Friday, July 31, 2020

கல் கட்டிடம்

மிச்சிகன் ஏரியின் மேற்குக்கரையில் அலைகளின் சலசலப்புச் சத்தம் ஓய்ந்து அமைதியாகி குதித்து விளையாடிய ஏரித் தண்ணீர் குளிரில் விரைத்து பனிப்பாறையாகி பள்ளி செல்லும் பிள்ளைகளின் விளையாட்டுத் தளமாகிக் கிடந்தது. அதன் அருகில் இருந்த அழகிய சிற்றூர்தான் டர்னர். இருபது வீடுகள் மட்டுமே உள்ள சிற்றூர் என்றாலும் அனைவருமே ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். மொத்த மக்கள்தொகை சுமார் நூற்றி இருபது பேர் மட்டுமே இருந்ததால் அருகிலுள்ள ஊருக்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். தங்களுக்கென்று பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஒரு சிறிய லைப்ரரியாவது கட்ட வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து உழைத்து பணவுதவி செய்து கருங்கல்லால் ஆன லைப்ரரியை கட்டி முடித்தனர். எல்லா வீடுகளும் மரத்தினால் செய்த வீடாக இருந்த தால் கல்லாலான லைப்ரரி கட்டிடம் அந்த ஊரிலேயே தனித்து விளங்கியதோடு எல்லோரும் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடிப் பேசிப் பழகும் இடமாக மாறி அது அந்த ஊர் மக்களின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. அனைவரது பங்களிப்பில் லைப்ரரியில் சுமார் ஐந்தாயிரம் புத்தகங்கள் சேர்ந்து அழகாக காட்சியளித்தது. 

வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் குளிர்காலமும் பனிப்புயல்களும் பலமுறை வந்து போனது. ஒவ்வொரு வருடமும் பனிப்புயல் காலத்தில் அனைத்து மக்களும் லைப்ரரியில் தஞ்சம் புகுந்ததால் அந்த ஊருக்கு வந்த சேதமெல்லாம் சில வீடுகளோடு போனதே தவிர மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கழிந்தது. 

இவ்வாறாக பல வருடங்கள் கழிந்த நிலையில், ஒரு வருடம் குளிர் காலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தாக்கியது. பனிப்புயல் சூறாவளியோடு சேர்ந்து ஊரையே புரட்டிப் போட ஊர்மக்கள் அனைவரும் லைப்ரரியிலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் சேமித்து வைத்த உணவையே அனைவரும் பங்கிட்டு உண்ணவேண்டியதாயிற்று. புயலின் வேகம் அதிகரிக்க மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து விழ மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் போனது. குளிர் வேறு மிகக் கடுமையாக லைப்ரரிக்குள் இருந்த அனைவரும் குளிர் தாங்காமல் நடுங்க ஆரம்பித்தனர். எப்படி இதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் தவித்த நிலையில், லைப்ரரியன் ஒரு யோசனை சொல்ல, ஊர்மக்கள் அனைவரும் அதற்கு உடன்பட மறுத்துவிட்டனர். இவ்வாறாக அரை இரவு முடிந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகளும், முதியோர்களும் குளிர் தாங்காமல் மயங்கி விழ ஆரம்பிக்க, வேறுவழியின்றி லைப்ரரியன் சொன்ன யோசனைக்கு ஒத்துக் கொண்டனர். 

அதன்படி லைப்ரரியில் அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கிச் சேகரித்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எரிக்க அதைச் சுற்றி ஊர்மக்கள் உட்கார்ந்து தங்களது குளிரைத் தவிர்க்கத் தொடங்கினர். இவ்வாறு அங்கிருந்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை காப்பாற்ற அவர்கள் கண்ணெதிரிலேயே எரிந்து சாம்பலானது. அரசாங்கத்திடம் இருந்து உதவி வர தாமதம் ஆக, லைப்ரரியில் இருந்த எல்லாப் புத்தகங்களும் எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டே இருந்தன. மறுநாள் மாலை மங்கிய நேரத்தில் லைப்ரரியின் கடைசிப் புத்தகம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில் ஆகாயத்தில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்க, அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அரும்பியது. 

சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய புத்தகங்கள் இப்படி ஒரே நாளில் தங்கள் கண் முன்னே எரிந்து சாம்பலானதை எண்ணி ஊரார் எல்லாம் வருந்தியிருக்க, இந்தக் கடும்குளிரில் இருந்து தன் மக்களை காப்பாற்றிய நிம்மதியில், கம்பீரமாக காட்சியளித்தது அந்த கல் கட்டிடம்.

#வாஞ்சிகதை#

Friday, July 24, 2020

அரங்கனே சாட்சி

குறுந்தொகை பாடல் 25 ஐ மையக் கருத்தாகக் கொண்டு எழுதியது.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

தலைப்பு: அரங்கனே சாட்சி !!!

காலைக் கதிரவனும் ஊரை எழுப்பிட ஒருமணி நேரம் ஆகும் அந்த ஊரில் உள்ள மலையை தாண்டி வர. எதிரி யாரும் எளிதில் வரமுடியாது ஊரைச் சுற்றி வளைவாய்ச் சாலையுண்டு, கோட்டையுண்டு, சந்தைப் பேட்டையுண்டு, கோட்டையைச் சுற்றி கோட்டைச் சுவருண்டு, சுவற்றுக்கு வெளியே நீரால் சூழ்ந்த அகல அகழியுண்டு, அகழியின் மறுபுறம் அகழிக்கரை உண்டு, கோட்டைச் சுவரில் ஆட்கள் நடந்து காவல் காக்க கட்டைச் சுவருண்டு. போர் வந்தால் மூடிக்கொள்ள ஒற்றைக் கதவுண்டு, மற்ற நேரம் மக்கள் வந்து போக மாற்று வழியுண்டு. கருங்கல் பாறையில் செதுக்கி வடித்த அடுக்காய் படியுண்டு, தடுக்கி விழாமல் ஏறி இறங்க ஒற்றைக் கைப்பிடியுமுண்டு. மலையின் மேலே போகப் போக மாடிகள் பலவுண்டு, ஒவ்வொரு மாடிக்கும் மரத்தால் செய்த பெரிய மரக்கதவுண்டு. வெயில் வந்தால் ஒதுங்கி நிற்க குன்றுகள் பலவுண்டு, தொடுக்கி நிற்கும் குன்றுகள் கண்டு பார்ப்பவர் பயமுண்டு. கனமழை வந்தால் பதுங்கி கொள்ள மண்டபம் பலவுண்டு.


