Sunday, January 30, 2022

அமெரிக்காவில் வாங்கிய இடம்

 தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்

 

ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அதிலிருந்து மீண்டு வந்த மாவீரன் போல கம்பீரமாக நின்றது அன்று. நீலவானம் எப்போதும் இல்லாத மாதிரி மிகத் தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. மகளிர் கல்லூரி வாசலில் கல்லூரி முடிந்து செல்லும் இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக செல்வது போல வெண்மேகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் நகர்ந்து போன வண்ணம் இருந்தன. நகரின் மத்தியில் அமைந்த ஹெர்மன் பூங்காவில் ஒரு பகுதியில் அந்த அழகான மிருகக்காட்சி சாலை அமைந்திருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு நிரந்தரமாக தங்கி விட்ட விலங்குகள் தமக்கென்று அமைத்த சிறு சிறையில் அமைதியாக காலம் கழிப்பதைப் பார்த்து ரசிக்க மக்கள் கூட்டம் வரத் தொடங்கியிருந்தனர்.

 

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த நகருக்கு வந்து தங்கி, வேலை செய்யும் பன்னாட்டு மனிதர்களுள் ஒருவன் தான் இந்த சிவா. கடந்த நான்கு நாட்களில் தனது வாழ்வில் திடீரென நிகழ்ந்த பூகம்பத்தை நினைத்தவாறு எத்தனையோ கேள்விகளுக்கு பதில் தேடியவாறு உட்கார்ந்திருக்கிறான் சிவா. அதோடு அடுத்த மூன்று தினங்களில் நடக்கப்போகும் நிகழ்வுகளை மனக்கண்ணில் நினைத்துப் பார்த்ததில் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. தமிழகத்தில் இருந்து மனைவி அனிதா, எட்டு வயது மகள் ஆதிரை, மூன்று வயது மகன் ராமுடன் ஆன்சைட் வேலைக்காக ஹூஸ்டன் விமான நிலையம் வந்து இறங்கியதிலிருந்து நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறான்.

 

ஹூஸ்டனின் சர்வதேச விமானநிலையத்தில் அவனுக்கு முன்னால் ஆன்சைட் வந்த மணி வரவேற்பறையில் காத்திருந்தான். அதனால் இவர்கள் வெளியே வந்ததும் அவனோடு நேரே மணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பிறகு அதே அபார்ட்மெண்டில் ஒத்தை படுக்கையறை வீடு வாடகைக்கு எடுத்து மணியுடனே அவனது காரில் அலுவலகம் சென்று வந்தான். அனிதாவிற்கு எதைப் பார்த்தாலும் ஒன்றும் புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் பயம் வேறு. பழைய டொயோட்டா கேம்ரி ஒன்றை கடனில்  வாங்கி அதில் அலுவலகம் போய்வந்தான். வார இறுதியில் குடும்பத்துடன் அங்குள்ள மீனாட்சி கோவிலுக்கு போய்வந்தனர். இப்படியாக இந்தியாவிலிருந்து வந்து சுமார் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. 

 

கொரோனா வந்ததில் இருந்து எல்லா அலுவலகங்களிலும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க, சிவாவும் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்தான். ஒரு நாள் காலையில் எழுந்தவன், அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் சுருண்டு விழுந்து கதறினான், ஐயோ வயிறு வலி தாங்க முடியவில்லையே என்று. உடனே அனிதாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக மணிக்கு போன் பண்ணி விவரம் சொல்ல அவனும் உடனே வந்து சிவாவை அருகில் இருந்த மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனைக்கு கூட்டி போனான். அங்கு வயிறு சம்பந்தமான சிறப்பு மருத்துவர் ஹென்றி தான் அவனை பரிசோதித்தார். உடனே இரத்த பரிசோதனையும், அல்ட்ரா ஸ்கேனும் எடுக்கப்பட்டது. மருத்துவர் அவனது வலிக்கு வலி குறைக்கும் மாத்திரை கொடுத்தார். பரிசோதனை முடிவுகள் வந்ததும் போன் செய்து தகவல் சொல்வதாகவும், அதன் பிறகு மீண்டும் மருத்துவமனை வர வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். அதே மாதிரி மாத்திரையை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அனிதா சிவாவை கட்டிப்பிடித்து ஒரே அடியாக அழுது தீர்த்தாள். எனக்கு ரொம்ப பயமாக இருக்குங்க நாம உடனே ஊருக்கு போயிடலாம் என்று புலம்பித் தள்ளினாள். சிவாவும் கொஞ்சம் பயந்துதான் போனான் என்றாலும் ஒரு நாள் வந்த வயிற்றுவலிக்குப் பயந்து யாராவது இந்தியாவிற்கு திரும்பிப் போவார்களா என்று அனிதாவையும் சமாதானப்படுத்தினான். இருந்தாலும் அனிதா விடாமல் எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு சிவா, தயவு செய்து என் பேச்சை கேளுங்களேன் என்று அழுது அடம்பிடித்தாள். ஒரு வழியாக மணியும் அவனது மனைவியும் வந்து அனிதாவை சமாதனப்படுத்தி விட்டுப் போனார்கள். நாளை நல்ல நாளாக அமையும் என்ற நம்பிக்கையோடு உறங்கிப் போனார்கள்.

 

அடுத்த நாள் காலை எப்போதும் போல சூரியன் அதிகாலையிலேயே தனது கதிர்களை விரித்தவாறு உலா செல்லக் கிளம்பியது. அனிதாவும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சிறிய பூஜை அறையில் உட்கார்ந்து இன்று மருத்துவமனையில் இருந்து நல்ல செய்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதோடு இல்லாமல் நல்லபடியாக சிவா குணமானால் இளஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வந்து குடும்பத்தோடு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டாள். சிவா இரவில் வலி குறைக்கும் மாத்திரை சாப்பிட்டதால் காலையில் எழுந்தவுடன் வயிற்றில் வலி ஏதும் இல்லை என்று அனிதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். காலை சுமார் பதினோரு மணி இருக்கையில் அவனது கைத்தொலைபேசி ஒலித்திட, எடுத்து யாரென்று பார்த்தான். அது அவன் நினைத்த மாதிரியே மருத்துவமனையில் இருந்து தான் வந்தது. போனை எடுத்து பேசினான். அவனை அன்று மதியம் இரண்டு மணிக்கு மருத்துவர் பார்க்க விரும்புகிறார் என்றும் மற்ற தகவல்களை மருத்துவர் சொல்லுவார் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் அந்த மருத்துவமனை ஊழியர். சிவாவும் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனையில் இருந்தான் மருத்துவர் ஹென்றியை பார்க்க..

 

வாங்க சிவா..இப்ப எப்படி இருக்கிறது வயிற்று வலி என்று ஹென்றி கேட்டார். இப்ப கொஞ்சம் பரவாயில்லை சார் என்று சிவா பதிலளித்தான். உங்களுக்கு எடுத்த அல்ட்ரா ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைக்காக முடிவுகள் வந்துவிட்டன சிவா என்று மெதுவாக ஆரம்பித்தார் டாக்டர் ஹென்றி. சிவாவும் ஆவலாக ஹென்றி என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தான். இதற்கு முன்பு எப்போதாவது அல்ட்ரா ஸ்கேன் எடுத்து இருக்கீங்களா சிவா என்று கேட்க, இல்லை என்று சிவா தலையாட்டினான். உங்களுக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து விட்ட நிலையில் உள்ளது. இதற்கு நான்காம் நிலை ESLD என்று சொல்வார்கள். அதாவது (End Stage Liver Disease) என்று ஆங்கிலத்தில் சொல்லுவோம். இது பெரும்பாலும் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோயாகும். துரதிஷ்டவசமாக அது உங்களுக்கு வந்திருக்கிறது. இது மருத்துவம் செய்யும் நிலையைத் தாண்டி விட்டது. நான் இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும் “நீங்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும்”, இதுவரை நீங்கள் உயிருடன் இருப்பதே பெரும் ஆச்சரியம் என்று சொல்லி நிறுத்தினார். சிவாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்படியே சற்று நேரம் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.

 

எப்படியோ சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டாக்டர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று டாக்டர் ஹென்றியைப் பார்த்து பரிதாபத்துடன் கேட்டான். சிவா நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். இனி உனக்கு நாங்கள் மருத்துவம் பார்க்க ஏதுமில்லை, இருந்தாலும் எங்களால் முடிந்த அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம். ஆனால் அது வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை என்றே சொல்லலாம். எனவே நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இந்தத் தகவலை முதலில் தெரிவித்து அவர்களை இங்கு விரைவில் வரவழையுங்கள். அடுத்து முக்கியமான விஷயம், அருகில் உள்ள பியூனெரல் ஹோமில் நீங்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்கான இடத்தையும், அதற்கு ஆகும் செலவுக்கான பணத்தையும் கட்டி பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆனால் நாங்கள் இங்கிருந்து நேராக ஆம்புலன்ஸில் உங்களது உடம்பை அந்த ஹோமிற்கு அனுப்பி விடுவோம் என்று சொல்லி முடித்தார். சிவாவிற்கு தலை சுற்றியது. தனது உடலை அடக்கம் செய்யத் தானே பதிவு செய்யும் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும் டாக்டரிடம் “ டாக்டர், நான் வேண்டுமானால் இப்போதே கிளம்பி எனது நாட்டுக்குப் போய் விடுகிறேன் அது வரை நான் உயிரோடு இருக்க ஏதாவது மருந்து கொடுங்கள் போதும்” என்று கேட்டான். அதற்கு இனி வாய்ப்பில்லை சிவா, உங்களது உடல்நிலை அதையெல்லாம் தாண்டி விட்டது, என்னை மன்னித்து விடுங்கள். அப்படி ஏதாவது முயற்சி செய்தால் போகும் வழியிலேயே ஏதாவது நடக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் மனைவிக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும். எனவே நீங்கள் இப்போது வீட்டிற்கு சென்று, உங்கள் மனைவியிடம் இந்த விவரங்களை சொல்லுங்கள். அவரோடு ஆலோசனை செய்து நான் சொன்னவற்றை ஏற்பாடு செய்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனைக்கு வாருங்கள். நாம் அடுத்த கட்டமாக கடைசி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினார் டாக்டர் ஹென்றி. நடக்கவும் சக்தியின்றி ஒரு வழியாக கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த காரை அடைந்தான். அவனது மனதில் என்னவெல்லாமோ எண்ணங்கள் ஓடியது. எப்படியோ ஒருவழியாக காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தான்.

