இரைச்சலான கடைவீதியில், லைப்ரரியின் வெளி வாசலில் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் லைப்ரரியன் பரமசிவம் சார். வாப்பா சேக்கு..கொஞ்சம் வெயிலுக்கு முன்னாடி கெளம்பக்கூடாதாப்பா என்று அங்கலாய்த்துக் கொண்டு சேக்கிடம் லைப்ரரி சாவியை நீட்டினார். இந்தாப்பா சாவி, உனக்கு வேண்டிய பேப்பர் எப்பவும் போல எனது மேசையின் வலது மூலையில் தான் இருக்கிறது. எடுத்து படித்துக் கொண்டு அப்படியே லைப்ரரியைக் கொஞ்சம் பார்த்துக்க இப்ப வந்துர்றேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளில் எங்கோ சென்றுவிட்டார் பரமசிவம். சேக்குவும் தனது சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு லைப்ரரியின் கதவைத் திறந்து உள்ளே போனார்.
லைப்ரரி நிறைய புத்தகங்களோடு தீண்டுவோர் யாருமில்லாமல் சுவரில் தொங்கிய வாசகத்தைக் கவனித்தவாறு காட்சியளித்தது. ஆம் அந்தச் சுவரில் உஷ்..சத்தம் போடாதே.!!என்ற வாசகத்தை படித்து மதித்தன போல அந்தப் புத்தகங்கள். ஊருக்கு மத்தியில் உள்ள கடைவீதியில், காய்கறிக்கடைக்கும், நாடார் பாத்திரக்கடைக்கும் நடுவில் உள்ள சுற்றுக்கட்டு வீடு ஒன்றில் தான் இருந்தது அந்த லைப்ரரி. அந்தக் கட்டிடத்தின் மத்தியில் முனியாண்டி விலாஸ் பிரியாணிக்கடை எப்போதும் கூட்டமாய் கலகலவென சத்தத்துடன் காரசாரமான பேச்சும் சமையலுமாய் தினம் நடக்கும். அதன் ஒரு பக்க வராண்டாவில், வருபவர்கள் உட்கார்ந்து படிக்க மூங்கில் தட்டி அடைத்து அதில் இருபுறமும் மர பெஞ்ச் போட்டிருக்கும். அதை ஒட்டி ஒரு நீளமான அறை. அதில் இரண்டு நீளமான ரேக்குகள் நடுவிலும், சுவரை ஒட்டி இருபுறமும் ஒரு ரேக்கும் போட்டு அதில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கியிருக்கும். அறையில் நுழைந்தவுடன் ஒரு சிறு மேசையில் லைப்ரரியன் உட்கார இருக்கை. இதுதான் அந்த ஊரின் ஒரே லைப்ரரி.
அடுத்த பக்கத்தில் அதே மாதிரியான அறையில் ஆர்எம்கே கிரஷர் அலுவலகம் இருந்தது. அதன் வராண்டா லாரியில் லோடு ஏற்றுபவர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஒதுக்கியிருந்தது. அங்கே எப்போதும் சிலர் கையை தலையணையாக்கி சிமெண்ட் தரையில் கொரட்டைவிட்டுத் தூங்குவது வழக்கமான ஒன்றாகி விட்டிருந்தது. வாரத்தில் ஆறுநாள் திறந்து மூடும் லைப்ரரியில் தினம் வந்து போகும் நபர்களின் எண்ணிக்கை மூன்று நான்கு இருக்கும். அதில் கூட்டிப் பெருக்கி பெஞ்ச்களை சுத்தம் செய்யும் பொன்னம்மா அக்காவும், பரமசிவம் அதாங்க நம்ம லைப்ரரியன் சாரும், சேக்கும் அடங்கும். இங்கு உள்ள புத்தகங்கள் கண்கள் எதையும் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் தினம் பிரியாணியின் வாசனையை மட்டும் நுகராமல் இருப்பதில்லை. விரல்கள் தீண்டி சாப விமோசனம் பெறும் நாளுக்காக அலமாரியில் தவமிருக்கும் அகலிகைகளாய் காத்துக் கிடந்தன அந்தப் புத்தகங்கள். வெளி வராண்டாவில் வார இதழ்களும், செய்தித்தாள்களும் கிடக்கும். அடுத்த வராண்டாவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பவர் சில சமயம் புரட்டிப் பார்த்து விட்டு தூங்கிப் போவார்கள். பிரியாணி சாப்பிட்டவர்கள் சற்று நேரம் இளைப்பாற கையில் எடுத்த விகடனும், குமுதமும் வாசனையில் லைப்ரரி முழுவதும் கமகமக்கும். செய்தித்தாள்கள் மட்டும் பிறந்த குழந்தையைப் பார்க்க வந்தோர் மாறி மாறி கொஞ்சுவதற்குத் தூக்குவது போல் நிமிடத்திற்கு நிமிடம் கைமாறி மாலைக்குள் வதங்கி, மறுநாள் ஹோட்டல் பார்சலில் வேறு இடத்திற்கு மாற்றலாகிப் போய்விடும்.