மலையடிவாரத்தில் குடைவரை கோயில்கள் இரண்டு உண்டு. நின்ற கோலத்தில் சிவபெருமான் அவதரித்த சிவன் கோயில் ஒன்றுண்டு. அனந்த சயனத்தில் பள்ளிகொண்டு ரட்சிக்கும் பெருமாள் கோயில் ஒன்றுண்டு. கோவிலில் தொண்டூழியம் செய்பவர்கள் வாழ தனி இடமும், கோவில் அர்ச்சகர்கள் வாழ தனி இடமும் உண்டு. அந்த இடங்களுக்குள் போவதற்கு நிறைய கட்டுப்பாடு உண்டு. கோவில் திருவிழாக்களில் மட்டுமே அவர்கள் ஒன்றாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள், மற்றபடி அவர்களுக்கு இடையில் எப்போதும் ஒரு காழ்ப்புணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், நமது நாயகனும், நாயகியும் வாழ்ந்து வருகிறார்கள்.

நாதத்தின் கீதத்தை வேதமாய் நேசித்து வளர்ந்தவள். சாதத்தைப் பகிர்ந்து உண்டாலும் பாசத்தைப் பங்கிடத் தெரியாதவள். பூப்படைந்த நாள் முதல் பூரிப்பாய் மலர்ந்து பூவிற்கே போட்டியானாள் உலக அழகிப் போட்டியில்.
கிராமத்துக் குயில் என்றாலும் கூவுவது அக்ரஹாரத்துக் குடிலில் தானே.

கலை அழகு என்றாலும் கலையாத இந்தச் சிலையழகு நம் நாயகி. சிற்பமாய் செதுக்கி காலைக் கதிரவனின் காமாப் பார்வைக்குப் பயந்து, கருவறையில் பதுங்கி, பழரசமும் பாலும் கலந்து, பலமுறைக் குளித்து, பலவண்ணப் பட்டுடுத்தி அலங்கரித்த அம்மனும், தரிசிக்க வரும் நாயகியின் தரிசனத்திற்கு காத்து நிற்கும். தந்தை நாதஸ்வரம் வாசிக்க, தாயோ நட்டுவாங்கம் செய்ய, தனுசாய் வளைத்து ஆடும் சலங்கையில்லாத கால்களும் சலங்கை ஒலி எழுப்பும். கடவுளின் முன்னே கைவிரல் கோர்த்து கைவளை குலுங்க கைமாலை சூட்டிடும் காட்சிகண்டு வியந்து சாட்சியாய் நிற்பர் அனைவரும். ராகங்களில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த அபூர்வ ராகத்தின் பெயர் கல்யாணி.

கருவறை வரைச் சென்று வர கடவுச்சீட்டு பெற்ற குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்து மடையாக வரும் மந்திரங்களை தடையில்லாது உச்சரித்து பெருமாளையும் பெருந்தேவியையும் திருப்பள்ளி எழுந்தருளச் செய்யும் திருப்பணி செய்பவனின் திருநாமம் விச்சு என்ற விஸ்வநாதன். திருமாலின் திருமேனியை தினம் துடைத்தாலும், திருமகளின் திருமேனியை தினம் துதித்தாலும், நடனத்து நாயகியின் நயனத்தில் விழுந்து மொழியில்லாக் கிளியின் விழிபேசும் மொழிகண்டு மொழிந்தான் தன் காதலை.

நாதமும் வேதமும் நேசமாய் கலந்து வாசம் வீசியது எங்கும். சன்னதியில் ஆரம்பித்து பிரகாரத்தில் உறவாடி பிரவாகமாய் பெருகி பிரசாதமாய் இனித்தது.
மண்டபத்துக் கற்சிலைகள் மண்டியிட்டு மலைத்து நிற்க காதலரின் காதல் காட்சிகள் கோவில் சுவர்களில் சித்திரமாய் சித்தரிக்க மாடங்களில் கூடி மகிழும் மாடப்புறாக்களும் மயங்கி கூடுவிட்டுப் பறந்து கூச்சலிட விடைபெற விரைந்தவளை இடைமறித்து இடை வளைத்திட நடை தளர்ந்து மடை திறந்து உடை அவிழ்ந்து கடை விரித்திட தடை மறந்து தாங்கி நின்றான். அம்மனுக்கு ஆடை மாற்றி அழகு பார்க்கும் விச்சுவிற்கு, கல்யாணியின் ஆடைகள் விலகிட கற்சிலை கண்டு பழகியவன் பொற்சிலை கண்டு மலைத்து சிற்பங்கள் எல்லாம் மலர் தூவிட சில்வண்டுகள் நாதம் இசைத்திட அரங்கனின் அருகிலேயே அரங்கேற்றமானது அவர்களது அந்தரங்கக் காதல்.

நாதமும் வேதமும் கீதம் இசைத்திட பாதம் கலந்திட மாதம் மூன்றானது அவள் அதை உணர. அகத்தின் அசைவுகள் முகத்தில் தெரிந்திட நகத்தின் விளிம்புகள்
நனைந்து உதிர்ந்திட தாய்மையின் முகத்தை தாயும் அறிந்திட சின்னதாய் போர் மூண்டது வீட்டில். மூலம் தெரிந்ததும் ஞாலமே நின்றது. சாதியும் மதமும்
சேதியாய்ச் சொன்னது, வீதியும் ஊரும் மீதியைக் கொன்றது. எச்சில் வழியும் நாதஸ்வரத்தில் ஒருநாள் ரத்தமாய் வழிந்து சத்தமும் நின்றது மொத்தமும் முடிந்தது கல்யாணியின் தந்தைக்கு. கலையிழந்த மகளின் களைப்பைக் கண்டு கலைக்க அவள் அம்மா எவ்வளவோ கெஞ்சியும், மறுத்துவிட்டாள் மருத்துவமனை செல்ல.