 

அவனது வீட்டின் அருகில் உள்ள பார்க்கிங் லாட்டில் கார் வந்து நின்றவுடன் வீட்டு வாசலில் காத்திருந்த அனிதா விரைந்து சென்று அவனது கார் கதவை திறந்து விட்டாள். என்னங்க சொன்னாரு டாக்டர்? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையில்ல என்று கேட்டவாறு அவனோடு நடந்து வீட்டு வாசலை அடைந்தனர். அதற்கு மேல் அவனை நகர விடாமல் மறித்துக் கொண்டு “சொல்லுங்க டாக்டர் என்ன சொன்னாருன்னு சொல்லிட்டு போங்க “ என்று அவனைப் பிடித்து உலுக்கினாள். அதுவரை எப்படியோ அழுகையை கட்டுப் படுத்தி வைத்திருந்த சிவாவால் அது தற்போது முடியாமல் போயிற்று. ஓவென கதறி அழுதவாறு “ எல்லாம் முடிஞ்சிருச்சு அனிதா “ என்று சொல்லிவிட்டு அவளை கட்டி அணைத்துக் கொண்டான். அருகில் வந்த பிள்ளைகள் இரண்டையும் அனிதாவோடு சேர்த்து கட்டிக் கொண்டு அழுதான். அனிதா அவனது பிடியிலிருந்து விலகியவாறு “என்ன சொன்னாருன்னு விவரமா சொல்லுங்களேன், இளஞ்சாவூர் மாரியாத்தா அப்படி எல்லாம் நம்மள கைவிட்டுட மாட்டாள்” என்று அவனது முகத்தை கைகளால் வருடிவிட்டாள். சிவாவும் சற்று அழுகையை நிறுத்திவிட்டு, மருத்துவமனை சென்றதிலிருந்து மருத்துவர் சொன்னதை அப்படியே அனிதாவிடம் சொல்லி முடித்தான். அதைக் கேட்டுக் கொண்டே இருந்த அனிதா, அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்தாள். நல்லவேளையாக சிவா அவளை தனது கைகளில் தாங்கி பிடித்து அருகில் கிடந்த சோபாவில் சாய்த்தான். ஆதிரையிடம் டம்ளரில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அனிதாவின் முகத்தில் தண்ணீரால் அறைந்தான். அனிதாவும் மெல்ல எழுந்து சிவாவின் தாடையைப் பிடித்து அவனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். அப்படியெல்லாம் நடக்காதுங்க, டாக்டர் பொய் சொல்லுறாரு, நமக்கு ஏங்க இப்படி எல்லாம் நடக்க போகுது? நாம யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலையேங்க என்று புலம்பினாள். மறுபடியும் சிவாவை கேட்டாள் “ சிவா நீங்க சொல்லுறது நிஜம்தானா?” என்று. சிவாவும் அனிதாவிடம் சொன்னதெல்லாம் உண்மை என்றும் இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அவனது அறையில் இருந்து மடிக்கணினியை எடுத்து வரச்சொன்னான். அதை மடியில் வைத்தவாறு அனிதாவின் அருகில் சோபாவில் அவனும் உட்கார்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான்.

 

என்னங்க முதலில் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுவோம் என்று சொன்னாள் அனிதா. வேண்டாம் அனிதா, இப்ப இருக்கிற கொரோனா காலத்தில் அவங்க இங்க கிளம்பி வருவதெல்லாம் அவ்வளவு சரியாக இருக்காது என்று சொல்லி மறுத்து விட்டான். முதலில் உங்க மூணு பேருக்கும் இந்தியாவிற்கு போறதுக்கு விமான டிக்கெட் எடுக்கணும் என்று சிவா சொன்னவுடன் அனிதா அதை கேட்ட மாத்திரத்தில் மறுபடியும் மயங்கி விழுந்தாள். அவளை மறுபடியும் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தான். “என்ன அனிதா? உன்னை நம்பித்தான் இந்த இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். நீயே இப்படி மயங்கி விழுந்தால் அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொல்லித் தேற்றினான். நாளை மறுநாள் உங்கள் மூவருக்கும் கத்தார் விமானத்தில் டிக்கெட் எடுக்கிறேன் அங்கு சென்னை விமானநிலையத்தில் வந்து உங்களை அழைத்துப் போக அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்கிறேன் என்று சொன்னான் சிவா. உங்களை இந்த நிலையில் விட்டுவிட்டு என்னால் இந்தியா போக முடியாது என்று மன்றாடினாள் அனிதா. சிவா அனிதாவை ஏதேதோ சொல்லி ஒரு வழியாக சமாதனப்படுத்தி விமான டிக்கெட்டுகளை எடுத்து முடித்தான். மனைவி பிள்ளைகள் பத்திரமாக வீடு போய் சேர ஏற்பாடு பண்ணிய திருப்தியுடன் அடுத்து சிவா அவன் எதிர்காலத்தில் நிரந்தரமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான்.

 

மடிக்கணினியில் google.com என்ற வலை முகவரியை அடித்தான். தினமும் பலமுறை இந்த தளத்தில் எது எதற்கோ சென்றிருக்கிறான் சிவா. ஆனால் அவன் கடைசியாகச் செய்யும் கூகுள் தேடல் இதுவாகத்தான் இருக்கும். அதில் “funeral homes near me “ என்று தட்டச்சில் அடித்தான். உலகத்திலேயே தனது உடலைப் புதைக்க தானே இடம் தேடும் அதிர்ஷ்டம் முதன் முதலில் தனக்குத்தான் கிடைத்திருப்பதை எண்ணியவாறு வந்த பதில்களை பரிசீலித்தான். அதில் வந்தவற்றில் அதிக பட்சமாக எட்டாயிரம் வெள்ளியில் இருந்து குறைந்த பட்சமாக மூவாயிரம் வெள்ளி வரை இருந்தது. இறந்த பிறகு என்னவாயிருந்தால் என்ன ஆகப் போகிறது என்று சற்று தொலைவில் இருந்தாலும் குறைந்த விலையில் உள்ள இடத்தையே தெரிவு செய்தான் சிவா. அந்த இடத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவர்கள் நேரில் வந்து இடத்தை பார்த்த பிறகுதான் பதிவு செய்ய முடியும் என்றவுடன் அன்றே மனைவி பிள்ளைகளுடன் அங்கு வருவதற்கான முன்பதிவு செய்தான்.

 

ஊருக்கு வெளியில் சுமார் பத்து மைல்களில் அழகான இயற்கை சூழலில் அமைந்திருந்தது கேட்டி பியூனெரல் ஹோம். காரை வெளியில் நிறுத்தி விட்டு வரவேற்பு அறையில் நுழைந்தனர் சிவாவும் அவனது குடும்பமும். வரவேற்பறையில் இருந்தவர் வரவேற்று முன் பதிவை சரிபார்த்து விட்டு விவரங்களை கேட்கத் தொடங்கினார். “ ஆமாம் யாருக்காக இங்கே இடம் பார்க்கிறீர்கள் சிவா ?” என்று ஆரம்பித்தார் வரவேற்பாளர். “எனக்குத்தான் “ என்று சிவா சொன்னதும் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனார் அந்த ஊழியர். பிறகு “ I am so sorry to hear that” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை எடுத்துக் கொடுத்தார். அதோடு தோட்டத்தில் உள்ள காலியிடங்கள் பற்றிய வரைபடத்தை எடுத்து மேஜையின் மேலே வைத்தார். நீங்கள் விண்ணப்ப படிவத்தை எழுதி முடித்தவுடன் நாம் உள்ளே சென்று உங்களுக்கான இடத்தை பார்வையிட்டு வரலாம் என்று சொல்லி முடித்தார் அந்த ஊழியப் பெண்மணி. சிவா, அனிதா மற்றும் அவர்களின் பிள்ளைகளும் அந்த அமெரிக்கப் பெண்மணியின் பின்னால் நடந்தார்கள் அந்த கல்லறையின் அழகான அமைதியான கான்கிரீட் சாலையில். ஒவ்வொரு கல்லறையின் முகப்பிலும் அங்கு சமாதியானவரின் பெயர் மற்றும் பிறந்த, இறந்த தேதிகள் எழுதப்பட்டிருந்தது. அந்த அமெரிக்கப் பெண்மணி சற்று தூரம் சென்றதும் ஒரு திறந்த வெளியில் நின்று இதுதான் நீங்கள் தேர்வு செய்துள்ள இடம் என்று சொன்னார். அதைக் கேட்டதும் அனிதா, சிவாவின் கைகளை இறுக்கிப் பற்றியவாறு அழுதாள். சிவா அவளை சமாதானப் படுத்தினான். இந்த இடம் உங்களுக்குப் பிடித்துள்ளதா என்று அந்தப் பெண்மணி சிவாவிடம் கேட்டார். அதற்கு சிவா வெறுமனே தலையை மட்டும் ஆட்டி சரி என்று சொன்னான். அவனுக்குள் அலைமோதிக் கொண்டிருந்த எண்ணங்களை அவளிடம் எப்படிச் சொல்ல முடியும். செத்த பிறகு அடக்கம் செய்யப் போகும் இந்த உடலுக்கு எந்த இடமாக இருந்தால் என்ன? இதற்கு என்ன வாஸ்து பார்த்தா இருக்க வேண்டும் என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் மனதில் அழுதபடி. அவன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ சிவா நமக்கு வெளிநாடெல்லாம் வேண்டாமய்யா, அமெரிக்கா போனவங்க எல்லாம் அங்கேயே வீடு வாசல்னு வாங்கி செட்டில் ஆகிவிடுவாங்கலாம், பெத்தவங்க செத்தாக் கூட திரும்பி வர மாட்டாங்கன்னு நம்ம தெரு பார்வதி எங்கிட்ட சொன்னாடா” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தான். தனது செல்போனில் அந்த இடத்தை ஒரு போட்டோ எடுத்தான். “ஆம் அமெரிக்காவில் அவன் வாங்கிய சொந்த இடம் ஆயிற்றே” அந்த சமயம் பார்த்து சிவாவின் மகள் “அப்பா யாருக்குப்பா இந்த இடம்?” என்று கேட்க, அனிதா அவளின் வாயைப் பொத்தியபடி அவளையும் மகனையும் இறுக்கி அணைத்தபடி ஓவென்று அழுதாள். அந்த அமெரிக்கப் பெண்மணி அருகில் வந்து அனிதாவைத் தேற்றினாள். கவலைப்படாதே உன் கணவன் நல்லபடியாக குணமாகி விடுவான், கடவுளை நம்பு என்று சொல்லி அங்கிருந்து அனைவரையும் மீண்டும் வரவேற்பு அறைக்கு கூட்டிப் போனாள். சிவா அதற்கான முழுத் தொகையையும், அவன் போகப்போகும் மருத்துவமனையின் தொடர்பு எண்ணையும் கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

 

அங்கிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் ஹில் கிராப்ட் சாலையில் வந்தபோது, ஜாய் ஆலுக்காஸ் நகை மாளிகை கண்ணில் பட்டவுடன் காரை அந்த கடைக்கு திருப்பினான். திருமணம் ஆகி எட்டு ஆண்டுகளில் அனிதாவுக்கு என்று எந்த ஒரு நகையும் வாங்கிக்கொடுத்த தில்லையே என்று நினைவு வந்தவுடன் அவளுக்கு ஏதாவது தன்னுடைய ஞாபகார்த்தமாக வாங்கித் தர வேண்டும் என்று தோன்ற கடைக்குள் நுழைந்தான். அனிதா எவ்வளவோ வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல் அவளுக்கு ஐந்து பவுனில் ஒரு அழகான நெக்லஸ் வாங்கி அங்கேயே அணிவித்து அழகு பார்த்தான். கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டான். அனிதாவும் அழுகையை அடக்கியவாறு சிவாவின் நெஞ்சுக்குள் முகம் புதைத்து அழுதாள். கடையில் இருந்தவர்கள் ஏதோ இவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று நினைத்தபடி அதை பார்த்து ரசித்தார்கள்.