இந்த லைப்ரரிக்கு வரும் ஒரே ஆங்கில செய்தித்தாள் இந்து. அது ஏக பத்தினி விரதனான இராமனின் வாரிசாய், ஒருவனது கையைப் பிடித்தே வாழ்ந்து மடியும் என்றாலும், அதுவும் மதம்மாறி கைப்பிடித்தது நம் வாசகர் சேக்கைத்தான். ஆம் அந்த இந்துவைத் தினம் தொடுவது நம் முஸ்லிம் நண்பர் சேக்கு மட்டும்தான்.
ஊரின் மையப்பகுதியில் கோவில் மணியின் ஓசையும் தேவாலயத்தின் ஒலியும் தர்காவில் இருந்து ஓதும் குரலும் கேட்கும் முஸ்லிம் அதிகம் வாழும் தெருவில் உள்ள இடிந்து போன பழைய வீடுதான் சேக்கின் வீடு. அவரது அப்பா அப்துல்காதர் கடைத்தெருவில் உள்ள மளிகை கடையில் பொட்டலம் போடும் பணியில் இருந்து வரும் சம்பளத்தில் தான் வாழ்க்கை ஓடியது. அம்மா சிறுவயதிலேயே இறந்து விட இரண்டு ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் வீட்டில். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் கட்டியது அந்த வீடு. வெளிச் சுவர்களில் உள்ள சாந்தும் தென்றலும் சேர்ந்து விளையாடிய விளையாட்டில் தேய்ந்தது என்னவோ செங்கல் சுவர் தான்.வானவீதியில் போகும் காற்றும் மழையும் வந்து தங்கி போகும் தளமாக ஆகிப் போயிருந்தது வீட்டின் கூரை. இடிந்து போன கோட்டைச் சுவரில் இருந்து எடுத்து வந்த சதுர வடிவ கற்களை அடுக்கி அமைத்த படிகளே வீட்டின் வாசற்படிகளாகவும், வசந்தம் வீசும் வேளையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கருங்கல் பெஞ்சுமாக இருந்தது. வீட்டில் உள்ளே அரசாங்கம் கொடுத்த இலவச மின்சாரத்தில் எறியும் ஒற்றை பல்ப் மட்டும் எப்போதாவது உயிர் பெற்று வீட்டிலுள்ளோரின் முகத்தைப் பார்த்துவிட்டுப் போகும். வீட்டிலுள்ள இருட்டு போதாதென்று இரண்டாவது இருட்டுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு மூச்சுவிடப் பழகிவிட்டது அங்குள்ள பெண்களுக்கு. ஆரம்பப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட அக்கா தங்கை மூவரும் எப்போதாவது சமையல் நடக்கும் அடுப்படிக்கு முறைபோட்டு சமையல் வேலை செய்து காலத்தைக் கழித்தனர். எப்போதாவது நல்ல நேரம் வராதோவென்ற எதிர்பார்ப்புகளோடு வாசலைப் பார்த்து வாழ்க்கை நகர்ந்தது. உயர்நிலைப் பள்ளியில் படித்த தம்பியும் படிப்பில் பிடிப்பு இல்லாமல் சைக்கிளில் அரிசி மூட்டை ஏற்றி வீடுகளில் கொண்டு போய் இறக்கும் வேலைக்குப் போய் விட, சேக் அலாவுதீன் என்ற சேக் மட்டுமே அந்த சூழ்நிலையில் இருந்தும் அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரி.