செய்தியறிந்த வேதமோ, செய்வதறியாது திகைத்து வெளிநாட்டில் வாழும் சொந்தத்தின் வீட்டிற்கு சொந்தம் யாரும் அறியாமல் கடத்திவிட்டது விச்சுவை.
காதலித்து கரு தந்தவன் சாதலுக்கு முன் வருவானென நம்பியே வாழ்ந்தது நாதமும். மாதங்கள் கழிந்ததில் மகவைப் பெற்றெடுத்தாள் கல்யாணி.

தாசி குடும்பத்தில் வேசியாக வாழ்ந்து காசிற்காக பிறந்த பிள்ளையென கூசாமல் ஊரார் ஏசிட, மாசற்ற காதலின் மகத்துவம் அறியாத மக்கட்பதரென மன்னித்தாள். பெண்மையின் இலக்கணமாய் உண்மையாய் நேசித்தவனோடு தன்னைப் பகிர்ந்ததால், மண்ணில் பிறந்த மைந்தனை கண்ணில் வைத்து காத்திட கண்ணன் என பெயர் வைத்தாள்.

காலங்கள் உருண்டோடியது. கல்யாணியும் ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாள். கண்ணனும் பள்ளியில் படித்து வந்தான். அவனுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அப்பா தான். அந்த அளவிற்கு அவன் அவமானத்தை அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அவமானங்களை எல்லாம் தனது படிப்பில் காட்டினான். பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்தான். மாநில முதலமைச்சர் கையால் பரிசு வாங்க அவனுக்கு சென்னை போகும் வாய்ப்புக் கிடைத்தது.

பேரூந்தில் சென்னை சென்று இறங்கினான். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி விழாநடக்கும் மண்டபத்திற்குச் சென்றான். விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அம்மாவைக் கூட்டி வந்திருக்கலாமே என நினைத்து வருத்தப் பட்டான். கையில் பரிசுக் கோப்பையையும், சான்றிதழையும் வைத்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றான். அப்போது இரண்டு கால்களும் இழந்து, நடக்க முடியாத நிலையில் ஒரு பெரியவர் சாலையை கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து வருத்தப்பட்ட கண்ணன், அவருக்கு உதவிசெய்ய அவரை நெருங்கினான். அவரிடம், தனது கோப்பையையும், சான்றிதழையும் கொடுத்துவிட்டு, அவரை தனது இருகைகளால் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்தான். போகும் வழியில், அந்தப் பெரியவர் அவனை அருகாமையில் பார்க்க மனதுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு வருவதை உணர்ந்தார். 

சாலையை கடந்ததும், அவரிடம் எங்கே போக வேண்டும் எனக் கேட்டான் கண்ணன். அதற்கிடையில், அவர் கண்ணனிடம் அவனைப் பற்றி விசாரிக்க, அவனும் தனது கதையை சொல்லி முடித்தான். அவன் சொன்னதில் இருந்து அவன்தான் தனது மகன் என்பதை அந்த பெரியவர் அறிந்து கொள்ள நிறைய நேரம் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனிடத்தில் தான் தான் அவனது அப்பா என்று சொல்லவும் முடியவில்லை. அவரையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அவர் செல்ல வேண்டிய இடத்தில இறக்கி விட்டு விட்டு அவன் எழும்பூர் பேரூந்து நிலையம் நோக்கி சென்றான். அப்போதுதான் அவர் தனது பர்ஸை விட்டுப் போய்விட்டதை பார்த்தான். அதில் என்ன இருக்கிறது என பார்க்க, அதில் அந்த பெரியவரும், தனது அம்மாவும் இளவயதில் சேர்ந்து எடுத்த புகைப்படம் இருந்ததைப் பார்த்தான். உடனே ஆட்டோவை அந்த பெரியவர் வீட்டிற்கு திரும்பிப் போகச் சொன்னான்.

இதற்கிடையில், வீட்டிற்குச் சென்ற பெரியவர், தனது பர்ஸை ஆட்டோவில் விட்டுவந்ததை அறிந்தார். அது எப்படியும் தனது மகன் கையில் கிடைத்து விடும், அவனும் உடனே இங்கே திரும்பி வருவான் என உணர்ந்தார். விரைவாக தான் ஏன் அவர்களைப் பார்க்க வரவில்லை, எப்படி கால் ஊனமானது என்ற விவரங்களை ஒரு கடிதத்தில் எழுதினார். அதை வீட்டு வாசலில் செருகி வைத்துவிட்டு, அவர் தனது காதல் துணைக்காக பல வருடங்கள் முன்பு வாங்கி வைத்து இருந்த சேலையை எடுத்தார். அதன் ஒரு முனையில் தன் கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டுவிட்டு அடுத்த முனையை மின் விசிறியை நோக்கி வீசினார். சேலையை நன்றாக இழுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு, தனது சக்கர நாற்காலியில் இருந்து கீழே குதித்தார். அவரது அறையில் இருந்த அரங்கனின் படம் அப்படியே அசையாமல் நின்றது. அவரது உயிர் பிரியும் நேரத்தில், அரங்கனின் முன் அரங்கேற்றம் ஆன தனது காதல் நினைவுகள் வந்து போனது.

தனது உயிருக்குயிரான காதலி, தனது இந்த நிலையைப் பார்த்து வருத்தப் படக் கூடாது என்பதற்காக தனிமையில் வாழ்ந்து, தன் மகனும் வருத்தப் படக்கூடாதென தன் உயிரை மாய்த்துக் கொண்ட தனது தந்தையை தவறாக எண்ணி பலமுறை அவரை திட்டியது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் கண்ணன். அரங்கனை விட உயரமாகத் தெரிந்தார் விஸ்வநாதன் அவனுக்கு.


#வாஞ்சிவரிகள்#

அம்மாச்சி டெர்ரி




நான் நியூஜெர்சியில் பிரின்ஸ்டன் நகரில் வேலை செய்யும் காலத்தில் அங்கு அலுவலக கட்டிடத்திலேயே ஒரு கேண்டீன் இருந்தது. அங்கு தினமும் எட்டு வெள்ளிக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். நான் தினமும் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து போய்விடுவது வழக்கம். அதனால் அந்த எட்டு வெள்ளிக்கு தினமும் பிள்ளைகளுக்கு சாக்லெட், குக்கீஸ், பழங்கள், பழரச பானங்கள் போன்றவற்றில் ஏதாவது வாங்கிச் செல்வது வழக்கமாகி விட்டிருந்தது.