 

அடுத்து மகள் ஆதிரையிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க “ அப்பா எனக்கு ஹூஸ்டன் zoo (மிருகக்காட்சி சாலை) போகணும்பா “ என்று ஆதிரை சொன்னாள். சரியென்று அனைவரும் அங்கிருந்து கிளம்பி ஹூஸ்டன் மிருகக்காட்சி சாலை வந்து சேர்ந்தார்கள். அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்து அங்குள்ள சிற்றுண்டியில் பர்கரும் பிரைஸும் வாங்கி சாப்பிட்டார்கள். சிவாவுக்கு சற்று ஓய்வெடுத்தால் பரவாயில்லை என்று தோன்ற அவன் அங்குள்ள ஒரு மரத்தின் நிழலில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து விட்டான். அனிதா பிள்ளைகளுடன் உள்ளே சென்றிருந்தாள். இப்படியாக சிந்தனைகளில் மூழ்கியபடி இதோ இங்கே உட்கார்ந்திருக்கிறான் நம்  சிவக்குமார் என்ற சிவா. அடுத்து என்ன பண்ணப் போகிறான் என்று பார்ப்போம்.

 

காரை நண்பனிடம் மூவாயிரம் வெள்ளிக்கு விற்று அந்தப் பணத்தை மனைவியிடம் செலவுக்குக் கொடுத்தான். நண்பனிடம் மறுநாள் தன்னை மருத்துவமனையில் இறக்கிவிட்டு விட்டு காரை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்தான். அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் வீட்டை இந்த மாதத்துடன் காலி செய்ய விண்ணப்பம் கொடுத்து அதற்கான கட்டணங்களைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டான். அந்த ரசீது எதற்கு எனக்கு என்று எண்ணியவாறு குப்பைத் தொட்டியில் விசிறிவிட்டு வந்தான். அப்படியே வீட்டை சுத்தம் செய்தார்கள் இருவரும் சேர்ந்து. அன்று இரவே அனிதாவும் பிள்ளைகளும் இந்தியா செல்வதற்கான பெட்டிகளைத் தயார் செய்தார்கள். அனிதா நாள் முழுவதும் ஏதோ பறிகொடுத்ததைப் போல் அழுத வண்ணமே இருந்தாள். இடையில் “நான் அப்பவே சொன்னேனே ஏதோ விபரீதம் நடக்கப் போகுதுன்னு பார்த்தீங்களா, இப்படி ஆயிருச்சே” என்று புலம்பினாள். சிவாவும்  “ இவர்கள் எப்படி தானில்லாமல் வாழப் போகிறார்கள் என்று எண்ணி மனம் புழுங்கினான்” இருந்தாலும் அதை வெளியில் காட்டினால் எங்கே அனிதா மிகவும் உடைந்து போய்விடுவாளோ என்று எல்லாவற்றையும் மனதிற்குள் அடக்கிக்கொண்டான்.

அடுத்த நாள் செய்ய வேண்டிய அடுத்தடுத்த வேலைகளை நினைத்து மலைத்தவாறு அப்படியே சிவாவும் அனிதாவும் பிள்ளைகளோடு தூங்கிப் போனார்கள்.

 

அடுத்த நாள் எதுவுமே தெரியாதவாறு எப்போதும் போல புதிய நாளாக விடிந்தது. சிவாவும் அனிதாவும் எழுந்து விமான நிலையத்திற்கு போவதற்கான ஆவணங்களையும், விமான நிலையத்தில் என்னென்ன பண்ண வேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டார்கள். அதற்கிடையில், அனிதா மீண்டும் “நான் உங்களை இங்கே இப்படி விட்டு விட்டு போக மாட்டேன் “ என்று அழுது அடம்பிடித்தாள். “எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் உங்களை யார் கொண்டு போய் இந்தியாவில் சேர்ப்பார்கள் அனிதா?” தயவுசெய்து புரிந்து கொள் என்று அவளைத் தேற்றினான். எல்லோரும் கிளம்பி விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள். 

சர்வதேச விமானங்கள் வந்து போகும் டெர்மினல் நான்கில் வந்து சேர்ந்தனர். கத்தார் விமானத்திற்கான செக்கின் கவுண்டரில் கூட்டம் சற்று குறைவாக இருக்கவே அவசரமாக வரிசையில் நின்று மூவருக்கும் செக்கின் முடித்து போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு பெட்டிகளை எடைபார்த்து அனுப்பி விட்டு போர்டிங் செல்லும் நுழைவாயில் அருகில் உள்ள நீள இருக்கையில் சிவாவும் அனிதாவும் உட்கார்ந்தனர். அதுவரை சிவாவின் கைகளைப் பிடித்தவாறே அவனது வாசத்தைக் குடித்து கவலைகளை தலையில் ஏற்றியபடி வந்தாள். அவளது கைப்பிடியே சிவாவின் இதயத்தை கெஞ்சியது தெரிந்தது. மௌனமாக இருந்த வேளையில், சிவாவின் காலைப் பிடித்தவாறு நின்ற சிவாவின் மகன் ராம், “அப்பா இந்தாப்பா காசு என்று எப்போதோ கொடுத்த இருபத்தைந்து அமெரிக்க காசை சிவாவின் கைகளில் வைத்து, நீமோவுக்கு food வாங்கிக்கொடு அதுக்குப் பசிக்கும் “ என்று வீட்டில் அவன் வளர்த்த குட்டி மீனை ஞாபகப்படுத்தியவுடன் அழுகையை அடக்கிவைத்திருந்த அனிதா ஓவென கதறினாள். ராமையும் ஆதிரையையும் கட்டியணைத்தவாறு “இவர்களை நான் எப்படி வளர்க்கப் போகிறேன் நீங்கள் இல்லாமலென்று “ கண்ணீர் வடித்தாள். “நீங்களும் எங்களோடு வந்துவிடுங்கள் இப்படியே. அங்கே போய் எப்படியாவது உங்களை பிழைக்கவைத்து விடலாம் வாங்க சிவா பிளீஸ்” என்று அவனை கட்டிக்கொண்டு கெஞ்சினாள். சிவாவிற்கும் அந்த நொடி அப்படித்தான் இருந்தது என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று விட்டுவிட்டான். அறிவிப்புப் பலகையில் “Boarding Open “ என்று பச்சை விளக்கு பார்த்தவுடன் எல்லோரும் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்கள், வாசலின் அருகில் வந்ததுதான் தாமதம், அது விமான நிலையம் என்பதையும் மறந்து அனிதா சிவாவின் கால்களைக் கட்டிக்கொண்டும், அவளது மார்பில் அடித்துக்கொண்டும் சத்தமாக அழுதுபுரண்டாள் தரையில். ஐயோ ஐயோ உன்னைவிட்டு என்னால் போக முடியாது நான் இங்கேயே இருக்கிறேன் என்று புலம்பினாள். தனது தாலியை எடுத்து அவனது கண்களில் ஒற்றினாள். அவளது செய்கைகள் இறந்த கணவனது உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது கதறியழும் மனைவியை நினைவுபடுத்தியது. எப்படியோ கத்தார் விமானத்தில் அனிதாவையும் பிள்ளைகளையும் இந்தியாவிற்கு அனுப்பி விட்டு வீடு திரும்பினான் சிவா. விமான நிலையத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் தான் பார்க்கப் போவது இது தான் கடைசி என்று தெரிந்ததால் அவர்களை தனது கண்ணுக்குள் முடிந்தவரை அடைத்துக்கொண்டான். அனிதாவும் சிவாவின் உடம்பு முழுவதையும் கைகளில் அள்ளிக்கொண்டு தான் உள்ளே போனாள். “நான் சொல்றேன் நீங்க நிச்சயம் குணமாகி எங்களை பார்க்க இந்தியா வரத்தான் போறீங்க” என்று சொல்லி விட்டுத் தான் போனாள் அனிதா. அவள் சொன்னது நடந்திடக்கூடாதா என்ற ஏக்கத்துடன் காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சிவா.

 

ஓரளவுக்கு தான் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் முடித்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். குளியலறையில் சென்று நன்றாக குளித்துவிட்டு, தனது பாஸ்போர்ட், வங்கி அட்டைகள் இவற்றை மட்டும் ஒரு பேக்கில் எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டான். மறக்காமல் நீமோவை எடுத்து மணியிடம் கொடுத்துவிட்டு வந்தான். கிச்சன் மேடையில் “அன்புள்ள அப்பாவுக்கு” என்று எழுதிய கடிதம் ஒன்று இருப்பதைக் கவனித்தான். அதை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் மடித்துவைத்துக் கொண்டான்.

காரை கடைசியாக ஸ்டார்ட் செய்தான். மெதுவாக மருத்துவமனையை நோக்கி காரை ஓட்டிச் சென்று அங்கே பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நண்பனுக்கு தகவல் சொன்னான். அவனும் உடனே அங்கு வந்து சேர்ந்தான். அவனிடம் காரை ஒப்படைத்தான். அதோடு அவனது வீட்டுச் சாவியை அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் உள்ள தகவல் பெட்டியில் போடச் சொன்னான். நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு கடைசியாக மருத்துவமனைக்குள் நுழைந்தான் சிவா. வரவேற்பறையில் காத்திருந்த சமயம், தனது மகள் ஆதிரை எழுதிய கடிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அவள் ஒரு படம் வரைந்திருந்தாள். அவர்கள் சென்று பார்த்த கல்லறையில், இரண்டு கல்லறைகளுக்கு இடையில் உள்ள சிறிய இடத்தில் ஒரு ரோஜாச் செடியும், அதன் மேலே வானத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் பறப்பது போலவும், அதிலிருந்து கண்ணீர் துளி விழுந்து அந்த ரோஜாச் செடியின் கீழே ஆங்கிலத்தில் எழுதியிருந்த “ i love you appa “ வின் i இன் தலையில் அந்த கண்ணீர்த்துளி நிற்பதாக வரைந்திருந்தாள். அதைப்  பார்த்ததும் சிவாவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு வந்து அந்த i இன் தலையில் விழுந்து உடைந்தது. 

#வாஞ்சிவரிகள்#

Tuesday, August 4, 2020

பண்டாரம்

இரைச்சலான கடைவீதியில், லைப்ரரியின் வெளி வாசலில் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் லைப்ரரியன் பரமசிவம் சார். வாப்பா சேக்கு..கொஞ்சம் வெயிலுக்கு முன்னாடி கெளம்பக்கூடாதாப்பா என்று அங்கலாய்த்துக் கொண்டு சேக்கிடம் லைப்ரரி சாவியை நீட்டினார். இந்தாப்பா சாவி, உனக்கு வேண்டிய பேப்பர் எப்பவும் போல எனது மேசையின் வலது மூலையில் தான் இருக்கிறது. எடுத்து படித்துக் கொண்டு அப்படியே லைப்ரரியைக் கொஞ்சம் பார்த்துக்க இப்ப வந்துர்றேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளில் எங்கோ சென்றுவிட்டார் பரமசிவம். சேக்குவும் தனது சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு லைப்ரரியின் கதவைத் திறந்து உள்ளே போனார்.

 

லைப்ரரி நிறைய புத்தகங்களோடு தீண்டுவோர் யாருமில்லாமல் சுவரில் தொங்கிய வாசகத்தைக் கவனித்தவாறு காட்சியளித்தது. ஆம் அந்தச் சுவரில் உஷ்..சத்தம் போடாதே.!!என்ற வாசகத்தை படித்து மதித்தன போல அந்தப் புத்தகங்கள். ஊருக்கு மத்தியில் உள்ள கடைவீதியில், காய்கறிக்கடைக்கும், நாடார் பாத்திரக்கடைக்கும் நடுவில் உள்ள சுற்றுக்கட்டு வீடு ஒன்றில் தான் இருந்தது அந்த லைப்ரரி. அந்தக் கட்டிடத்தின் மத்தியில் முனியாண்டி விலாஸ் பிரியாணிக்கடை எப்போதும் கூட்டமாய் கலகலவென சத்தத்துடன் காரசாரமான பேச்சும் சமையலுமாய் தினம் நடக்கும். அதன் ஒரு பக்க வராண்டாவில், வருபவர்கள் உட்கார்ந்து படிக்க மூங்கில் தட்டி அடைத்து அதில் இருபுறமும் மர பெஞ்ச் போட்டிருக்கும். அதை ஒட்டி ஒரு நீளமான அறை. அதில் இரண்டு நீளமான ரேக்குகள் நடுவிலும், சுவரை ஒட்டி இருபுறமும் ஒரு ரேக்கும் போட்டு அதில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கியிருக்கும். அறையில் நுழைந்தவுடன் ஒரு சிறு மேசையில் லைப்ரரியன் உட்கார இருக்கை. இதுதான் அந்த ஊரின் ஒரே லைப்ரரி.

