவா?
அவள் பிறந்ததே ஒரு குட்டிக்கதை. அமெரிக்கா வந்த அசோக்கும் கவிதாவும் முதல்
மூன்று ஆண்டுகள் ஜாதகப்படி சேர்ந்து வாழக்கூடாது என கார்பரேட் ஜோதிடர் சொல்லி
விட, மேரிலேண்ட் மாகாணம் எலிகாட் சிட்டியில், ஹோவர்ட் கிராசிங் என்ற
அபார்ட்மென்ட் கம்யூனிட்டியில் பேக்ரவுண்ட் விசாரித்து, மாதமாதம் வாடகை
கொடுப்பார்களா என பேங்க் பேலண்ஸ் பார்த்து, விசா பார்த்து கடைசியில் ஐநூறு
சதுர அடியில் ஒரு ஹால், ஒரு படுக்கையறை, ஒரு அடுப்பறை, ஒரு கழிப்பறை உள்ள
அபார்ட்மென்ட்டில் கிராண்டாக பால் காய்ச்சி குடியேறினார்கள். வால்மார்ட்டில்
பால் வாங்கி, ஹோம்டிப்போவில் பூ வாங்கி, அடுப்படி மேடையில் திடீரென முளைத்த
பூஜையறையில், அம்மா கொடுத்து அனுப்பிய அட்டைப் பிள்ளையாரை நிறுத்தி, இரண்டு
சேனல்களில் சொந்தங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்து அதாங்க இருவரது செல்போனில்
உள்ள பேஸ்டைம் வழியாக, எல்லோரும் ஆன்லைனில் வாழ்த்திட, அருகில் உள்ள அலுவலக
நண்பன் குடும்பத்தோடு வந்து உதவிகள் செய்ய இனிதே பால்காய்ச்சும் விழா நிறைவு
பெற்றது.
அசோக்கிற்கு பால்டிமோரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை. கவிதாவிற்கு
அட்லான்டாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை. அமெரிக்காவில் கணவன் மனைவி
இருவரும் வேலை பார்த்தால் தான் இங்குள்ள மற்ற இந்தியக் குடியேறிகளுடன் சரி
சமமாக போட்டி போட்டு வாழ்க்கையை நடத்த முடியும் என்று எழுதப் படாத நியதியை
யாரோ எழுதி வைத்துவிட்டார்கள். எனவே மாதம் ஒரு முறை மட்டுமே ஒரே வீட்டில்
இரண்டு நாட்கள் சேர்ந்து தங்குவார்கள். அதில் வாசிங், அயர்னிங், மளிகை
ஷாப்பிங், மற்ற ஷாப்பிங், பேக்கிங், குக்கிங் இது எல்லாம் போக நேரமிருந்து
மூடிருந்தால் அந்த கிங்கும் தான். இப்படி எல்லாமே அவசரகதியில் நடந்தால்
குழந்தை எப்படிப் பிறக்கும். ஊரில் இருந்து இரு வீட்டாரும் போன்
பண்ணும்போதெல்லாம் விசேஷம் ஏதும் இல்லையா என்று கேட்டு இம்சை வேறு.
அதுமட்டுமன்றி என்ன பிளானிங்கா என்ற கேள்வி வேறு. இங்கு நடப்பது அவர்களுக்கு
எப்படித் தெரியும் பாவம். இப்படி பிளானிங் இல்லாமலே இரண்டு ஆண்டுகள் பேமிலி
பிளானிங் செய்த தம்பதிகளாக கழிய, ஒரு வழியாக கவிதாவிற்கு பால்டிமோரில் ஒரு
வேலை கிடைத்ததும் அதை தொடர்ந்து கவிதா கருவுற்றாள்.
கருவுற்ற மாதத்தில் இருந்து வீட்டில் பட்டி மன்றம் ஆரம்பித்து விட்டது.