அந்த கேண்டீனில் கேஷ் கவுண்டரில் சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவர் வேலை பார்த்தார். அவர் பெயர்கூட எனக்குத் தெரியாது. அவர் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பைப் பார்க்க முடியாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல இருப்பார். எல்லோருக்கும் வாங்கிய சாமான்களை கணக்குப் பார்த்து எவ்வளவு என்று சொல்லும் போதே எவ்வளவு கறாராக இருக்கிறார் என்று சக நண்பர்கள் என்னிடம் கூறக் கேட்டிருக்கிறேன். எட்டு வெள்ளிக்கு மேலே இருந்தால் அந்த மீதியை கட்டிய பிறகுதான் சாமான்களை எடுத்துச் செல்ல விடுவார்.


நான் முதல் நாள் அவரை பார்த்த போது எனக்கும் மனதில் அவரைப் பற்றி அவ்வாறே தோன்றியது. ஆனால் அவரை கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ அவரைப் பற்றி ஒருவிதமான விவரிக்க முடியாத எண்ணம் தோன்றியது. அவர் எதற்கோ ஏங்குவது போல உணர முடிந்தது. அடுத்த நாள் முதல் அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் லேசான புன்முறுவல் செய்ய ஆரம்பித்தார். நானும் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். இவ்வாறு தினம் புன்னகைகளை பரிமாறிக் கொண்டவாறு நாட்கள் சென்றன. இருந்தாலும் என் மனதில் அவருக்குள் ஏதோ இனம் புரியாத சோகம் இருப்பதாக தோன்றிய வண்ணம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே எனக்கு மட்டும் எப்போதும் எட்டு வெள்ளிக்கு மேல் சொல்ல மாட்டார். சில சமயம் நானும் என் சக நண்பரும் ஒரே சாமான்களை எடுத்திருந்தாலும் எனக்கு மட்டும் எட்டுக்கு மேல் சொல்ல மாட்டார். நானும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவர் தவறாக கணக்கு பண்ணியிருக்கலாம் என்று நினைத்தேன். என் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமென்றே பத்து வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் எடுத்து அவரிடம் சென்றேன். ஆனால் அன்றும் அவர் எட்டு வெள்ளி என்று சொன்னதும் எனக்கு விளங்கி விட்டது. அவர் தெரிந்தேதான் எனக்காக செய்கிறார் என்று. அவர் எதற்காக எனக்கு மட்டும் அப்படி செய்ய வேண்டும் என எனக்கு இன்று வரை தெரியவில்லை. பிறகு ஒருநாள் நான் அவரை கடந்து செல்லும் போது என்னை அழைத்தார். அவருக்கு என் பெயர் கூடத் தெரியாது. அவர் அழைத்ததும் அருகில் சென்றேன். அவர் தன் பையிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து என்னிடம் நீட்டினார். இதில் நானே என் வீட்டில் செய்த கேக் உள்ளது. உனக்காக எடுத்து வந்தேன், சாப்பிடு என்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை எடுத்துக் கொண்டு போய் நானும் என் நண்பர்களும் சேர்ந்து சாப்பிட்டோம். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி உன்னிடம் மட்டும் இப்படி பாசமாக நடந்து கொள்கிறார் என புரியவில்லை என்று புலம்பினர். எனக்கும் அது புரியாத புதிராகவே இருந்தது. இது மாதிரி அடிக்கடி அவர் வீட்டில் செய்யும் கேக், ஸ்வீட் இவைகளை எனக்கு எடுத்து வந்து தருவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாச்சியை பார்ப்பது போலவே தோன்றியது. ஒருநாள் அவரை பார்க்காவிட்டாலும் ஏதேதோ எண்ணம் வந்தவண்ணம் இருக்கும். அதேபோல் நான் போகாத நாட்களில் அவர் என் நண்பர்களிடம் என்னை எங்கே என்று விசாரிக்க மறப்பதில்லை. நான் அவருக்கு எதுவும் திருப்பித் தந்ததில்லை. இப்படியாக சில வருடங்கள் கழிந்தது.


ஒரு நாள் வழக்கம் போல கேண்டீனுக்கு போனேன். அன்று அவர் அங்கு இல்லை. அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண்மணி இருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரிக்க கேண்டீன் உரிமையாளரைத் தேடினேன். என்ன ஆயிற்று அவருக்கு நேற்று கூட வந்திருந்தாரே என என் மனம் கவலைகொள்ள அன்று முழுவதும் அவரைப்பற்றிய எண்ணங்களோடு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அந்த நாள் கழிந்தது. அடுத்த நாள் சற்று முன்னராகவே கிளம்பி கேண்டீனுக்கு சென்றேன். செல்லும் வழியெல்லாம் இன்று அவர் திரும்ப வந்திருக்க வேண்டும் என இறைவனை வேண்டியவாறு பதைபதைப்புடன் நடந்து கேண்டீனை அடைந்தேன். அவரது இருக்கையில் வேறொருவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போனது. கேண்டீன் உரிமையாளரைத் தேடி ஒருவழியாக அவரைப் பிடித்தேன். அவரிடம் எங்கே அந்த பெண்மணி என்று விசாரித்தேன். அவர் இனிமேல் வரமாட்டார் என ஒருவரியில் சொல்லிவிட்டு நகர்ந்தார். சரி அவர் வேறு எங்காவது வேலையில் சேர்ந்திருப்பார் என்று மனதை தேற்றிக் கொண்டேன். இருந்தாலும் இந்த தள்ளாத வயதிலும் வேலை செய்துதான் இருக்க முடியும் என்ற நிலையில் உள்ள வயதானவர்கள் மீது ஒருவித பரிவும் அரசாங்கத்தின் மீது கோபமும் வந்தது. வயதான காலத்தில் நாம் நிச்சயம் நமது தாய்நாட்டிற்கு போய் விடவேண்டும் என எனக்கு நானே பேசிக் கொண்டேன். அவரைப் பற்றி வேறு யாரிடம் விசாரிப்பது என்ற எண்ணத்தோடு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்தேன். அன்று ஏனோ எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. ஒருவித கவலையுடன் நடந்து வந்து என்னுடைய இருக்கையை அடைந்தேன். வரும் வழியில் என் நண்பன் மறித்து உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா மிகவும் சோர்வாக தெரிகிறாயே என கேட்டான். அவனிடம் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன்.