 

அடுத்த பக்கத்தில் அதே மாதிரியான அறையில் ஆர்எம்கே கிரஷர் அலுவலகம் இருந்தது. அதன் வராண்டா லாரியில் லோடு ஏற்றுபவர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஒதுக்கியிருந்தது. அங்கே எப்போதும் சிலர் கையை தலையணையாக்கி சிமெண்ட் தரையில் கொரட்டைவிட்டுத் தூங்குவது வழக்கமான ஒன்றாகி விட்டிருந்தது. வாரத்தில் ஆறுநாள் திறந்து மூடும் லைப்ரரியில் தினம் வந்து போகும் நபர்களின் எண்ணிக்கை மூன்று நான்கு இருக்கும். அதில் கூட்டிப் பெருக்கி பெஞ்ச்களை சுத்தம் செய்யும் பொன்னம்மா அக்காவும், பரமசிவம் அதாங்க நம்ம லைப்ரரியன் சாரும், சேக்கும் அடங்கும். இங்கு உள்ள புத்தகங்கள் கண்கள் எதையும் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் தினம் பிரியாணியின் வாசனையை மட்டும் நுகராமல் இருப்பதில்லை. விரல்கள் தீண்டி சாப விமோசனம் பெறும் நாளுக்காக அலமாரியில் தவமிருக்கும் அகலிகைகளாய் காத்துக் கிடந்தன அந்தப் புத்தகங்கள். வெளி வராண்டாவில் வார இதழ்களும், செய்தித்தாள்களும் கிடக்கும். அடுத்த வராண்டாவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பவர் சில சமயம் புரட்டிப் பார்த்து விட்டு தூங்கிப் போவார்கள். பிரியாணி சாப்பிட்டவர்கள் சற்று நேரம் இளைப்பாற கையில் எடுத்த விகடனும், குமுதமும் வாசனையில் லைப்ரரி முழுவதும் கமகமக்கும். செய்தித்தாள்கள் மட்டும் பிறந்த குழந்தையைப் பார்க்க வந்தோர் மாறி மாறி கொஞ்சுவதற்குத் தூக்குவது போல் நிமிடத்திற்கு நிமிடம் கைமாறி மாலைக்குள் வதங்கி, மறுநாள் ஹோட்டல் பார்சலில் வேறு இடத்திற்கு மாற்றலாகிப் போய்விடும்.

 

இந்த லைப்ரரிக்கு வரும் ஒரே ஆங்கில செய்தித்தாள் இந்து. அது ஏக பத்தினி விரதனான இராமனின் வாரிசாய், ஒருவனது கையைப் பிடித்தே வாழ்ந்து மடியும் என்றாலும், அதுவும் மதம்மாறி கைப்பிடித்தது நம் வாசகர் சேக்கைத்தான். ஆம் அந்த இந்துவைத் தினம் தொடுவது நம் முஸ்லிம் நண்பர் சேக்கு மட்டும்தான்.

 

ஊரின் மையப்பகுதியில் கோவில் மணியின் ஓசையும் தேவாலயத்தின் ஒலியும்  தர்காவில் இருந்து ஓதும் குரலும் கேட்கும் முஸ்லிம் அதிகம் வாழும் தெருவில் உள்ள இடிந்து போன பழைய வீடுதான் சேக்கின் வீடு. அவரது அப்பா அப்துல்காதர் கடைத்தெருவில் உள்ள மளிகை கடையில் பொட்டலம் போடும் பணியில் இருந்து வரும் சம்பளத்தில் தான் வாழ்க்கை ஓடியது. அம்மா சிறுவயதிலேயே இறந்து விட இரண்டு ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் வீட்டில். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் கட்டியது அந்த வீடு. வெளிச் சுவர்களில் உள்ள சாந்தும் தென்றலும் சேர்ந்து விளையாடிய விளையாட்டில் தேய்ந்தது  என்னவோ செங்கல் சுவர் தான்.வானவீதியில் போகும் காற்றும் மழையும் வந்து  தங்கி போகும் தளமாக ஆகிப் போயிருந்தது வீட்டின் கூரை. இடிந்து போன கோட்டைச் சுவரில் இருந்து எடுத்து வந்த சதுர வடிவ கற்களை அடுக்கி அமைத்த படிகளே வீட்டின் வாசற்படிகளாகவும், வசந்தம் வீசும் வேளையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கருங்கல் பெஞ்சுமாக இருந்தது. வீட்டில் உள்ளே அரசாங்கம் கொடுத்த இலவச மின்சாரத்தில் எறியும் ஒற்றை பல்ப் மட்டும் எப்போதாவது உயிர் பெற்று வீட்டிலுள்ளோரின் முகத்தைப் பார்த்துவிட்டுப் போகும். வீட்டிலுள்ள இருட்டு போதாதென்று இரண்டாவது இருட்டுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு மூச்சுவிடப் பழகிவிட்டது அங்குள்ள பெண்களுக்கு. ஆரம்பப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட அக்கா தங்கை மூவரும் எப்போதாவது சமையல் நடக்கும் அடுப்படிக்கு முறைபோட்டு சமையல் வேலை செய்து காலத்தைக் கழித்தனர். எப்போதாவது நல்ல நேரம் வராதோவென்ற எதிர்பார்ப்புகளோடு வாசலைப் பார்த்து வாழ்க்கை நகர்ந்தது. உயர்நிலைப் பள்ளியில் படித்த தம்பியும் படிப்பில் பிடிப்பு இல்லாமல் சைக்கிளில் அரிசி மூட்டை ஏற்றி வீடுகளில் கொண்டு போய் இறக்கும் வேலைக்குப் போய் விட, சேக் அலாவுதீன் என்ற சேக் மட்டுமே அந்த சூழ்நிலையில் இருந்தும் அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரி. 

 

பிறக்கும் போதே ஏற்பட்ட இளம்பிள்ளை வாத நோயில் முதுகில் கூனும் வளர்ச்சி குன்றிய இடது காலும் இறைவன் தந்த இஷ்டமில்லாத அன்பளிப்பு வேறு சேக்கிற்கு. சுருட்டை முடி, கழுத்தில் பள்ளிவாசலில் மந்திரித்து கட்டிய தாயத்து, சங்கு மார்க் அல்லாத சாயம் போன கைலி, சலவை செய்யாத சட்டை தான் அவரது ட்ரேட்மார்க் என்றாலும் அவரது கண்களில் சுபியும் சுஜாதேயும்  பட நாயகனின் கண்ணில் தெரியும் அதே ஒளி தெரியும். பள்ளியில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை தினம் பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொண்டு எப்படியோ கணிதத்தில் பட்டம் பெற்றாலும், வேலை வாய்ப்பு என்றதும் உடல் ஊனத்தைப் பார்த்து யாரும் வேலை தர முன்வரவில்லை. உடல் ஊனமுற்றோர் பிரிவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து விட்டு, காலையில் எழுந்ததும் ஓட்டை சைக்கிளில் கிளம்பி, போஸ்ட் ஆபீஸ் சென்று ஏதாவது தபால் வந்துள்ளதா என்று பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக லைப்ரரி வந்து சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கு வரும் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் ஏதாவது வேலை வாய்ப்பு வந்திருக்கிறதா என்று பார்ப்பதே அவரது அன்றாட வேலையாகி விட்டிருந்தது.

 

வயதான காலத்தில் அத்தா மட்டும் மளிகை கடையில் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்துவது கண்டும் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மனதை செல்லாய் அரிக்க, அத்தா வேலை செய்யும் அதே மளிகை கடையில் மாலை நேரத்தில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அந்த கடை முதலாளி அவருக்கு கல்லாவில் அமர்ந்து காசு வாங்கிப் போடும் வேலையையும் கடைக்குள் அமர்ந்து கணக்கு வழக்கு பார்க்கும் வேலையையும் கொடுக்க அவரது சம்பளம் முழுவதையும் வீட்டுச் செலவுக்கு கொடுத்து விடுவார். அதில் வேலைக்கு அப்ளிகேஷன் போட மட்டும் தனக்காக செலவு செய்வார். 

 

இப்படியாக வருடங்கள் சில கடந்த நிலையில், ஒரு நாள் லைப்ரரி வாசலில் பரமசிவமும், அவரது நண்பர் ஆறுமுகமும் பேசிக் கொண்டிருக்கையில், சேக் அவர்களை பார்த்து வணங்கி விட்டு உள்ளே நுழைந்தார். சேக்கின் நிலைமையை ஆறுமுகத்திடம் சொல்லி பரமசிவம் வருத்தப் பட்டார். இதை கேட்ட ஆறுமுகம், தான் சேக்கிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்லிவிட்டு சேக்கை அழைத்துப் பேசினார். அப்போது இந்தக் காலத்தில் வெறும் இளங்கலை பட்டம் இருந்தால் வேலை கிடைப்பது கஷ்டம் என்றும், குறைந்தது முதுகலை பட்டமாவது வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். அத்தோடு முதுகலை பட்டம் இப்போது அஞ்சல் வழிக்கல்வியிலேயே படிக்கலாம் என்றும், தான் கூட அஞ்சல் வழியில் ஆங்கில பாடத்தில் முதுகலை பட்டம் பயில்வதாக சொன்னார். இதைக் கேட்டதும் சேக்கிற்கும் நீண்ட நாட்களாக ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெறவேண்டும் என்ற ஆவல் இருந்ததால் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.ஷேக்ஸ்பியரையும்,  செர்லோக்ஹோம்ஸையும் படித்து ஆங்கில நாவல் எழுதி அதை லைப்ரரியில் வைக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவாக இருந்ததால் இதற்கு உடனே சம்மதித்தார்.  உயர்நிலைப் பள்ளியில் அலுவலக கிளார்க் வேலை பார்த்தாலும், ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற வேண்டும் என்ற ஆறுமுகத்தின் முயற்சி, சேக்கிற்கு பெரும் உந்துசக்தியைத் தந்தது. ஆறுமுகம் இதற்காக எல்லா உதவிகளையும் சேக்கிற்கு செய்து அவரோடு சேர்ந்து மாலை நேரங்களில் படிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். மனது ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் இருந்த சேக்கிற்கு, இது மீண்டும் வாழ்க்கையில் நம்பிக்கையை தந்தது. இரண்டு ஆண்டுகளில் சேக்கு ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

 

இதற்கிடையில், சேக்கின் அறிவுத்திறனை அருகில் இருந்து பார்த்து வியந்த ஆறுமுகம், அவருக்கு மற்றுமொரு யோசனையையும் சொன்னார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மாலை நேரத்தில் நீ ஏன் டியூசன் எடுக்கக் கூடாது? உனக்கும் வேலை கிடைக்கும் வரை செலவிற்கு காசு கிடைக்கும் அவர்களுக்கும் குறைந்த செலவில் டியூசன் செல்ல முடியும் என்று ஆலோசனை சொன்னதோடு, அவருக்குத் தெரிந்த மாணவர்களின் பெற்றோரிடம் பேசி பத்து மாணவர்களை தயார் செய்து விட்டார். இந்த நல்ல யோசனைக்கு பரமசிவமும் அவரது நண்பர் ராஜுவிடம் கேட்டு அவரது பால் டெப்போவில் மாலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த நேரத்தில் சேக்கு வேண்டுமானால் இலவசமாக டியூசன் நடத்திக்கொள்ளட்டும் என்ற அனுமதியை வாங்கிக் கொடுத்தார்.