யாருடைய பெற்றோரை பிரசவத்திற்கு கூப்பிடுவது என்று. கடைசியில் எப்போதும் போல
மகளிர் அணியே வெற்றி பெற கவிதாவின் பெற்றோரை அழைப்பது என தீர்ப்பு வழங்கி
அவர்களுக்கு விசாவும் டிக்கட்டும் எடுத்து அனுப்பினார்கள். பிப்ரவரி
குளிரில், வெண்பனி நிலமகளை போர்த்தியிருக்க
பால்டிமோர் மருத்துவமனையில் வைஷ்ணவி பிறந்தாள். ஐஸ் கட்டி சூழ்ந்திருந்த
காரணத்தினாலோ என்னவோ அவளுக்கு வைஷ்ணவி என்று பெயர் வைத்தார்கள் போல.
நிலத்தில் பிறந்த நிலவாய் ஜொலித்தாள் நம் வைஷ்ணவி. வீட்டில் இந்தியக்
கலாச்சாரமும் பள்ளியில் அமெரிக்கக் கலாச்சாரமும் அவளுக்கு போதிக்கப் பட சிறு
வயதிலிருந்தே துறுதுறுவென எல்லாரையும் கவர்ந்தாள். பாட்டி தாத்தாவின் விசா
முடியும் வரை மட்டுமே வைஷ்ணவி வீட்டில் இருந்தாள். பிறகு காலை ஏழு மணிக்கு
வெளியில் சென்றால் இரவு ஏழு மணிக்கு தான் வீட்டிற்கு வருவாள். பெற்றோருடன்
செலவிட்ட நேரத்தைவிட நானியிடமும் மாண்டிசோரி ஆசிரியரிடமும் செலவிட்ட நேரமே
அதிகம். மூன்று வயது வரை குழந்தைகள் காப்பகம், மூன்றிலிருந்து பிரீ கேஜி ,
பிறகு மாண்டிசோரி வகுப்புகளில் படித்து விட்டு, ஆறு வயதில் ஆரம்பப் பள்ளியில்
சேர்ந்து பள்ளி முடிந்ததும் ஆப்டர் கேரில் ஏழு மணி வரை காத்திருந்து விட்டு
பிறகு அம்மாவுடன் வீடு செல்வாள். சில ஆண்டுகளில் அசோக்கிற்கு பால்டிமோர்
கம்பெனியில் லே ஆப் ஆகிவிட, அடுத்த வேலை நியூ ஜெர்சியில் கிடைத்தது. அதனால்
அவர்களது குடும்பம் அங்கே மாறியது. வைஷ்ணவி அங்கு பிலைன்ஸ்பரோ கம்யூனிட்டி
நடுநிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்தாள். வருடத்திற்கு எட்டு மாதம்
குளிர் அதிகமாக இருந்ததால், அங்கிருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு
குடிபெயர்ந்தார்கள்.
மேரிலாண்டில் இருந்து நியூ ஜெர்சி வழியாக கடைசியில் டெக்ஸாஸ் மாநிலம் வந்து
கேட்டியில் சொந்த வீடு வாங்கி குடியேறியது வைஷ்ணவியின் குடும்பம். கேட்டியில்
பிரசித்தி பெற்ற செவன் லேக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து விட்டு,
ஹூஸ்டனில் உள்ள பல்கலை கழகத்தில் இளங்கலை சைக்காலஜி படிப்பதற்கு தேர்வு
பெற்று, அதற்கான ஓரியன்டேஷன் நடக்கும் இடத்தில் தான் கிரிஸை முதன்முதலாக
சந்தித்து அவனது பதிலில் அதிர்ந்து நின்றாள். அமெரிக்க ஆணழகுப் போட்டி
வைத்தால் அவனுக்குத் தான் நிச்சயம் முதல் பரிசு கிடைக்கும். அந்த அளவிற்கு
அழகும் உடற்கட்டும் உடையவனாக இருந்தான். இவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது
என்ற குழப்பத்தோடு நின்று கொண்டிருக்கையில், “how is Rahul?” என்று அவளது
தம்பியைப் பற்றி அவன் விசாரித்தவுடன் அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நல்ல
வேளையாக அப்போது அவளது அம்மா அருகில் வந்தவுடன் சற்றென்று அவனிடமிருந்து
விலகி அம்மாவின் தோளில் சாய்ந்தாள். அவளது அம்மா என்ன நடந்தது என்று ஒன்றும்
புரியாமல் மகளை அணைத்துக் கொண்டு அவளருகில் நின்ற கிரிஸை நிமிர்ந்து
பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் அவளையே துளைத்துக் கொண்டு போவதாக தோன்றிட
அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். இருந்தும் ஏதோ ஒரு வித்தியாசமான
அனுபவம் நடப்பது போல உணர்ந்தாள். உடம்பெல்லாம் வழக்கத்திற்கு அதிகமான
வேகத்தில் இரத்த ஓட்டம் நடப்பதாக தோன்றிட அருகில் இருந்த நாற்காலியில்
மகளுடன் அமர்ந்தாள். கிரிஸ் வைத்த கண் எடுக்காமல் அம்மாவையும் மகளையும்
பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
பாகம் - 3
கிறிஸ்டோபர் ஜோன்ஸ்
இத்தாலியில் மிக பிரசித்தி பெற்ற பேஸ்ட்ரி ஜெலாடோ தயாரிப்பாளரான ஹஸனின்
பேரனும், அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேஸ்ட்ரி செக்சனில் சீப் செப்பாக வேலை
செய்யும் மசாரியின் மகனுமாய் மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தில்
பிறந்தவன் நம் கிரிஸ். விர்ஜீனியா மாநிலத்தில் ஆர்லிங்டன் நகரில் உள்ள
தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்து விட்டு, கிறித்துவ உயர்நிலை பள்ளியில்
உயர்நிலை கல்வி படித்தான். பள்ளியில் படிக்கும் போதே கல்வியிலும்
விளையாட்டிலும் சிறந்த மாணவனாக விளங்கினான். குறிப்பாக குதிரையேற்றத்தில்
மிகத் திறமை வாய்ந்தவனாக பல போட்டிகளில் பங்கு பெற்று பல கோப்பைகளை வாங்கி
குவித்தான். உடற் கட்டில் சிக்ஸ் பேக் இளைஞன் என்றால் அது நம் கிரிஸ்
தான்.
வாஷிங்டன் பகுதியில் உலக அளவிலான குதிரையேற்றப் போட்டி நடைபெற அதில் பல
நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில் அமெரிக்கா
சார்பில் நம் கிரிஸ் கலந்து கொண்டான். கால் இறுதிச் சுற்று, அரை இறுதி சுற்று
இரண்டிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினான். இறுதி சுற்றில்
பங்கேற்கும் முன்னர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம், குதிரையில்
ஏறி வேகமாக சுற்றி வந்துகொண்டிருந்த போது, கடிவாளத்தில் இருந்து அவனது கைகள்
அசம்பாவிதமாக நழுவியது. குதிரையில் இருந்து எதிர்பாராத விதமாக தரையில்
விழுந்தான் கிரிஸ். மிரண்ட குதிரையும் திடீரென குதித்து தாவிட, அதன்
பின்னங்கால்கள் இரண்டும் தரையில் கிடந்த கிரிஸின் நெஞ்சில் பதித்து மிதித்து
விட்டு ஓடியது. கிரிஸ் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்தான்.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை கழக மருத்துவமனை, வாஷிங்டன் நகரின் மத்தியில்
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கருங்கல் கட்டிடம். அமெரிக்க ஜனாதிபதி முதல்
அனைத்து பெருந்தலைவர்களும் சிகிச்சைக்காக வந்து போகும் மிக சிறந்த
மருத்துவமனை என்று பெயர் பெற்ற மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள அவசர
சிகிச்சை பிரிவில் திறமை வாய்ந்த மருத்துவர்கள் சுற்றி நிற்க அசையாமல்
கண்மூடி படுக்கையில் படுத்திருந்தான் கிரிஸ். மருத்துவர்கள் அனைவரும் அடுத்து
என்ன செய்வது என்பது பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