எனது கணினியை திறந்தேன். வழக்கம் போல அலுவலக மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன்.புதிதாக வந்திருந்த அஞ்சல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மின்னஞ்சல் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த மின்னஞ்சலில் இருந்த லிங்கை வேகமாக கிளிக் செய்தேன். அன்று ஏனோ திடீரென இணைய இணைப்பு மிகவும் மெதுவாக இருப்பது போல தோன்றியது. அந்த ஒரு சில வினாடிகள்  கூட எனக்கு ஒரு யுகமாக தோன்றியது. அந்த இணையப் பக்கம் முழுமையாக என் கணினித் திரையில் வந்திருந்தது. அந்த பக்கத்தில் அந்த கேண்டீன் பெண்மணியின் புகைப்படம் என்னைப் பார்த்து சிரித்தபடியே இருந்தது. அதை பார்த்ததும் என் விழித்திரையில் இருந்து மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. அதில் எழுதியிருந்த வாசகத்தை படித்தேன்.


“ சில வருடங்களாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நம்முடைய கேண்டீனில் பணியாற்றி வந்த திருமதி டெர்ரி நேற்று காலமாகி விட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வரும் ஞாயிறு அன்று கிறித்துவ தேவாலயத்தில் நடைபெறுகிறது. அதற்கான செலவிற்கு தங்களால் முடிந்த காணிக்கையை வழங்க இந்த பக்கத்தில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யவும் “
என்றிருந்தது.


சில நிமிடங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் டெர்ரியின் (ஆம் அன்று தான் அந்த அன்னையின் பெயர் எனக்குத் தெரிந்தது ) அந்த புன்சிரிப்போடு இருக்கும் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் என்னைப் பார்த்து சிரிப்பது போலவே தோன்றியது. அந்த புகைப்படத்தின் அருகில் சென்றேன். என் கண்கள் இன்னும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. அந்த புகைப்படத்தில் டெர்ரியின் முகத்தில் எனது விரல்களால் வருடினேன். இன்னும் அதன் அருகில் சென்று எனக்குள் நீண்ட நாட்களாய் என் உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த எனது ஆசையை அவருக்கு அன்புப் பரிசாக கொடுத்தேன்.ஆம் அந்த அன்னையின் புகைப்படத்தில் அந்த கருணை நிறைந்த உள்ளத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். பிரியா விடை பெற்று சென்ற அந்த மாசற்ற மாணிக்கத்திற்கு நான் அளித்த அன்புக் காணிக்கையை நினைக்கும் போதெல்லாம் இன்றும் என் கண்கள் நனைவது நிற்கவில்லை.


கதையாக்கம் : வாஞ்சி கோவிந்த் 

செனாக் என்ற செர்ரி...




காலையில் விடிந்ததும் ஜன்னல் வழியாக கதிரவனின் கதிர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து மணி ஆறை தாண்டிவிட்டதை உணர்த்தியது. சரி இனியும் தூங்கினால் சனி முடிந்து ஞாயிறு கடந்து திங்கள் ஞாபகம் வந்துவிடும் என்று பயந்து மெத்தையில் இருந்து குதித்து எழுந்தேன். மேஜைமேல் வைத்திருந்த எனது கண்ணாடியை எடுத்து மாட்டியவாறு நிலைக் கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரிசெய்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். என்னங்க என்னமோ இன்றைக்கு தலைக்கு மேலே வேலையிருக்கு என்று சொன்னீர்களே என்று கேட்டவாறு மெத்தையை விட்டு எழுந்து வர மனமின்றி திரும்பிப் படுத்து விட்டாள் என் மனைவி. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது இன்றைக்கு ஹேர் கட்டிங் போகவேணும் என்று நேற்று இரவே என் மனைவியிடம் சொன்னது.


சார்ஜ் ஆகி முடிந்து இரவு முழுக்க வந்த லைக்குகளையும், கமெண்டுகளையும் கவுண்ட் செய்து வைத்துக் கொண்டு, எப்ப நம்ம எஜமான் எடுத்து அந்த பாரத்தை பார்த்து இறக்கிவைப்பான் என்று எண்ணியவாறு எனது செல்போன் காத்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து கிரேட் கிளிப்ஸ் ஆப்பை திறந்து, முடிவெட்டிக் கொள்ள நேரத்தை முன்பதிவு செய்துவிட்டு காரில் ஏறி கடையை நோக்கி வண்டியை செலுத்தினேன்.


கடையின் வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் "welcome to great clips “ என்று அங்கு பணிசெய்யும் பெண்கள் வரவேற்க சற்று பரவசமாகி, திரும்பி நன்றிகளை கூறிவிட்டு அங்குள்ள இருக்கையில் அமரும் முன்பே கவுண்டரில் நின்ற இரு பெண்களில் ஒருவர் "did you already check in? What is your name “ என்று கேட்டதும், “yes, vanchi “ எனப் பதில் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அந்தப் பெண்மணி அவரோடு நின்ற மற்றொரு பெண்மணியிடம் எப்படி வாடிக்கையாளர்களை பதிவு செய்வது, எப்படி வேலைக்கு அழைப்பது என்று விளக்கிக் கொண்டிருந்தார். அதிலிருந்து அந்தப் பெண்மணி அன்றுதான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் எனத் தெரிந்தது. அந்தப் பெண்மணிக்கு சுமார் 75 முதல் 80 வயது இருக்கும். அவரது கைகளும் தலையும் லேசாக ஆடுவது கண்டு எனது மனம் சற்று கலங்கியது. இந்த வயதிலும் இப்படி வேலை செய்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறதே என்று டிரம்ப்பின் மீதும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் மீதும் எனது எரிச்சலை காட்டிவிட்டு, எனது பெயரை அழைப்பதற்கு காத்திருந்தேன். அந்தப் புதிய பெண்மணி "வாஆஞ்சிஇ” என்று அழைத்ததும் எனக்கு சிறுதயக்கம் வந்தாலும், உடனே அந்தப் பெண்மணியின் முதல் வாடிக்கையாளனாகச் செல்ல வாய்ப்பு கிடைத்தது கண்டு ஏதோ ஒரு வகையில் அவருக்கு உதவப்போகிறோம் என்று எண்ணியவாறு அவர் பின்னால் சென்று அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன். அவர் எனது கழுத்தைச் சுற்றி துணி கட்டுவதற்கும், துண்டினைச் சுற்றி கட்டுவதற்கும் பட்ட சிரமம் கண்டு மனம் இன்னும் கூடுதலாக வருத்தம் அடைந்தது. அவர் எனக்கு எப்படி முடிவெட்டுவார் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. எப்படியாவது நல்லபடியாக முடிவெட்டி முடிக்க வேண்டும் என்றே இறைவனை வேண்டினேன். அவர் என்னிடம் எப்படி முடி வெட்ட வேண்டும் என்று கேட்கும் போது கூட குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. நானும் போனமுறை செய்ததன் குறிப்பில் உள்ளது போலவே வெட்டுங்கள் என்று சொல்லி விட்டேன். அவர் எப்படி வெட்டினாலும் பரவாயில்லை அவருக்கு நம்மால் முடிந்தது ஐந்து வெள்ளி டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். முடிவெட்ட ஆரம்பித்து சில நிமிடங்கள் நிசப்தமாக கழிந்தது. நான் எப்போதும் முடிவெட்டுபவரிடம் ஏதாவது பேச்சுக் கொடுப்பது வழக்கம்.(ஏதாவது கதை கிடைக்கும் என்ற நப்பாசைதான்) இன்று ஏனோ எனக்கு எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது பேசுவோம் என்று பேச ஆரம்பித்தேன்.