 

மளிகை கடையில் அரிசி பருப்பு வெல்லம் முந்திரி என்று கழிந்த நாட்களில் இருந்து ஆங்கில இலக்கணம், அல்ஜீப்ரா, கால்குலஸ், கால்குலேஷன் என்று சேக்கின் வாழ்க்கைப் பாதை சற்று மாற ஆரம்பித்தது. டியூசன் ஆரம்பித்து முதல் மாதச் சம்பளம் வந்தவுடன், லைப்ரரியில் இரண்டாவது ஆங்கில செய்தித்தாள் வரத் தொடங்கியது. ஆம் அன்றிலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை தினம் லைப்ரரில் போட ஏற்பாடு செய்தார் சேக். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியராக மாறிப்போனார். யாரிடமும் பீஸ் வாங்கி வர வேண்டும் என்று கேட்டதே இல்லை. ஆனாலும் அனைத்து மாணவர்களின் பெற்றோரும் தவறாமல் பீஸ் கொடுத்து அனுப்பினர். இதில் சில மாணவர்களுக்கு இலவசமாகவும் பாடம் எடுத்தார் சேக். அடுத்தடுத்து வந்த வருடங்களில் மாணவிகளும் சேர அந்த இடம் சௌகர்யமாக இல்லாமல் போனது. அதனால் லைப்ரரிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் வகுப்பை எடுக்க ஆரம்பித்தார். இதுவும் கடைவீதியில் இருந்ததால், மாணவர்களும் மாணவிகளும் வந்து அங்கே காத்திருக்க முடியாது போக, முன்னரே வருபவர்கள் லைப்ரரில் காத்திருக்குமாறு வசதி செய்து கொடுத்தார் பரமசிவம். இதனால் லைப்ரரியும் முதன் முதலாக பெண்களின் பாதம் பட்டு வரலாற்றில் இடம் பெற்றது. வார நாட்களில் மாலையிலும், வார இறுதியில் பகலிலும் மாணவர் மாணவிகளின் கூட்டம் வர ஆரம்பித்தது. ஒளிந்து கிடந்த புத்தகங்களில் ஒளி வீசும் விழிகள் பட ஆரம்பித்தது. மாணவர் மாணவியர் லைப்ரரில் உறுப்பினராக சேர்ந்து, இரும்பு அலமாரியில் சிறைப்பட்டு கிடந்த புத்தகங்களை விடுவித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்து சென்று படித்து விட்டு மீண்டும் கொண்டு வந்து வைத்தார்கள். சேக்கும் பரமசிவமும் மாணவர்கள் படித்திட இந்தியா டுடே, ரீடர்ஸ் டைஜிஸ்ட் போன்ற மாத இதழ்களை வாங்கிப் போட்டார்கள். அமைதியாக இருந்த அந்த லைப்ரரிக்கு லைஃப் வந்தது கண்டு மகிழ்ந்தனர்  பரமசிவமும் சேக்கும்.

 

 

இவ்வாறு கண்ணெதிரே மாறிய லைப்ரரி கண்டு இன்பமாய் நாட்கள் ஓடிட, யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த கட்டிடத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக, முனியாண்டி விலாஸிலும் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன் முதலாளி அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கியதோடு கடையையும் விரிவாக்க விரும்பினார். அங்கு வாடகைக்கு இருந்த மற்ற கடைகளையும் காலி செய்யச் சொல்லி அவற்றையும் ஹோட்டலோடு இணைத்து விட்டார். லைப்ரரியும் வாடகைக்கு இருந்தது தான். எனவே ஒரு நாள் பரமசிவத்தைப் பார்த்து கூடிய விரைவில் லைப்ரரியை காலி செய்து விடுமாறு கேட்டுக் கொண்டார். பரமசிவமும் இது பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் வேறு இடம் பார்த்து அங்கு லைப்ரரியை மாற்றிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். நாட்கள் சென்றன. இருந்தும் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சேக்கும் தினமும் காலையில் வந்து ஆங்கிலப் பத்திரிகைகளை பார்த்து வேலைக்கு விண்ணப்பிப்பதும் மாறவில்லை. மாணவர்களும், மாணவிகளும் கூட்டமாக வருவது அதிகரித்து ஊரில் லைப்ரரியின் புகழ் பரவ ஆரம்பித்திருந்தது.

 

ஒரு நாள், முனியாண்டி விலாஸ் முதலாளி பரமசிவத்திடம் வந்து, உங்களுக்கு கொடுத்த ஆறுமாதக் கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்தே ஆகவேண்டும், இல்லையென்றால் நானே ஆள்வைத்து எல்லா புத்தகங்களையும் வெளியில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனார். பரமசிவம் சேக்கிடம் இந்த விபரத்தைத் சொல்லி மிகவும் வருத்தப் பட்டார். வேலையில்லாத சேக் என்ன செய்ய முடியும். வேலை தேடி விண்ணப்பிக்கக் கூட இனி வழியில்லையே என்ற வருத்தம் வேறு கூடுதலாக வருத்தத்தின் எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டது தான் மிச்சம்.

லைப்ரரி வாசலில் மூடும் தேதியும் நேரமும் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. அந்த நாளிற்கு முதல் நாள் மாலை லைப்ரரியில் இருந்து கிளம்பும் முன்பு, பரமசிவம் சேக்கிடம், “சேக்கு..நாளையிலிருந்து லைப்ரரி கிடையாது என்பதை மறந்து விடாதே. நீ பாட்டுக்கு எப்போதும் போல காலையில் சைக்கிளில் வந்து ஏமாந்து போகாதே” என்று வருத்தத்துடன் சொல்லி விட்டு விடைகொடுத்து அனுப்பினார். சேக்கிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு பெரிய இழப்பு நிகழ்ந்த துக்கம் நெஞ்சை அடைத்தது. காலத்தின் கோலத்தை எண்ணி மனம் நொந்தவாறு எப்படியோ தூங்கிப் போனார்.

 

மறுநாள் எப்போதும் போல காலை விடிந்தது. சேக்கிற்கு லைப்ரரியைப் பற்றிய எண்ணம் உள்மனதில் ஓடிக்கொண்டு தான் இருந்தது. இன்று லைப்ரரி இருக்காது என்று தெரிந்தும் அவரால் பழகிப்போன பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாமல், சைக்கிளை கிளப்பினார். அதுவும் காற்றில்லாமல் பஞ்சராகிக் கிடந்தது. அருகில் இருந்த சர்தார் சைக்கிள் கடையில் பஞ்சர் பார்த்து விட்டு, முதலில் போஸ்ட் ஆபிஸ் சென்று விட்டு பிறகு அங்கிருந்து லைப்ரரி நோக்கி சைக்கிளை ஓட்டினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே வாசலில் பரமசிவத்தைப் பார்த்ததும் ஏதாவது நல்ல செய்தி வரவேண்டும் என்று அல்லாவை மனதில் வேண்டியவாறே வேகமாக அழுத்தினார். சைக்கிளில் சேக் வருவதைப் பார்த்த பரமசிவம், நேற்று அவ்வளவு சொல்லியும் இன்று லைப்ரரி இல்லை என்பதை மறந்து விட்டார் போல பாவமென்று மனதில் எண்ணிக்கொண்டார். அருகில் வந்ததும் வாப்பா சேக்கு..நான் தான் நேற்றே சொன்னேனே இன்றிலிருந்து வர வேண்டாம் என்று..அப்படியிருந்தும் ஏன்பா இந்த வெயிலில் அலைகிறாய் என்று கேட்டு அங்கலாய்த்துக் கொண்டார். லைப்ரரியின் உள்ளே லோட்மேன்களோடு சேர்ந்து அவரது டியூசன் மாணவர்களும் எல்லாப் புத்தகங்களையும் எடுத்து அட்டைப்பெட்டிகளில் அடைப்பதைக் கண்டு அடிவயிறு ஏதோ செய்தது சேக்கிற்கு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், வணக்கம் சார். எனக்கும் ஞாபகம் இருக்கு நீங்க சொன்னது. நான் வந்தது லைப்ரரிக்கு இல்லைங்க சார். உங்களைப் பார்க்கத்தான் என்று சொன்னார்.

 

அப்படியா..அப்படி என்ன அவசரம்..மெதுவா வெயில் சாய வந்திருக்கலாமே என்று நிறுத்தினார் பரமசிவம். அது ஒன்றுமில்லைங்க சார், இத்தனை வருசமா கூடவே இருந்த புத்தகங்களை அடுக்கி அட்டைப்பெட்டியில போடுறப்ப, நாமளும் கூட இருந்து ஏதாவது உதவி பண்ணினா தேவலைன்னு தோணுச்சு அதான் சார் கிளம்பி வந்துட்டேன். அப்படியா..சரி சரி வாப்பா உள்ளே போவோம். உன் டியூசன் மாணவர்கள் எல்லாம் இங்க தான் இருக்காங்க இன்றைக்கு புத்தகங்களை எடுத்து வண்டியில அனுப்ப என்று சொல்லி விட்டு அவரும் சேர்ந்து வேலையில் மூழ்கிப் போனார்கள். 

 

புத்தகங்களை அடைத்த பெட்டிகள் மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டு பரமசிவம் சார் வீட்டில் முன் வராண்டாவில் வந்து குடியேறியது. மாணவர்களும், சேக்கும் பரமசிவத்திடம் விடைபெற்று வீடு போய் சேர்ந்தார்கள். லைப்ரரியில் இருந்த புத்தகங்கள் தங்க இடமின்றி அட்டையில் அடைபட்டு வீட்டு வராண்டாவில் விட்டு வந்ததை நினைத்து மிகவும் கவலையுற்றார் சேக். ஏதோ துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் மனநிலையில் தான் அவர் வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் நுழையுமுன்பு, அவரது மூத்த தங்கை என்ன காக்கா இப்படி களைப்பா இருக்கீக. ஏதாவது காப்பி இல்லை டீ போட்டுத் தரவா என்று பாசத்துடன் கேட்டார். இல்லை பரி (ஆமாம் பரிதா பேகத்தை அப்படித்தான் கூப்பிடுவார்) கொஞ்சம் சுடுதண்ணீர் போடு, குளித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று மறுத்து விட்டார். அன்று இரவெல்லாம் அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாவில்லை. வீட்டில் உள்ள தங்கைகளின் முகங்கள் ஒவ்வொன்றாக கனவில் வந்து போக, இதுவரை இருந்த ஒரே நம்பிக்கையும் கையை விட்டு போனதை எண்ணி மனம் கலங்கினார். எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடும், அதை வைத்து தங்கைகளின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற மனக்கோட்டை தகர்ந்துவிட்ட கவலையில் அப்படியே தூங்கியும் போனார் சேக். 