கலிபோர்னியாவில் இருந்து இதய சிகிச்சை நிபுணர் ரசல் நெல்சன் விமானத்தில்
வந்து இறங்கினார். கடைசியில் கிரிசிற்கு மாற்று இருதய சிகிச்சை செய்வதாக
முடிவு செய்தனர். அதற்காக அமெரிக்கா முழுவதும் இருந்து இருபத்திநாலு மணி
நேரத்திற்குள் இறந்த ஆண்களில் உறுப்பு தானம் செய்வதாக பதிந்தவர்களை பற்றிய
தகவல் சேகரிக்கப் பட்டது. அதில் கிரிசிற்கு பொருந்தும் வகையில் உள்ள இதயம்
தனி விமானத்தில் எடுத்து வரப் பட்டது. டாக்டர் நெல்சன் தலைமையில் எட்டு மணி
நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அனஸ்தீசியாவில் ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்த கிரிசிற்கு தனது இதயம் மாற்றப்பட்டதே தெரியாமல் சுவாசம்
மட்டும் வந்து போய்க்கொண்டு இருந்தது. முழுவதுமாக குணமடைந்து வீட்டுக்கு
வந்து சேர மூன்று மாதம் ஆயிற்று. அந்த விபத்தில் நிறைய ரத்தக் கசிவு
ஆகியதால், இரத்தத்தில் அதன் கடினத் தன்மை குறைந்ததோடு மட்டுமல்லாமல் அவனுக்கு
டைப் ஒன் டயபெடிக்ஸ் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். அதனால்
கிரிஸால் எந்த இனிப்பும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். உலகில்
சிறந்த பேஸ்ட்ரி தயாரிப்பவரின் மகனாக இருந்தும் அவனால் அதை ருசி பார்க்க
கொடுத்து வைக்கவில்லை பாவம். அவனது அன்றாட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வர
ஆரம்பித்தது. தினம் எந்த உணவு சாப்பிட்டாலும் அதற்கு முன்பு அவனது உடம்பில்
உள்ள குளூகோஸ் அளவு பார்க்கவேண்டும் சாப்பிட்ட பிறகும் குளூகோஸ் அளவு
பார்க்கவேண்டும். அதற்காக இடுப்பு பகுதியில் ஊசி குத்தி குத்தி அந்த இடமே
கருத்து காய்ந்து விட்டது.
கல்லூரி சென்றாலாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று அவனது பெற்றோர் ஆலோசனை
சொல்ல அவன் ஹூஸ்டன் பல்கலை கழகத்தை தெரிவு செய்தான். வருடம் முழுவதும்
வெப்பமான தட்ப வெப்பம் உள்ளதும் அவன் ஹூஸ்டனை தெரிவு செய்ததற்கு ஒரு காரணம்
என்றாலும், உள் மனதில் அவனுக்கு இந்த பல்கலை கழகமே போக வேண்டும் என்று
தோன்றியது தான் முதல் காரணம்.
ஓரியன்டேஷன் முடிந்ததும், வைஷ்ணவியையும் அவளது அம்மாவையும் பார்த்ததும்,
வைஷ்ணவி அவளது அம்மாவின் அருகில் சாய்ந்து நின்றதும் அவனுக்கு ஏதோ புது
அனுபவமாக இருந்தது. அப்போது அவர்கள் இருந்த இடத்திற்கு கோட் சூட் அணிந்து
உயரமான அமெரிக்கர் ஒருவரும் அவரது மனைவியும் வந்தனர். அவர்கள் கிரிஷை
பார்த்து, கிரிஷ் நீ இங்கேயா இருக்கிறாய். உன்னை எங்கெல்லாம் தேடினோம் என்று
தெரியுமா என்று கேட்டவாறு அருகில் நின்றிருந்த வைஷ்ணவியையும், அவளது
அம்மாவையும் பார்த்தவுடன், “is everything ok “ என்று கேட்டவாறு கிரிஷை
கைகளால் அணைத்தார். “Nothing dad ‘. Everything fine “ என்று சொல்லிவிட்டு,
அவனது அப்பாவிற்கு இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
அதை கேட்டதும், கிரிஸின் அப்பாவும் அம்மாவும் அப்படியே உறைந்து
நின்றனர்.