"நீங்கள் கேட்டியிலா வசிக்கிறீர்கள்?” என்று எனது முதல் கேள்வியை கேட்க, அவரும் "ஆமாம். நீ இந்தப் பகுதியிலா வசிக்கிறாய்?” என்று அவர் சொல்ல, பேச்சு ஆரம்பித்தது. அடுத்து அவரிடம் , இன்று தான் உங்களுக்கு இங்கு முதல் நாள் வேலையா?” என்று நான் கேட்க, அவரும் , “ஆமாம் இன்று தான் நான் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். நீ தான் எனது முதல் வாடிக்கையாளர்” என்று சொன்னார். நான் உடனே அதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றதும், அவர் மிக்க நன்றி என்று சொல்லி நகைத்தார். அடுத்து அவரிடம், ‘இதற்கு முன்னாள் எங்கு வேலை பார்த்தீர்கள் “ என்று கேட்டதும், அவர் தனது கதையை சொல்லத் தொடங்கினார். 


நான் இந்த கேட்டிப் பகுதியில் 33 ஆண்டுகளாக வசிக்கிறேன். இதற்கு முன்பு 26 வருடங்கள் சொந்தமாக முடி திருத்தும் கடை வைத்திருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு, அதை விற்று விட்டு வீட்டில் வேலையேதும் செய்யாமல் இருந்தேன். ஆனால் எனக்கு வீட்டில் வேலையேதும் செய்யாமல் வீட்டில் இருக்க முடியவில்லை. தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது. அதனால் தான் மீண்டும் இந்த வேலைக்கு வந்துள்ளேன் என்று சொல்லி முடித்தார். உடனே எனது அடுத்த கேள்வியை  ஆரம்பித்தேன்.  உனக்கு வீட்டில் யாரும் இல்லையா ? உனக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா ? என்று கேட்டேன். அதற்கு அவரும் எனக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள் இருந்தாலும் நான் எனது வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி முடிக்கையில்,  எனக்கு அவரது பிள்ளைகள் மீது கடும் வெறுப்பும் கோபமும் வந்தது.  தொடர்ந்து அவரிடம் ஏன் அவர்களுடன் சென்று இருக்க வேண்டியது தானே என்று கேட்க,  அவரோ” நான் இங்கு சுதந்திரமாக இருந்து பழகி விட்டேன்... அங்கு சென்றால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே.  அதனால்தான் நான் மறுத்து விட்டேன் என்றார்.” சரி அவர்கள் என்ன செய்கிறார்கள்?  எங்கு இருக்கின்றார்கள்? என்று கேட்டதும் அவர் அவர்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.


எனது மூத்த மகன் மருத்துவம் முடித்துவிட்டு ஹூஸ்டனில் மருத்துவராய் பணி செய்கிறார். இரண்டாவது மகன் பல் மருத்துவர், அவர் லாஸ் வேகாஸில் பல் மருத்துவமனை வைத்து  அங்குள்ளார்.  மூன்றாவது மகன் டாக்டர் பட்டம் முடித்து விட்டு நாசாவில் விஞ்ஞானியாக உள்ளார்.  மேலும் அவர் எப்போதும் ஹூஸ்டன் மேயருடன் சேர்ந்து அவரது திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.  என் ஒரே மகள் கலிபோனியாவில் வேலை செய்கிறாள்.  எல்லோரும் நல்லபடியாக படித்து முடித்து விட்டு நல்ல வேலையில் இருக்கிறார்கள்.  நானும் இங்கு தனியாக சுதந்திரமாக வாழ்வை கழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி முடித்தார். 


 இதற்கிடையில் எனக்கு அவர் முடி வெட்டி முடித்துவிட்டார்.  எனக்கு என்னுள் ஏற்பட்ட வியப்பையும்,  அவர் மேல் ஏற்பட்ட மரியாதையும் கட்டுப்படுத்தமுடியாமல் கண்களின் ஓரத்தில் லேசாக கண்ணீர் கசிந்தது.  அவர் என்னிடம்’ எப்படி இருக்கிறது ஹேர்கட் ‘ என்று கேட்டு கண்ணாடியை எடுத்து எனக்குப் பின்னே வைத்து கேட்டார்.  நான் இன்னும் எனது மூக்கு கண்ணாடியை போட வில்லை இருந்தாலும் அவரிடம் மிகச் சிறப்பாக உள்ளது என்று சொன்னவுடன் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை கண்டு நானும்  மகிழ்ந்தேன்.  அவரிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்.  அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து என்னோடு நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்க நான் எடுத்த செல்பி  தான் இந்த புகைப்படம்.  நான் முன்னரே முடிவு செய்த மாதிரி ஐந்து வெள்ளியை அவருக்கு டிப்ஸாக கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறும் முன் அவரிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். “ ஆமா உங்கள்  பெயர் என்ன?”  என்று.