பிறக்கும் போதே ஏற்பட்ட இளம்பிள்ளை வாத நோயில் முதுகில் கூனும் வளர்ச்சி குன்றிய இடது காலும் இறைவன் தந்த இஷ்டமில்லாத அன்பளிப்பு வேறு சேக்கிற்கு. சுருட்டை முடி, கழுத்தில் பள்ளிவாசலில் மந்திரித்து கட்டிய தாயத்து, சங்கு மார்க் அல்லாத சாயம் போன கைலி, சலவை செய்யாத சட்டை தான் அவரது ட்ரேட்மார்க் என்றாலும் அவரது கண்களில் சுபியும் சுஜாதேயும் பட நாயகனின் கண்ணில் தெரியும் அதே ஒளி தெரியும். பள்ளியில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை தினம் பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொண்டு எப்படியோ கணிதத்தில் பட்டம் பெற்றாலும், வேலை வாய்ப்பு என்றதும் உடல் ஊனத்தைப் பார்த்து யாரும் வேலை தர முன்வரவில்லை. உடல் ஊனமுற்றோர் பிரிவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து விட்டு, காலையில் எழுந்ததும் ஓட்டை சைக்கிளில் கிளம்பி, போஸ்ட் ஆபீஸ் சென்று ஏதாவது தபால் வந்துள்ளதா என்று பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக லைப்ரரி வந்து சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கு வரும் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் ஏதாவது வேலை வாய்ப்பு வந்திருக்கிறதா என்று பார்ப்பதே அவரது அன்றாட வேலையாகி விட்டிருந்தது.
வயதான காலத்தில் அத்தா மட்டும் மளிகை கடையில் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்துவது கண்டும் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மனதை செல்லாய் அரிக்க, அத்தா வேலை செய்யும் அதே மளிகை கடையில் மாலை நேரத்தில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அந்த கடை முதலாளி அவருக்கு கல்லாவில் அமர்ந்து காசு வாங்கிப் போடும் வேலையையும் கடைக்குள் அமர்ந்து கணக்கு வழக்கு பார்க்கும் வேலையையும் கொடுக்க அவரது சம்பளம் முழுவதையும் வீட்டுச் செலவுக்கு கொடுத்து விடுவார். அதில் வேலைக்கு அப்ளிகேஷன் போட மட்டும் தனக்காக செலவு செய்வார்.