பாகம் - 4
கிளைமேக்ஸ்
கிரிஸின் அப்பாவும் அம்மாவும் , வைஸ்ணவியின் அம்மாவும் சற்று தள்ளி அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். கிரிஸும் வைஷ்ணவியும் ஸ்டார் பக்கில் சென்று
எல்லோருக்கும் காப்பி வாங்கி வரச் சென்றார்கள். கிரிஸின் அப்பா ஒரு
பெரிய பெருமூச்சு விட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார். என் பையன்
கிரிஸ் கடந்த சில மாதங்களாக கவிதா வைஷ்ணவி மற்றும் ராகுல் என்ற
பெயர்களையே அவனது தூக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதுதான் உங்கள்
மூவரையும் பார்த்தவுடன் நாங்கள் சற்று அதிர்ச்சி அடைந்தோம் என்று சொன்னார்.
மேலும் ஆமாம் நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்? உங்களது கணவன் எங்கே?
என்று கவிதாவிடம் கேட்டார். அதைக் கேட்டதும் கவிதாவால் அழுகையை அடக்க
முடியாமல் அழுதாள். சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் கணவனைப்
பற்றிய கதையை சொல்லத் தொடங்கினாள். எங்களது வீடு இங்கிருந்து 30 மைல்
தொலைவில் கேடி என்ற ஊரில் உள்ளது. நான், என் கணவர் ராம், என் மகள் வைஷ்ணவி,
என் மகன் ராகுல் நால்வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். என் கணவர்
SAP BW ல் கன்சல்டிங்கில் வேலை பார்த்து வந்தார். ஒரு ஞாயிறு மதியம்
வைஷ்ணவியை நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பி
வந்தார் என் கணவர். பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்க ஹாலில்
உள்ள இருக்கையில் உட்கார்ந்தவர் திடீரென்று தலைவலி அதிகமாக உள்ளது என்று
சொன்னார். சொன்னவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார் எனக்கு என்ன செய்வது
என்றே ஒன்றும் புரியவில்லை. உடனே அவருடைய நண்பர் சிவாவிற்கு போன் செய்து
விவரம் சொன்னவுடன் அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அவர் வந்து
பார்க்கையில் என் கணவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. உடனே
சிவா 911 க்கு போன் செய்து விபரம் சொன்னார். அடுத்த பத்து நிமிடத்தில்
அவசர உதவி பணியாளர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் எனது கணவரை
பார்த்து விட்டு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள்
ஹெலிகாப்டர் அவசர உதவிக்கு தகவல் கொடுத்தனர். அரைமணி நேரத்தில் என் கணவரை
ஹெலிகாப்டரில் ஏற்றி ஹூஸ்டனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று
விட்டனர். சற்று நேரத்தில் நாங்களும் கிளம்பி அந்த மருத்துவமனையை அடைந்தோம்.
அங்கு சென்றவுடன் எங்களுக்கு அந்த அதிர்ச்சியான செய்திதான் கிடைத்தது. ஆம்
என் கணவர் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து சென்ற செய்திதான் அது. செய்தியை
கேட்டதும் நான் உடனே மூர்ச்சை இழந்து விழுந்து விட்டேன். நான் கண்விழித்து
பார்த்தபோது எனது பிள்ளைகள் அங்கே அழுது கொண்டிருந்தனர். மருத்துவமனையில்
விசாரித்தபோது என் கணவருக்கு பிரைன் ஹேமரேஜ் என்று சொன்னார்கள். பிறகு
போஸ்ட்மார்ட்டம் முடிந்து அவரது உடலை நேராக பியூனெரல் ஹோமிற்கு
அனுப்பிவிட்டார்கள்.