“  என் பெயர்  செனாக் என்ற செர்ரி” என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரை  கவனிக்கச் சென்றுவிட்டார். முடி வெட்டும் இடத்தில் கிடைத்த மகிழ்ச்சியுடன் கடையை விட்டு செர்ரியின்  நினைவுகளைச் சுமந்து வெளியேறினேன். கடையை விட்டு வெளியில் வந்ததும் கணவனை இழந்த பிறகு இந்தியாவில் வசிக்கும் எனது அன்னையின் நினைவு வந்தது மட்டுமல்லாமல் குறுந்தொகையில் கபிலர் எழுதிய பாடல் வரிகளும், அதற்கு நான் எழுதிய எளிய தமிழ் கவிதையும் நினைவில் வந்தது.


#115 குறிஞ்சி திணை - தோழி கூற்று


தலைவனும் தலைவியும் இளமைக் காலத்தை இனிமையாக கழித்து முதுமை அடைகிறார்கள். முதுமைக் காலத்தில் தலைவியை தலைவன் சரியாக பாதுகாக்கத் தவறிவிடுகிறான். தலைவியின் தோழி தலைவனிடம் " இளமைக் காலத்தில் தலைவியை நீ போற்றிப் பாதுகாத்தது சிறப்பாகாது. முதுமைக் காலத்திலும் அவ்வாறே காப்பதுதான் அதைவிட சிறப்பு " என எடுத்துச் சொல்லும் பாடல் வரிகள்.


குன்றினில் புகுந்து வரும் 
தென்றல் இதமாய் தீண்டிட
அசைந்தாடும் மூங்கிலில்
இசைத்திடும் நாதத்தில்
மெல்லிடை வளைத்து
துள்ளிடும் வனமான்கள்
களிறுகள் உதிர்த்த
தளிரிலை ருசித்து
குளிரினில் விடைத்து
வெளியிடை ரசித்து
துஞ்சும் மலைதனை
நெஞ்சில் வீரமொடு
அஞ்சாது ஆளும் எந்தன்
தலைவனே மலைநாடனே


பெருநன்மை செய்தாரை
பெரும்பேறாய் எண்ணி
போற்றாதாரும் உளரோ
போற்றுதல் இயல்பேயன்றி
சிறப்பேதும் அதில் உண்டோ


உன்வழி நடந்து
தன்வலி மறந்து
உன்னுயர்வு காண
கண்ணயர்வு துறந்து
உனையன்றி வேறுலகை
உணர்வாலும் அறியாது
இளமயிலாய் தோகைவிரித்து
இளமையை ஈன்று தொலைத்து
முதுமையைத் தழுவி நிற்கும்
பதுமையென் தலைவியை
பாதுகாப்பாய் சிறப்புடனே
பேதமில்லாப் பெருமகளை
பேணிடுவாய் விருப்புடனே
நிழலாய் வரும் நிலவவளை
நெஞ்சில் வைத்துப் போற்றிடுவாய்..!!

பாடியவர்: கபிலர்
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே. 


# வாஞ்சிவரிகள்#

என்னுள் !!!!


சில மாதங்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்த தொடர் மூன்று பாகங்களுடன் நேரமின்மையால் நின்று விட்டது. இத்துடன் நான்காம் பாகமும் இணைந்துள்ளது. நீளமான பதிவுதான் ஆனால் முழுக் கதையும் இணைந்து உள்ளது.

பாகம் - 1

ஹூஸ்டன் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் அந்த ஆண்டிற்கான புதுமுகங்களை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாத கோடை வெயிலும் தனது வெப்பத்தை பூமியில் செலுத்த மெதுவாக வானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரிசையாக வாகனங்கள் வர ஆரம்பித்திருந்தது. சரி இனி வரவேற்பு அறையைத் தாண்டி உள்ளே செல்வோம்.

பெரிய ஹால்..அதன் ஒரு முனையில் மேடை போடப்பட்டிருந்தது. ஹால் முழுவதும் வரிசையாக மிக நேர்த்தியாக இருக்கைகள் போடப் பட்டிருந்த து. மேடையின் பின்னே உள்ள வெள்ளைத் திரையில் புரொஜக்டரில் இருந்து உமிழும் ஒளிக்கற்றைகள் பல வண்ணக் காட்சியாக வெள்ளைத்திரையை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதன் நடுவில் "இளம் சிறுத்தைகளே வருக" என ஆங்கிலத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தது. வளாகத்தின் வாசலில் இருந்து ஹால் வரை உள்ள சாலையின் இருபுறமும் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவியர் கூட்டம் கூட்டமாக நின்று புதிய மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தார்கள். அரை டிரவுசரும் குளிர்த் தோள் சட்டையும் அணிந்த மாணவிகள் கையில் "எங்கள் கல்லூரி பிடித்திருந்தால் கார் ஹாரனை அழுத்தவும்" என்ற வாசகம் ஏந்திய பேனர்களை காட்டி நிற்க, அனைத்து கார்களும் ஹாரனை அழுத்தி அதை ஆமோதித்த வண்ணம் நகர்ந்து பார்க்கிங்கிற்கு சென்றார்கள்.

மாணவ மாணவியர் கொஞ்சம் கொஞ்சமாக ஹாலை நிரப்ப ஆரம்பித்தார்கள். மேடையில் நியான் விளக்குகள் பளிச்சிட பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் அமர்ந்திருக்க, கல்லூரி வேலிடிக்டேரியன் தனது பேச்சை ஆரம்பித்து எல்லா புதிய மாணவரையும் வரவேற்றும் கல்லூரியின் பெருமைகளையும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அரங்கு நிறைந்திருந்தது. கல்லூரி முதல்வரின் உரைக்குப் பிறகு கல்லூரி கவுன்சிலர் தலைவர் நிகழ்ச்சி நிரலை படித்து விட்டு இனி புதிய மாணவர் மாணவியர் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து விட்டு அமர்ந்தார். மாணவர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் புதிய முகங்களைக் கண்ட மகிழ்ச்சியுடனும் அடுத்த நான்கு வருடம் கழிக்கப் போகும் இடத்தைப் பார்த்த பூரிப்பிலும் இருந்தார்கள்.