 

காலையில் எழுந்ததும் ஒரு முடிவுக்கு வந்தார். குளித்து விட்டு, புது வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டு, தனது அத்தையைப் பார்க்கக் கிளம்பினார். போகும் வழியில் நீண்ட நாட்களாக அவர் தீர்மானமாக வைத்திருந்த விஷயத்தை அசை போட்டவாறு பின் தொடர்ந்தது மனசு. ஆம் தனது அத்தையின் ஒரே மகள் ரெஜினாவை நிக்கா பண்ணிக்கச் சொல்லி தன் அத்தை வந்து கேட்ட போதெல்லாம், ஒரு வேலை கிடைத்தவுடன் நிச்சயம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி வந்ததும், வயசான காலத்தில் அவளை என்னால் தனியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை  என்று அத்தை புலம்புவதும் வந்து வந்து போனது. அத்தோடு அவரது பெரிய வீட்டில் எல்லோரும் வந்து தங்கச் சொல்லி வற்புறுத்தியதும் ஞாபகம் வந்தது. அத்தையை பார்த்து உடனே ரெஜினாவை நிக்கா பண்ணிக்கொள்கிறேன் ஆனால் எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும் என்று கேட்டார். நீ என் மகளை நிக்கா செய்தால் போதும் அதன் பிறகு நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டார் அத்தை. அப்படியென்றால் இந்த வீட்டில் முன்பகுதியை லைப்ரரியாக மாற்றுவதற்கு எனக்கு அனுமதி வேண்டும் என்று கேட்க அத்தையும் முழு மனதோடு சம்மதித்தார். அவரிடம் இருந்து அந்த வீட்டின் சாவியை வாங்கிக்கொண்டு, பரமசிவம் சார் வீட்டிற்கு சைக்கிளில் கிளம்பினார் சேக். வீட்டிற்குள் இருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரெஜினா மசூதி இருக்கும் திசையில் மண்டியிட்டு தொழுகை நடத்திவிட்டு வாசலை நோக்கி நடந்து வந்தாள் சுவர்களைத் தனது கைகளால் அளந்த படி.

 

#வாஞ்சிகதை#


Monday, August 3, 2020

எங்கோ அநியாயம்

கதிரவன் பணிமுடிந்து களைப்புடன் கடற்கரையோரம் ஒதுங்கினான்.
பனிப்பூக்கள் படர்ந்து நெடுஞ்சாலையை போர்த்தியிருந்தது. பழக்கமில்லாத இரப்பர் சக்கரம் வழுக்கிச்சென்று வெண்பனிச் சகதியில் சிக்கிக் கொண்டது. முகப்புக் கண்ணாடியில் கல்லறையில் அடுக்கும் செங்கல் உயர்வதுபோல பனிமூட ஆரம்பித்தது. எதற்கும் அஞ்சாத எனக்கே கொஞ்சம் உதறல் கண்டது. 

ஒருவழியாக கதவைத் திறந்து கொண்டு, சாலையில் இறங்கி நடந்தேன். ஏதாவது கார் வந்தால் உதவி கேட்கவேண்டும் என்று எண்ணியவாறு சாலையின் இருபுறமும் பார்த்தவாறு நின்றிருந்தேன். அப்போது வெள்ளை நிற அமெரிக்க கார் ஒன்று வெளிச்சத்தை உமிழ்ந்து பனித்தூசியை பந்தாடியபடி வந்து கொண்டிருந்தது. உதவிகேட்டு கையை உயர்த்தினேன். ஏழடி உயரமும் நாலடி அகலமும் உள்ளவர் காரிலிருந்து இறங்கி அருகில் வந்தார். 

அவரை அருகில் பார்த்தவுடன் பனிக்குளிரிலும் வியர்த்தது எனக்கு. இந்தக் காரை நிறுத்தியது தவறோவென மனதிற்குள் சிறு போராட்டம் வந்தாலும், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இன்னொரு மனம் தைரியம் சொன்னது. இறங்கி வந்தவர் என் கார் அருகே வந்து பார்த்தார். எல்லா சக்கரமும் நன்றாக பனிக்குள் சிக்கியுள்ளது, இதை நம்மால் வெளியில் எடுக்க முடியாது. ஏதாவது அருகில் உள்ள சாலையோரக் கடையில் சென்று விசாரிப்போம் வா என்று அழைத்தார். எனக்கும் அந்த சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எந்த யோசனையும் தோன்றாத தால், சரியென்று அவர் காரில் ஏறிக் கொண்டேன்.

கார் என்னையும் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்று சாலையோரக்கடை ஒன்றின் முன் நின்றது. அங்கிருந்த கடையில் எனது கார் சிக்கிய விபரத்தைச் சொல்லி அதை வெளியில் எடுக்க உதவும் கம்பெனியின் தொலைபேசி எண்ணை வாங்கினார். அவரே பனியகற்றி உதவுவோரை அழைத்து விரைந்து வருமாறு தொலைபேசியில் பேசினார். பிறகு என் பக்கம் திரும்பி சாப்பிட ஏதாவது வேண்டுமாவெனக் கேட்டார். உடனே எனது பேண்ட் பாக்கெட்டில் கைவைத்தேன். பாக்கெட்டில் வாலட் இல்லாததை கையுணர காரில் விட்டுவந்தது ஞாபகம் வந்தது. அழைத்து வந்தவர் அதை அறிந்து தேநீரும் சிற்றுண்டியும் அவரது கார்டிலேயே வாங்கிக் கொடுத்தார். அவர் நடந்து கொண்ட விதம் கண்டு அவரைப் பற்றி எழுந்த எண்ணங்கள் சுத்தமாக மாறியது. அவரது உருவத்தை வைத்து அவரை தவறாக எண்ணியது நினைத்து என்மேலே எனக்கு வெறுப்பு வந்தது. இதற்கிடையில் கடையின் வெளியே பனியகற்றும் வாகனம் வந்துவிட, அவரிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். 

அப்போது காவல்துறை வாகனமொன்று விரைந்து வந்து பார்க்கிங்கில் நின்றது. அதிலிருந்து இறங்கிய இரண்டு காவலர்கள்  கடையின் உள்ளே வேகமாக நுழைந்தனர்.  என்னவாக இருக்கும் ஒருவேளை நம் காரை சாலையில் பார்த்து விட்டு நம்மைத் தேடித்தான் வருகிறார்களோ என்று எண்ணியபடி ஓட்டுனரின் அருகில் உட்கார்ந்திருந்தேன். சற்று நேரத்தில் உள்ளேயிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது. அதைக் கேட்டவுடன் என் இதயம் நெஞ்சுக்கூட்டிலிருந்து சில நொடிகள் வெளியில் வந்துவிட்டுப் போனமாதிரி இருந்தது. உன்னோடு நின்ற அந்த ஆளைச் சுட்டுவிட்டனர் காவலர்கள் என்று எனது வாகன ஓட்டுனர் ஆங்கிலத்தில் சொன்னார். என்னால் அதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. உலகில் எங்கோ அநியாயம் நடக்கிறது என்று எண்ணியபோது வாகனம் அந்த இடத்தை கடந்திருந்தது.

#வாஞ்சிவரிகள்#

Friday, July 31, 2020

கல் கட்டிடம்

மிச்சிகன் ஏரியின் மேற்குக்கரையில் அலைகளின் சலசலப்புச் சத்தம் ஓய்ந்து அமைதியாகி குதித்து விளையாடிய ஏரித் தண்ணீர் குளிரில் விரைத்து பனிப்பாறையாகி பள்ளி செல்லும் பிள்ளைகளின் விளையாட்டுத் தளமாகிக் கிடந்தது. அதன் அருகில் இருந்த அழகிய சிற்றூர்தான் டர்னர். இருபது வீடுகள் மட்டுமே உள்ள சிற்றூர் என்றாலும் அனைவருமே ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். மொத்த மக்கள்தொகை சுமார் நூற்றி இருபது பேர் மட்டுமே இருந்ததால் அருகிலுள்ள ஊருக்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். தங்களுக்கென்று பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஒரு சிறிய லைப்ரரியாவது கட்ட வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து உழைத்து பணவுதவி செய்து கருங்கல்லால் ஆன லைப்ரரியை கட்டி முடித்தனர். எல்லா வீடுகளும் மரத்தினால் செய்த வீடாக இருந்த தால் கல்லாலான லைப்ரரி கட்டிடம் அந்த ஊரிலேயே தனித்து விளங்கியதோடு எல்லோரும் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடிப் பேசிப் பழகும் இடமாக மாறி அது அந்த ஊர் மக்களின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. அனைவரது பங்களிப்பில் லைப்ரரியில் சுமார் ஐந்தாயிரம் புத்தகங்கள் சேர்ந்து அழகாக காட்சியளித்தது. 

வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் குளிர்காலமும் பனிப்புயல்களும் பலமுறை வந்து போனது. ஒவ்வொரு வருடமும் பனிப்புயல் காலத்தில் அனைத்து மக்களும் லைப்ரரியில் தஞ்சம் புகுந்ததால் அந்த ஊருக்கு வந்த சேதமெல்லாம் சில வீடுகளோடு போனதே தவிர மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கழிந்தது. 

இவ்வாறாக பல வருடங்கள் கழிந்த நிலையில், ஒரு வருடம் குளிர் காலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தாக்கியது. பனிப்புயல் சூறாவளியோடு சேர்ந்து ஊரையே புரட்டிப் போட ஊர்மக்கள் அனைவரும் லைப்ரரியிலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் சேமித்து வைத்த உணவையே அனைவரும் பங்கிட்டு உண்ணவேண்டியதாயிற்று. புயலின் வேகம் அதிகரிக்க மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து விழ மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் போனது. குளிர் வேறு மிகக் கடுமையாக லைப்ரரிக்குள் இருந்த அனைவரும் குளிர் தாங்காமல் நடுங்க ஆரம்பித்தனர். எப்படி இதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் தவித்த நிலையில், லைப்ரரியன் ஒரு யோசனை சொல்ல, ஊர்மக்கள் அனைவரும் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர். இவ்வாறாக அரை இரவு முடிந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகளும், முதியோர்களும் குளிர் தாங்காமல் மயங்கி விழ ஆரம்பிக்க, வேறுவழியின்றி லைப்ரரியன் சொன்ன யோசனைக்கு ஒத்துக் கொண்டனர். 

அதன்படி லைப்ரரியில் அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கிச் சேகரித்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எரிக்க அதைச் சுற்றி ஊர்மக்கள் உட்கார்ந்து தங்களது குளிரைத் தவிர்க்கத் தொடங்கினர். இவ்வாறு அங்கிருந்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை காப்பாற்ற அவர்கள் கண்ணெதிரிலேயே எரிந்து சாம்பலானது. அரசாங்கத்திடம் இருந்து உதவி வர தாமதம் ஆக, லைப்ரரியில் இருந்த எல்லாப் புத்தகங்களும் எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டே இருந்தன. மறுநாள் மாலை மங்கிய நேரத்தில் லைப்ரரியின் கடைசிப் புத்தகம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில் ஆகாயத்தில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்க, அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அரும்பியது. 

சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய புத்தகங்கள் இப்படி ஒரே நாளில் தங்கள் கண் முன்னே எரிந்து சாம்பலானதை எண்ணி ஊரார் எல்லாம் வருந்தியிருக்க, இந்தக் கடும்குளிரில் இருந்து தன் மக்களை காப்பாற்றிய நிம்மதியில், கம்பீரமாக காட்சியளித்தது அந்த கல் கட்டிடம்.