இப்படியாக வருடங்கள் சில கடந்த நிலையில், ஒரு நாள் லைப்ரரி வாசலில் பரமசிவமும், அவரது நண்பர் ஆறுமுகமும் பேசிக் கொண்டிருக்கையில், சேக் அவர்களை பார்த்து வணங்கி விட்டு உள்ளே நுழைந்தார். சேக்கின் நிலைமையை ஆறுமுகத்திடம் சொல்லி பரமசிவம் வருத்தப் பட்டார். இதை கேட்ட ஆறுமுகம், தான் சேக்கிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்லிவிட்டு சேக்கை அழைத்துப் பேசினார். அப்போது இந்தக் காலத்தில் வெறும் இளங்கலை பட்டம் இருந்தால் வேலை கிடைப்பது கஷ்டம் என்றும், குறைந்தது முதுகலை பட்டமாவது வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். அத்தோடு முதுகலை பட்டம் இப்போது அஞ்சல் வழிக்கல்வியிலேயே படிக்கலாம் என்றும், தான் கூட அஞ்சல் வழியில் ஆங்கில பாடத்தில் முதுகலை பட்டம் பயில்வதாக சொன்னார். இதைக் கேட்டதும் சேக்கிற்கும் நீண்ட நாட்களாக ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெறவேண்டும் என்ற ஆவல் இருந்ததால் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.ஷேக்ஸ்பியரையும், செர்லோக்ஹோம்ஸையும் படித்து ஆங்கில நாவல் எழுதி அதை லைப்ரரியில் வைக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவாக இருந்ததால் இதற்கு உடனே சம்மதித்தார். உயர்நிலைப் பள்ளியில் அலுவலக கிளார்க் வேலை பார்த்தாலும், ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற வேண்டும் என்ற ஆறுமுகத்தின் முயற்சி, சேக்கிற்கு பெரும் உந்துசக்தியைத் தந்தது. ஆறுமுகம் இதற்காக எல்லா உதவிகளையும் சேக்கிற்கு செய்து அவரோடு சேர்ந்து மாலை நேரங்களில் படிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். மனது ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் இருந்த சேக்கிற்கு, இது மீண்டும் வாழ்க்கையில் நம்பிக்கையை தந்தது. இரண்டு ஆண்டுகளில் சேக்கு ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.
இதற்கிடையில், சேக்கின் அறிவுத்திறனை அருகில் இருந்து பார்த்து வியந்த ஆறுமுகம், அவருக்கு மற்றுமொரு யோசனையையும் சொன்னார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மாலை நேரத்தில் நீ ஏன் டியூசன் எடுக்கக் கூடாது? உனக்கும் வேலை கிடைக்கும் வரை செலவிற்கு காசு கிடைக்கும் அவர்களுக்கும் குறைந்த செலவில் டியூசன் செல்ல முடியும் என்று ஆலோசனை சொன்னதோடு, அவருக்குத் தெரிந்த மாணவர்களின் பெற்றோரிடம் பேசி பத்து மாணவர்களை தயார் செய்து விட்டார். இந்த நல்ல யோசனைக்கு பரமசிவமும் அவரது நண்பர் ராஜுவிடம் கேட்டு அவரது பால் டெப்போவில் மாலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த நேரத்தில் சேக்கு வேண்டுமானால் இலவசமாக டியூசன் நடத்திக்கொள்ளட்டும் என்ற அனுமதியை வாங்கிக் கொடுத்தார்.
மளிகை கடையில் அரிசி பருப்பு வெல்லம் முந்திரி என்று கழிந்த நாட்களில் இருந்து ஆங்கில இலக்கணம், அல்ஜீப்ரா, கால்குலஸ், கால்குலேஷன் என்று சேக்கின் வாழ்க்கைப் பாதை சற்று மாற ஆரம்பித்தது. டியூசன் ஆரம்பித்து முதல் மாதச் சம்பளம் வந்தவுடன், லைப்ரரியில் இரண்டாவது ஆங்கில செய்தித்தாள் வரத் தொடங்கியது. ஆம் அன்றிலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை தினம் லைப்ரரில் போட ஏற்பாடு செய்தார் சேக். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியராக மாறிப்போனார். யாரிடமும் பீஸ் வாங்கி வர வேண்டும் என்று கேட்டதே இல்லை. ஆனாலும் அனைத்து மாணவர்களின் பெற்றோரும் தவறாமல் பீஸ் கொடுத்து அனுப்பினர். இதில் சில மாணவர்களுக்கு இலவசமாகவும் பாடம் எடுத்தார் சேக். அடுத்தடுத்து வந்த வருடங்களில் மாணவிகளும் சேர அந்த இடம் சௌகர்யமாக இல்லாமல் போனது. அதனால் லைப்ரரிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் வகுப்பை எடுக்க ஆரம்பித்தார். இதுவும் கடைவீதியில் இருந்ததால், மாணவர்களும் மாணவிகளும் வந்து அங்கே காத்திருக்க முடியாது போக, முன்னரே வருபவர்கள் லைப்ரரில் காத்திருக்குமாறு வசதி செய்து கொடுத்தார் பரமசிவம். இதனால் லைப்ரரியும் முதன் முதலாக பெண்களின் பாதம் பட்டு வரலாற்றில் இடம் பெற்றது. வார நாட்களில் மாலையிலும், வார இறுதியில் பகலிலும் மாணவர் மாணவிகளின் கூட்டம் வர ஆரம்பித்தது. ஒளிந்து கிடந்த புத்தகங்களில் ஒளி வீசும் விழிகள் பட ஆரம்பித்தது. மாணவர் மாணவியர் லைப்ரரில் உறுப்பினராக சேர்ந்து, இரும்பு அலமாரியில் சிறைப்பட்டு கிடந்த புத்தகங்களை விடுவித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்து சென்று படித்து விட்டு மீண்டும் கொண்டு வந்து வைத்தார்கள். சேக்கும் பரமசிவமும் மாணவர்கள் படித்திட இந்தியா டுடே, ரீடர்ஸ் டைஜிஸ்ட் போன்ற மாத இதழ்களை வாங்கிப் போட்டார்கள். அமைதியாக இருந்த அந்த லைப்ரரிக்கு லைஃப் வந்தது கண்டு மகிழ்ந்தனர் பரமசிவமும் சேக்கும்.
இவ்வாறு கண்ணெதிரே மாறிய லைப்ரரி கண்டு இன்பமாய் நாட்கள் ஓடிட, யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த கட்டிடத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக, முனியாண்டி விலாஸிலும் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன் முதலாளி அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கியதோடு கடையையும் விரிவாக்க விரும்பினார். அங்கு வாடகைக்கு இருந்த மற்ற கடைகளையும் காலி செய்யச் சொல்லி அவற்றையும் ஹோட்டலோடு இணைத்து விட்டார். லைப்ரரியும் வாடகைக்கு இருந்தது தான். எனவே ஒரு நாள் பரமசிவத்தைப் பார்த்து கூடிய விரைவில் லைப்ரரியை காலி செய்து விடுமாறு கேட்டுக் கொண்டார். பரமசிவமும் இது பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் வேறு இடம் பார்த்து அங்கு லைப்ரரியை மாற்றிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். நாட்கள் சென்றன. இருந்தும் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சேக்கும் தினமும் காலையில் வந்து ஆங்கிலப் பத்திரிகைகளை பார்த்து வேலைக்கு விண்ணப்பிப்பதும் மாறவில்லை. மாணவர்களும், மாணவிகளும் கூட்டமாக வருவது அதிகரித்து ஊரில் லைப்ரரியின் புகழ் பரவ ஆரம்பித்திருந்தது.
ஒரு நாள், முனியாண்டி விலாஸ் முதலாளி பரமசிவத்திடம் வந்து, உங்களுக்கு கொடுத்த ஆறுமாதக் கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்தே ஆகவேண்டும், இல்லையென்றால் நானே ஆள்வைத்து எல்லா புத்தகங்களையும் வெளியில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனார். பரமசிவம் சேக்கிடம் இந்த விபரத்தைத் சொல்லி மிகவும் வருத்தப் பட்டார். வேலையில்லாத சேக் என்ன செய்ய முடியும். வேலை தேடி விண்ணப்பிக்கக் கூட இனி வழியில்லையே என்ற வருத்தம் வேறு கூடுதலாக வருத்தத்தின் எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டது தான் மிச்சம்.