அதன் பிறகு நானும் எனது பிள்ளைகளும் தான் அந்த வீட்டில் தனியாக வசித்து
வருகிறோம் என்று சொல்லிவிட்டு அழுதாள். இதைக் கேட்டதும் கிரிஸின் தந்தையும்
தாயும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர். கிரிஸின் தாயார் கவிதாவை அணைத்தவாறு
அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். கிறிஸ்டின் தந்தை கவிதாவிடம் அவள்
கணவன் இறந்த தேதியையும், ஹூஸ்டனில் எந்த மருத்துவமனையில் இந்த நிகழ்வு
நடந்தது என்றும் கேட்டு அதை குறித்துக் கொண்டார். இதற்கிடையில் கிரிஸும்
வைஷ்ணவியும் அங்கு காப்பியுடன் வந்து சேர்ந்தனர். வைஷ்ணவி அம்மா அழுவதை
பார்த்ததும் சற்று பதட்டத்துடன் அருகில் சென்று பார்த்தாள். அம்மா
என்னவாயிற்று என்று விசாரித்தாள். கிரிஸ் கவிதாவின் அருகில் சென்று அவளது
கண்களை கூர்ந்து பார்த்தவாறு நின்றான். கிரிஸின் தந்தைக்கு இப்போது ஓரளவு
என்ன நடக்கிறது என்று புரிய ஆரம்பித்திருந்தது. அவர் அங்கிருந்து சற்று
தள்ளிப் போய் அந்த மருத்துவமனைக்கு போன் செய்தார். அங்கு ராமின் பிறந்த
தேதியைக் குறிப்பிட்டு அந்த நாளன்று ராமிற்கு சிகிச்சை செய்த மருத்துவரின்
பெயரை தெரிந்து கொண்டு அவருக்கு போன் பண்ணினார்.
மருத்துவரின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில்
மருத்துவர் போனில் வந்தார். கிரிஸின் தந்தை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
ராமின் பிறந்த தேதியை சொல்லி மருத்துவருக்கு ஞாபகம் இருக்கிறதா என
விசாரித்தார். அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அதை பற்றிய விவரம் கேட்டார். எதற்கு
இதை கேட்கிறீர்கள் என்று மருத்துவர் கேட்டவுடன் என் தந்தை மருத்துவரிடம்
இதுவரை நடந்த எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லி முடித்தார். இதைக் கேட்டதும்
மருத்துவர் ஒரு கணம் திகைத்தார். உடனே அவருக்கு அந்த நாள் நிகழ்ந்த
நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. அவர் அதை கிரிஸின் தந்தையிடம் சொல்ல
ஆரம்பித்தார். அன்று ராமை சுயநினைவின்றி ஹெலிகாப்டரில் கொண்டுவந்து எங்களது
மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்
இறந்து விட்டார். அவர் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து இருந்தமையால்
அவற்றை எல்லாம் அகற்றி விட்டு அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அனுப்பி
விட்டோம். அன்று மாலையே வாஷிங்டன் மருத்துவமனையிலிருந்து இருதயம் தேவை என்று
செய்தி வந்து இருந்ததால் ராமின் இருதயத்தை அங்கு அனுப்பி வைத்து விட்டோம்.
நீங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால் ராமின் இருதயத்தைத்தான் கிரிஸிற்கு
பொருத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.. அதனால்தான்
கிரிஸிற்கு ராமின் இருதயத்தில் இருந்த நினைவுகள் சில இன்னும் வந்து
போகிறது போலும். இது மருத்துவத்தில் சாத்தியமில்லை என்றே இதுவரை உள்ளது. இந்த
நிகழ்ச்சி மருத்துவத் துறைக்கு புதிய தகவலாய் உள்ளது. ஆக உங்களது மகன்
கிரிஸின் இருதயம் இறந்து போன வைஷ்ணவியின் தந்தை ராமின் உடையது என்று சொல்லி
முடித்தார் மருத்துவர். கிரிஸின் தந்தை போனை வைத்துவிட்டு மீண்டும் எல்லோரும்
இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு அவர் கவிதா, வைஷ்ணவி, ராகுல், கிரிஸ்
இவர்களின் முகத்தையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். ராமின்
இதயம் தான் கிரிஸின் இதயம் என்று தெரிந்தால் நடக்கப்போகும் நிகழ்வுகளை
எண்ணியவாறு இதை இப்போது சொல்ல வேண்டாம், இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லிக்
கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். (இப்பவே சொன்னா அப்புறம் பார்ட் 2
எப்படி எழுதுவது?)
*********முற்றும்********
#வாஞ்சிவரிகள்#
No comments:
Post a Comment