#வாஞ்சிகதை#

Friday, July 24, 2020

அரங்கனே சாட்சி

குறுந்தொகை பாடல் 25 ஐ மையக் கருத்தாகக் கொண்டு எழுதியது.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

தலைப்பு: அரங்கனே சாட்சி !!!

காலைக் கதிரவனும் ஊரை எழுப்பிட ஒருமணி நேரம் ஆகும் அந்த ஊரில் உள்ள மலையை தாண்டி வர. எதிரி யாரும் எளிதில் வரமுடியாது ஊரைச் சுற்றி வளைவாய்ச் சாலையுண்டு, கோட்டையுண்டு, சந்தைப் பேட்டையுண்டு, கோட்டையைச் சுற்றி கோட்டைச் சுவருண்டு, சுவற்றுக்கு வெளியே நீரால் சூழ்ந்த அகல அகழியுண்டு, அகழியின் மறுபுறம் அகழிக்கரை உண்டு, கோட்டைச் சுவரில் ஆட்கள் நடந்து காவல் காக்க கட்டைச் சுவருண்டு. போர் வந்தால் மூடிக்கொள்ள ஒற்றைக் கதவுண்டு, மற்ற நேரம் மக்கள் வந்து போக மாற்று வழியுண்டு. கருங்கல் பாறையில் செதுக்கி வடித்த அடுக்காய் படியுண்டு, தடுக்கி விழாமல் ஏறி இறங்க ஒற்றைக் கைப்பிடியுமுண்டு. மலையின் மேலே போகப் போக மாடிகள் பலவுண்டு, ஒவ்வொரு மாடிக்கும் மரத்தால் செய்த பெரிய மரக்கதவுண்டு. வெயில் வந்தால் ஒதுங்கி நிற்க குன்றுகள் பலவுண்டு, தொடுக்கி நிற்கும் குன்றுகள் கண்டு பார்ப்பவர் பயமுண்டு. கனமழை வந்தால் பதுங்கி கொள்ள மண்டபம் பலவுண்டு.


மலையடிவாரத்தில் குடைவரை கோயில்கள் இரண்டு உண்டு. நின்ற கோலத்தில் சிவபெருமான் அவதரித்த சிவன் கோயில் ஒன்றுண்டு. அனந்த சயனத்தில் பள்ளிகொண்டு ரட்சிக்கும் பெருமாள் கோயில் ஒன்றுண்டு. கோவிலில் தொண்டூழியம் செய்பவர்கள் வாழ தனி இடமும், கோவில் அர்ச்சகர்கள் வாழ தனி இடமும் உண்டு. அந்த இடங்களுக்குள் போவதற்கு நிறைய கட்டுப்பாடு உண்டு. கோவில் திருவிழாக்களில் மட்டுமே அவர்கள் ஒன்றாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள், மற்றபடி அவர்களுக்கு இடையில் எப்போதும் ஒரு காழ்ப்புணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், நமது நாயகனும், நாயகியும் வாழ்ந்து வருகிறார்கள்.

நாதத்தின் கீதத்தை வேதமாய் நேசித்து வளர்ந்தவள். சாதத்தைப் பகிர்ந்து உண்டாலும் பாசத்தைப் பங்கிடத் தெரியாதவள். பூப்படைந்த நாள் முதல் பூரிப்பாய் மலர்ந்து பூவிற்கே போட்டியானாள் உலக அழகிப் போட்டியில்.
கிராமத்துக் குயில் என்றாலும் கூவுவது அக்ரஹாரத்துக் குடிலில் தானே.

கலை அழகு என்றாலும் கலையாத இந்தச் சிலையழகு நம் நாயகி. சிற்பமாய் செதுக்கி காலைக் கதிரவனின் காமாப் பார்வைக்குப் பயந்து, கருவறையில் பதுங்கி, பழரசமும் பாலும் கலந்து, பலமுறைக் குளித்து, பலவண்ணப் பட்டுடுத்தி அலங்கரித்த அம்மனும், தரிசிக்க வரும் நாயகியின் தரிசனத்திற்கு காத்து நிற்கும். தந்தை நாதஸ்வரம் வாசிக்க, தாயோ நட்டுவாங்கம் செய்ய, தனுசாய் வளைத்து ஆடும் சலங்கையில்லாத கால்களும் சலங்கை ஒலி எழுப்பும். கடவுளின் முன்னே கைவிரல் கோர்த்து கைவளை குலுங்க கைமாலை சூட்டிடும் காட்சிகண்டு வியந்து சாட்சியாய் நிற்பர் அனைவரும். ராகங்களில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த அபூர்வ ராகத்தின் பெயர் கல்யாணி.

கருவறை வரைச் சென்று வர கடவுச்சீட்டு பெற்ற குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்து மடையாக வரும் மந்திரங்களை தடையில்லாது உச்சரித்து பெருமாளையும் பெருந்தேவியையும் திருப்பள்ளி எழுந்தருளச் செய்யும் திருப்பணி செய்பவனின் திருநாமம் விச்சு என்ற விஸ்வநாதன். திருமாலின் திருமேனியை தினம் துடைத்தாலும், திருமகளின் திருமேனியை தினம் துதித்தாலும், நடனத்து நாயகியின் நயனத்தில் விழுந்து மொழியில்லாக் கிளியின் விழிபேசும் மொழிகண்டு மொழிந்தான் தன் காதலை.

நாதமும் வேதமும் நேசமாய் கலந்து வாசம் வீசியது எங்கும். சன்னதியில் ஆரம்பித்து பிரகாரத்தில் உறவாடி பிரவாகமாய் பெருகி பிரசாதமாய் இனித்தது.
மண்டபத்துக் கற்சிலைகள் மண்டியிட்டு மலைத்து நிற்க காதலரின் காதல் காட்சிகள் கோவில் சுவர்களில் சித்திரமாய் சித்தரிக்க மாடங்களில் கூடி மகிழும் மாடப்புறாக்களும் மயங்கி கூடுவிட்டுப் பறந்து கூச்சலிட விடைபெற விரைந்தவளை இடைமறித்து இடை வளைத்திட நடை தளர்ந்து மடை திறந்து உடை அவிழ்ந்து கடை விரித்திட தடை மறந்து தாங்கி நின்றான். அம்மனுக்கு ஆடை மாற்றி அழகு பார்க்கும் விச்சுவிற்கு, கல்யாணியின் ஆடைகள் விலகிட கற்சிலை கண்டு பழகியவன் பொற்சிலை கண்டு மலைத்து சிற்பங்கள் எல்லாம் மலர் தூவிட சில்வண்டுகள் நாதம் இசைத்திட அரங்கனின் அருகிலேயே அரங்கேற்றமானது அவர்களது அந்தரங்கக் காதல்.

நாதமும் வேதமும் கீதம் இசைத்திட பாதம் கலந்திட மாதம் மூன்றானது அவள் அதை உணர. அகத்தின் அசைவுகள் முகத்தில் தெரிந்திட நகத்தின் விளிம்புகள்
நனைந்து உதிர்ந்திட தாய்மையின் முகத்தை தாயும் அறிந்திட சின்னதாய் போர் மூண்டது வீட்டில். மூலம் தெரிந்ததும் ஞாலமே நின்றது. சாதியும் மதமும்
சேதியாய்ச் சொன்னது, வீதியும் ஊரும் மீதியைக் கொன்றது. எச்சில் வழியும் நாதஸ்வரத்தில் ஒருநாள் ரத்தமாய் வழிந்து சத்தமும் நின்றது மொத்தமும் முடிந்தது கல்யாணியின் தந்தைக்கு. கலையிழந்த மகளின் களைப்பைக் கண்டு கலைக்க அவள் அம்மா எவ்வளவோ கெஞ்சியும், மறுத்துவிட்டாள் மருத்துவமனை செல்ல.

செய்தியறிந்த வேதமோ, செய்வதறியாது திகைத்து வெளிநாட்டில் வாழும் சொந்தத்தின் வீட்டிற்கு சொந்தம் யாரும் அறியாமல் கடத்திவிட்டது விச்சுவை.
காதலித்து கரு தந்தவன் சாதலுக்கு முன் வருவானென நம்பியே வாழ்ந்தது நாதமும். மாதங்கள் கழிந்ததில் மகவைப் பெற்றெடுத்தாள் கல்யாணி.

தாசி குடும்பத்தில் வேசியாக வாழ்ந்து காசிற்காக பிறந்த பிள்ளையென கூசாமல் ஊரார் ஏசிட, மாசற்ற காதலின் மகத்துவம் அறியாத மக்கட்பதரென மன்னித்தாள். பெண்மையின் இலக்கணமாய் உண்மையாய் நேசித்தவனோடு தன்னைப் பகிர்ந்ததால், மண்ணில் பிறந்த மைந்தனை கண்ணில் வைத்து காத்திட கண்ணன் என பெயர் வைத்தாள்.

காலங்கள் உருண்டோடியது. கல்யாணியும் ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாள். கண்ணனும் பள்ளியில் படித்து வந்தான். அவனுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அப்பா தான். அந்த அளவிற்கு அவன் அவமானத்தை அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அவமானங்களை எல்லாம் தனது படிப்பில் காட்டினான். பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்தான். மாநில முதலமைச்சர் கையால் பரிசு வாங்க அவனுக்கு சென்னை போகும் வாய்ப்புக் கிடைத்தது.

பேரூந்தில் சென்னை சென்று இறங்கினான். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி விழாநடக்கும் மண்டபத்திற்குச் சென்றான். விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அம்மாவைக் கூட்டி வந்திருக்கலாமே என நினைத்து வருத்தப் பட்டான். கையில் பரிசுக் கோப்பையையும், சான்றிதழையும் வைத்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றான். அப்போது இரண்டு கால்களும் இழந்து, நடக்க முடியாத நிலையில் ஒரு பெரியவர் சாலையை கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து வருத்தப்பட்ட கண்ணன், அவருக்கு உதவிசெய்ய அவரை நெருங்கினான். அவரிடம், தனது கோப்பையையும், சான்றிதழையும் கொடுத்துவிட்டு, அவரை தனது இருகைகளால் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்தான். போகும் வழியில், அந்தப் பெரியவர் அவனை அருகாமையில் பார்க்க மனதுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு வருவதை உணர்ந்தார். 

சாலையை கடந்ததும், அவரிடம் எங்கே போக வேண்டும் எனக் கேட்டான் கண்ணன். அதற்கிடையில், அவர் கண்ணனிடம் அவனைப் பற்றி விசாரிக்க, அவனும் தனது கதையை சொல்லி முடித்தான். அவன் சொன்னதில் இருந்து அவன்தான் தனது மகன் என்பதை அந்த பெரியவர் அறிந்து கொள்ள நிறைய நேரம் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனிடத்தில் தான் தான் அவனது அப்பா என்று சொல்லவும் முடியவில்லை. அவரையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அவர் செல்ல வேண்டிய இடத்தில இறக்கி விட்டு விட்டு அவன் எழும்பூர் பேரூந்து நிலையம் நோக்கி சென்றான். அப்போதுதான் அவர் தனது பர்ஸை விட்டுப் போய்விட்டதை பார்த்தான். அதில் என்ன இருக்கிறது என பார்க்க, அதில் அந்த பெரியவரும், தனது அம்மாவும் இளவயதில் சேர்ந்து எடுத்த புகைப்படம் இருந்ததைப் பார்த்தான். உடனே ஆட்டோவை அந்த பெரியவர் வீட்டிற்கு திரும்பிப் போகச் சொன்னான்.