லைப்ரரி வாசலில் மூடும் தேதியும் நேரமும் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. அந்த நாளிற்கு முதல் நாள் மாலை லைப்ரரியில் இருந்து கிளம்பும் முன்பு, பரமசிவம் சேக்கிடம், “சேக்கு..நாளையிலிருந்து லைப்ரரி கிடையாது என்பதை மறந்து விடாதே. நீ பாட்டுக்கு எப்போதும் போல காலையில் சைக்கிளில் வந்து ஏமாந்து போகாதே” என்று வருத்தத்துடன் சொல்லி விட்டு விடைகொடுத்து அனுப்பினார். சேக்கிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு பெரிய இழப்பு நிகழ்ந்த துக்கம் நெஞ்சை அடைத்தது. காலத்தின் கோலத்தை எண்ணி மனம் நொந்தவாறு எப்படியோ தூங்கிப் போனார்.
மறுநாள் எப்போதும் போல காலை விடிந்தது. சேக்கிற்கு லைப்ரரியைப் பற்றிய எண்ணம் உள்மனதில் ஓடிக்கொண்டு தான் இருந்தது. இன்று லைப்ரரி இருக்காது என்று தெரிந்தும் அவரால் பழகிப்போன பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாமல், சைக்கிளை கிளப்பினார். அதுவும் காற்றில்லாமல் பஞ்சராகிக் கிடந்தது. அருகில் இருந்த சர்தார் சைக்கிள் கடையில் பஞ்சர் பார்த்து விட்டு, முதலில் போஸ்ட் ஆபிஸ் சென்று விட்டு பிறகு அங்கிருந்து லைப்ரரி நோக்கி சைக்கிளை ஓட்டினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே வாசலில் பரமசிவத்தைப் பார்த்ததும் ஏதாவது நல்ல செய்தி வரவேண்டும் என்று அல்லாவை மனதில் வேண்டியவாறே வேகமாக அழுத்தினார். சைக்கிளில் சேக் வருவதைப் பார்த்த பரமசிவம், நேற்று அவ்வளவு சொல்லியும் இன்று லைப்ரரி இல்லை என்பதை மறந்து விட்டார் போல பாவமென்று மனதில் எண்ணிக்கொண்டார். அருகில் வந்ததும் வாப்பா சேக்கு..நான் தான் நேற்றே சொன்னேனே இன்றிலிருந்து வர வேண்டாம் என்று..அப்படியிருந்தும் ஏன்பா இந்த வெயிலில் அலைகிறாய் என்று கேட்டு அங்கலாய்த்துக் கொண்டார். லைப்ரரியின் உள்ளே லோட்மேன்களோடு சேர்ந்து அவரது டியூசன் மாணவர்களும் எல்லாப் புத்தகங்களையும் எடுத்து அட்டைப்பெட்டிகளில் அடைப்பதைக் கண்டு அடிவயிறு ஏதோ செய்தது சேக்கிற்கு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், வணக்கம் சார். எனக்கும் ஞாபகம் இருக்கு நீங்க சொன்னது. நான் வந்தது லைப்ரரிக்கு இல்லைங்க சார். உங்களைப் பார்க்கத்தான் என்று சொன்னார்.
அப்படியா..அப்படி என்ன அவசரம்..மெதுவா வெயில் சாய வந்திருக்கலாமே என்று நிறுத்தினார் பரமசிவம். அது ஒன்றுமில்லைங்க சார், இத்தனை வருசமா கூடவே இருந்த புத்தகங்களை அடுக்கி அட்டைப்பெட்டியில போடுறப்ப, நாமளும் கூட இருந்து ஏதாவது உதவி பண்ணினா தேவலைன்னு தோணுச்சு அதான் சார் கிளம்பி வந்துட்டேன். அப்படியா..சரி சரி வாப்பா உள்ளே போவோம். உன் டியூசன் மாணவர்கள் எல்லாம் இங்க தான் இருக்காங்க இன்றைக்கு புத்தகங்களை எடுத்து வண்டியில அனுப்ப என்று சொல்லி விட்டு அவரும் சேர்ந்து வேலையில் மூழ்கிப் போனார்கள்.