இதற்கிடையில், வீட்டிற்குச் சென்ற பெரியவர், தனது பர்ஸை ஆட்டோவில் விட்டுவந்ததை அறிந்தார். அது எப்படியும் தனது மகன் கையில் கிடைத்து விடும், அவனும் உடனே இங்கே திரும்பி வருவான் என உணர்ந்தார். விரைவாக தான் ஏன் அவர்களைப் பார்க்க வரவில்லை, எப்படி கால் ஊனமானது என்ற விவரங்களை ஒரு கடிதத்தில் எழுதினார். அதை வீட்டு வாசலில் செருகி வைத்துவிட்டு, அவர் தனது காதல் துணைக்காக பல வருடங்கள் முன்பு வாங்கி வைத்து இருந்த சேலையை எடுத்தார். அதன் ஒரு முனையில் தன் கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டுவிட்டு அடுத்த முனையை மின் விசிறியை நோக்கி வீசினார். சேலையை நன்றாக இழுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு, தனது சக்கர நாற்காலியில் இருந்து கீழே குதித்தார். அவரது அறையில் இருந்த அரங்கனின் படம் அப்படியே அசையாமல் நின்றது. அவரது உயிர் பிரியும் நேரத்தில், அரங்கனின் முன் அரங்கேற்றம் ஆன தனது காதல் நினைவுகள் வந்து போனது.

தனது உயிருக்குயிரான காதலி, தனது இந்த நிலையைப் பார்த்து வருத்தப் படக் கூடாது என்பதற்காக தனிமையில் வாழ்ந்து, தன் மகனும் வருத்தப் படக்கூடாதென தன் உயிரை மாய்த்துக் கொண்ட தனது தந்தையை தவறாக எண்ணி பலமுறை அவரை திட்டியது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் கண்ணன். அரங்கனை விட உயரமாகத் தெரிந்தார் விஸ்வநாதன் அவனுக்கு.


#வாஞ்சிவரிகள்#

அம்மாச்சி டெர்ரி




நான் நியூஜெர்சியில் பிரின்ஸ்டன் நகரில் வேலை செய்யும் காலத்தில் அங்கு அலுவலக கட்டிடத்திலேயே ஒரு கேண்டீன் இருந்தது. அங்கு தினமும் எட்டு வெள்ளிக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். நான் தினமும் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து போய்விடுவது வழக்கம். அதனால் அந்த எட்டு வெள்ளிக்கு தினமும் பிள்ளைகளுக்கு சாக்லெட், குக்கீஸ், பழங்கள், பழரச பானங்கள் போன்றவற்றில் ஏதாவது வாங்கிச் செல்வது வழக்கமாகி விட்டிருந்தது.


அந்த கேண்டீனில் கேஷ் கவுண்டரில் சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவர் வேலை பார்த்தார். அவர் பெயர்கூட எனக்குத் தெரியாது. அவர் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பைப் பார்க்க முடியாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல இருப்பார். எல்லோருக்கும் வாங்கிய சாமான்களை கணக்குப் பார்த்து எவ்வளவு என்று சொல்லும் போதே எவ்வளவு கறாராக இருக்கிறார் என்று சக நண்பர்கள் என்னிடம் கூறக் கேட்டிருக்கிறேன். எட்டு வெள்ளிக்கு மேலே இருந்தால் அந்த மீதியை கட்டிய பிறகுதான் சாமான்களை எடுத்துச் செல்ல விடுவார்.


நான் முதல் நாள் அவரை பார்த்த போது எனக்கும் மனதில் அவரைப் பற்றி அவ்வாறே தோன்றியது. ஆனால் அவரை கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ அவரைப் பற்றி ஒருவிதமான விவரிக்க முடியாத எண்ணம் தோன்றியது. அவர் எதற்கோ ஏங்குவது போல உணர முடிந்தது. அடுத்த நாள் முதல் அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் லேசான புன்முறுவல் செய்ய ஆரம்பித்தார். நானும் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். இவ்வாறு தினம் புன்னகைகளை பரிமாறிக் கொண்டவாறு நாட்கள் சென்றன. இருந்தாலும் என் மனதில் அவருக்குள் ஏதோ இனம் புரியாத சோகம் இருப்பதாக தோன்றிய வண்ணம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எனக்கு மட்டும் எப்போதும் எட்டு வெள்ளிக்கு மேல் சொல்ல மாட்டார். சில சமயம் நானும் என் சக நண்பரும் ஒரே சாமான்களை எடுத்திருந்தாலும் எனக்கு மட்டும் எட்டுக்கு மேல் சொல்ல மாட்டார். நானும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவர் தவறாக கணக்கு பண்ணியிருக்கலாம் என்று நினைத்தேன். என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமென்றே பத்து வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் எடுத்து அவரிடம் சென்றேன். ஆனால் அன்றும் அவர் எட்டு வெள்ளி என்று சொன்னதும் எனக்கு விளங்கி விட்டது. அவர் தெரிந்தேதான் எனக்காக செய்கிறார் என்று. அவர் எதற்காக எனக்கு மட்டும் அப்படி செய்ய வேண்டும் என எனக்கு இன்று வரை தெரியவில்லை. பிறகு ஒருநாள் நான் அவரை கடந்து செல்லும் போது என்னை அழைத்தார். அவருக்கு என் பெயர் கூடத் தெரியாது. அவர் அழைத்ததும் அருகில் சென்றேன். அவர் தன் பையிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து என்னிடம் நீட்டினார். இதில் நானே என் வீட்டில் செய்த கேக் உள்ளது. உனக்காக எடுத்து வந்தேன், சாப்பிடு என்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை எடுத்துக் கொண்டு போய் நானும் என் நண்பர்களும் சேர்ந்து சாப்பிட்டோம். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி உன்னிடம் மட்டும் இப்படி பாசமாக நடந்து கொள்கிறார் என புரியவில்லை என்று புலம்பினர். எனக்கும் அது புரியாத புதிராகவே இருந்தது. இது மாதிரி அடிக்கடி அவர் வீட்டில் செய்யும் கேக், ஸ்வீட் இவைகளை எனக்கு எடுத்து வந்து தருவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாச்சியை பார்ப்பது போலவே தோன்றியது. ஒருநாள் அவரை பார்க்காவிட்டாலும் ஏதேதோ எண்ணம் வந்தவண்ணம் இருக்கும். அதேபோல் நான் போகாத நாட்களில் அவர் என் நண்பர்களிடம் என்னை எங்கே என்று விசாரிக்க மறப்பதில்லை. நான் அவருக்கு எதுவும் திருப்பித் தந்ததில்லை. இப்படியாக சில வருடங்கள் கழிந்தது.


ஒரு நாள் வழக்கம் போல கேண்டீனுக்கு போனேன். அன்று அவர் அங்கு இல்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண்மணி இருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரிக்க கேண்டீன் உரிமையாளரைத் தேடினேன். என்ன ஆயிற்று அவருக்கு நேற்று கூட வந்திருந்தாரே என என் மனம் கவலைகொள்ள அன்று முழுவதும் அவரைப்பற்றிய எண்ணங்களோடு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அந்த நாள் கழிந்தது. அடுத்த நாள் சற்று முன்னராகவே கிளம்பி கேண்டீனுக்கு சென்றேன். செல்லும் வழியெல்லாம் இன்று அவர் திரும்ப வந்திருக்க வேண்டும் என இறைவனை வேண்டியவாறு பதைபதைப்புடன் நடந்து கேண்டீனை அடைந்தேன். அவரது இருக்கையில் வேறொருவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போனது. கேண்டீன் உரிமையாளரைத் தேடி ஒருவழியாக அவரைப் பிடித்தேன். அவரிடம் எங்கே அந்த பெண்மணி என்று விசாரித்தேன். அவர் இனிமேல் வரமாட்டார் என ஒருவரியில் சொல்லிவிட்டு நகர்ந்தார். சரி அவர் வேறு எங்காவது வேலையில் சேர்ந்திருப்பார் என்று மனதை தேற்றிக் கொண்டேன். இருந்தாலும் இந்த தள்ளாத வயதிலும் வேலை செய்துதான் இருக்க முடியும் என்ற நிலையில் உள்ள வயதானவர்கள் மீது ஒருவித பரிவும் அரசாங்கத்தின் மீது கோபமும் வந்தது. வயதான காலத்தில் நாம் நிச்சயம் நமது தாய்நாட்டிற்கு போய் விடவேண்டும் என எனக்கு நானே பேசிக் கொண்டேன். அவரைப் பற்றி வேறு யாரிடம் விசாரிப்பது என்ற எண்ணத்தோடு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்தேன். அன்று ஏனோ எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. ஒருவித கவலையுடன் நடந்து வந்து என்னுடைய இருக்கையை அடைந்தேன். வரும் வழியில் என் நண்பன் மறித்து உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா மிகவும் சோர்வாக தெரிகிறாயே என கேட்டான். அவனிடம் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன்.


எனது கணினியை திறந்தேன். வழக்கம் போல அலுவலக மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன்.புதிதாக வந்திருந்த அஞ்சல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மின்னஞ்சல் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த மின்னஞ்சலில் இருந்த லிங்கை வேகமாக கிளிக் செய்தேன். அன்று ஏனோ திடீரென இணைய இணைப்பு மிகவும் மெதுவாக இருப்பது போல தோன்றியது. அந்த ஒரு சில வினாடிகள்  கூட எனக்கு ஒரு யுகமாக தோன்றியது. அந்த இணையப் பக்கம் முழுமையாக என் கணினித் திரையில் வந்திருந்தது. அந்த பக்கத்தில் அந்த கேண்டீன் பெண்மணியின் புகைப்படம் என்னைப் பார்த்து சிரித்தபடியே இருந்தது. அதை பார்த்ததும் என் விழித்திரையில் இருந்து மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. அதில் எழுதியிருந்த வாசகத்தை படித்தேன்.


“ சில வருடங்களாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நம்முடைய கேண்டீனில் பணியாற்றி வந்த திருமதி டெர்ரி நேற்று காலமாகி விட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வரும் ஞாயிறு அன்று கிறித்துவ தேவாலயத்தில் நடைபெறுகிறது. அதற்கான செலவிற்கு தங்களால் முடிந்த காணிக்கையை வழங்க இந்த பக்கத்தில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யவும் “
என்றிருந்தது.


சில நிமிடங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் டெர்ரியின் (ஆம் அன்று தான் அந்த அன்னையின் பெயர் எனக்குத் தெரிந்தது ) அந்த புன்சிரிப்போடு இருக்கும் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் என்னைப் பார்த்து சிரிப்பது போலவே தோன்றியது. அந்த புகைப்படத்தின் அருகில் சென்றேன். என் கண்கள் இன்னும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. அந்த புகைப்படத்தில் டெர்ரியின் முகத்தில் எனது விரல்களால் வருடினேன். இன்னும் அதன் அருகில் சென்று எனக்குள் நீண்ட நாட்களாய் என் உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த எனது ஆசையை அவருக்கு அன்புப் பரிசாக கொடுத்தேன்.ஆம் அந்த அன்னையின் புகைப்படத்தில் அந்த கருணை நிறைந்த உள்ளத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். பிரியா விடை பெற்று சென்ற அந்த மாசற்ற மாணிக்கத்திற்கு நான் அளித்த அன்புக் காணிக்கையை நினைக்கும் போதெல்லாம் இன்றும் என் கண்கள் நனைவது நிற்கவில்லை.


கதையாக்கம் : வாஞ்சி கோவிந்த் 

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...