புத்தகங்களை அடைத்த பெட்டிகள் மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டு பரமசிவம் சார் வீட்டில் முன் வராண்டாவில் வந்து குடியேறியது. மாணவர்களும், சேக்கும் பரமசிவத்திடம் விடைபெற்று வீடு போய் சேர்ந்தார்கள். லைப்ரரியில் இருந்த புத்தகங்கள் தங்க இடமின்றி அட்டையில் அடைபட்டு வீட்டு வராண்டாவில் விட்டு வந்ததை நினைத்து மிகவும் கவலையுற்றார் சேக். ஏதோ துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் மனநிலையில் தான் அவர் வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் நுழையுமுன்பு, அவரது மூத்த தங்கை என்ன காக்கா இப்படி களைப்பா இருக்கீக. ஏதாவது காப்பி இல்லை டீ போட்டுத் தரவா என்று பாசத்துடன் கேட்டார். இல்லை பரி (ஆமாம் பரிதா பேகத்தை அப்படித்தான் கூப்பிடுவார்) கொஞ்சம் சுடுதண்ணீர் போடு, குளித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று மறுத்து விட்டார். அன்று இரவெல்லாம் அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாவில்லை. வீட்டில் உள்ள தங்கைகளின் முகங்கள் ஒவ்வொன்றாக கனவில் வந்து போக, இதுவரை இருந்த ஒரே நம்பிக்கையும் கையை விட்டு போனதை எண்ணி மனம் கலங்கினார். எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடும், அதை வைத்து தங்கைகளின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற மனக்கோட்டை தகர்ந்துவிட்ட கவலையில் அப்படியே தூங்கியும் போனார் சேக்.
காலையில் எழுந்ததும் ஒரு முடிவுக்கு வந்தார். குளித்து விட்டு, புது வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டு, தனது அத்தையைப் பார்க்கக் கிளம்பினார். போகும் வழியில் நீண்ட நாட்களாக அவர் தீர்மானமாக வைத்திருந்த விஷயத்தை அசை போட்டவாறு பின் தொடர்ந்தது மனசு. ஆம் தனது அத்தையின் ஒரே மகள் ரெஜினாவை நிக்கா பண்ணிக்கச் சொல்லி தன் அத்தை வந்து கேட்ட போதெல்லாம், ஒரு வேலை கிடைத்தவுடன் நிச்சயம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி வந்ததும், வயசான காலத்தில் அவளை என்னால் தனியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று அத்தை புலம்புவதும் வந்து வந்து போனது. அத்தோடு அவரது பெரிய வீட்டில் எல்லோரும் வந்து தங்கச் சொல்லி வற்புறுத்தியதும் ஞாபகம் வந்தது. அத்தையை பார்த்து உடனே ரெஜினாவை நிக்கா பண்ணிக்கொள்கிறேன் ஆனால் எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும் என்று கேட்டார். நீ என் மகளை நிக்கா செய்தால் போதும் அதன் பிறகு நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டார் அத்தை. அப்படியென்றால் இந்த வீட்டில் முன்பகுதியை லைப்ரரியாக மாற்றுவதற்கு எனக்கு அனுமதி வேண்டும் என்று கேட்க அத்தையும் முழு மனதோடு சம்மதித்தார். அவரிடம் இருந்து அந்த வீட்டின் சாவியை வாங்கிக்கொண்டு, பரமசிவம் சார் வீட்டிற்கு சைக்கிளில் கிளம்பினார் சேக். வீட்டிற்குள் இருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரெஜினா மசூதி இருக்கும் திசையில் மண்டியிட்டு தொழுகை நடத்திவிட்டு வாசலை நோக்கி நடந்து வந்தாள் சுவர்களைத் தனது கைகளால் அளந்த படி.
#வாஞ்சிகதை#