மேடையில் நின்ற கல்லூரி மாணவி ஒவ்வொரு பெயராக அழைக்க ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் தங்களது பெயர் சொன்னதும் எழுந்து நின்று தங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். ஹால் நிசப்தமாக இருந்தது. எழுந்து நின்று பேசும் மாணவர் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. 
நுனி நாக்கில் பேசும் ஆங்கிலத்தில் அந்த இளம் அமெரிக்கப் பெண் பெயரை படிப்பது அந்தப் பெயருக்கு சொந்தக்கார ரால் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
கிறிஸ்டோபர் ஜோன்ஸ் என்ற பெயரை அழைத்தவுடன் எழுந்து நின்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் கிரிஸ். எனது பெயர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். நீங்கள் என்னை கிரிஸ் என்று அழைக்கலாம். நான் விர்ஜீனியா மாநிலத்தில் இருந்து வந்துள்ளேன். இந்தக் கல்லூரியில் படிப்பது எனது இளம் வயதுக் கனவு. உங்களை எல்லாம் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசிவிட்டு அமர்ந்தான். அடுத்தடுத்து நிறைய ஆசிய மாணவ மாணவியர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு இருந்தார்கள். வேண்டா வெறுப்புடன் தனது ஆண்டிராய்டை பார்த்துக் கொண்டிருந்தான் கிரிஸ். எப்போது இந்த நிகழ்ச்சி முடியும் எப்போது வளாகத்தை சுற்றிக் காட்டப் போகின்றார்கள் என்ற எண்ணத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.

மேடையில் அடுத்த பெயரை தனது நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாசித்தாள் அந்த கல்லூரி பளிங்குச் சிலை. கேட்டி டெக்ஸாஸில் இருந்து வைஷ்ணவி என்று சொல்லி முடிப்பதற்குள் கிரிஸின் இதயத்தில் ஒரு மின்னல் வெட்டியது. ஆண்ட்ராய்டை மடக்கி வைத்துவிட்டு தனது பார்வையை மாணவர் மத்தியில் சுழலவிட்டான். வைஷ்ணவி என்ற பெயருக்குச் சொந்தமான உருவத்தைத் தேடினான். நெஞ்சு படபடத்தது. ஏதோ மனதில் இனம்புரியாத தவிப்பு உருவானதை அவனால் உணர முடிந்தது. அவனது பார்வைக் கதிர்கள் கூட்டத்தைச் சுற்றிவரும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. சில வினாடிகளில் லேசர் கதிர்பட்டு நிற்கும் கருவி போல அவளது உருவத்தில் இடித்து பார்வை நிலைபெற்று நின்றது. ஏதோ அவளை பல வருடம் பார்க்காமல் இருந்து மீண்டும் இன்றுதான் பார்த்தது போல உணர்ந்தான். அவனது உதடுகள் அவனை அறியாமல் வைஷ்ணவி என்று முணுமுணுத்தது. நிகழ்ச்சி முடியும் வரை அவள் இருந்த இடத்தை நோக்கியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். மனதில் அவளைப் பற்றிய நினைவுகள் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தண்ணீர் பட்டு கலைந்து போன காட்சியாய் வந்து வந்து போய்கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அவனை அறியாமலே அவளை நோக்கி கால்கள் நகர அவள் எதிரில் போய் நின்றான். ஆயிரம் வாட் பல்பாய் அவனது முகம் மலர்ந்திருந்தது. அயம் கிரிஸ் என்று அவளது வலது கையைப் பிடித்து குலுக்கினான். அவளும் அயம் வைஷ்ணவி என்று சொல்லி ஒரு சிறு புன்னகையை உதிர்த்தாள். தன்னை மறந்து யெஸ் ஐ நோ என்று அவன் பதிலுரைக்க அவள் சற்றே அதிர்ந்து அவனது கண்களை நோக்கினாள்.

பாகம் - 2
வைஷ்ணவி 

இந்தியாவில் தமிழ்மண்ணில் பிறந்து அரசு பள்ளியில் பள்ளிக் கல்வி முடித்து, நுழைவுத்தேர்வு எழுதி, பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் கிடைத்த தனியார் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி, பிரபல இந்தியக் கணினி கம்பெனியில் சில வருடம் வேலை பார்த்து, பிறகு ஹெச் விசாவில் அமெரிக்கா வந்து செட்டில் ஆன அசோக்குமாருக்கும், இதே போல படித்தாலும், கல்லூரி நாட்களில் கூடுதலாக ஒரு எலெக்டிவ் படித்து (அதாங்க காதல்), காதலனையே திருமணம் செய்து, அவருடனே அமெரிக்கா வந்த கவிதாவிற்கும் பிறந்த செல்லக் குட்டிதான் நம் வைஷ்ணவி. பெற்றோருக்கே ஒரு பாரா என்றால், நம் ஹீரோயினுக்கு குறைந்தது ஒரு பாகமாவது தேவைப்படும் அவளை அறிமுகம் செய்ய அல்லவா?

அவள் பிறந்ததே ஒரு குட்டிக்கதை. அமெரிக்கா வந்த அசோக்கும் கவிதாவும் முதல் மூன்று ஆண்டுகள் ஜாதகப்படி சேர்ந்து வாழக்கூடாது என கார்பரேட் ஜோதிடர் சொல்லி விட, மேரிலேண்ட் மாகாணம் எலிகாட் சிட்டியில், ஹோவர்ட் கிராசிங் என்ற அபார்ட்மென்ட் கம்யூனிட்டியில் பேக்ரவுண்ட் விசாரித்து, மாதமாதம் வாடகை கொடுப்பார்களா என பேங்க் பேலண்ஸ் பார்த்து, விசா பார்த்து கடைசியில் ஐநூறு சதுர அடியில் ஒரு ஹால், ஒரு படுக்கையறை, ஒரு அடுப்பறை, ஒரு கழிப்பறை உள்ள அபார்ட்மென்ட்டில் கிராண்டாக பால் காய்ச்சி குடியேறினார்கள். வால்மார்ட்டில் பால் வாங்கி, ஹோம்டிப்போவில் பூ வாங்கி, அடுப்படி மேடையில் திடீரென முளைத்த பூஜையறையில், அம்மா கொடுத்து அனுப்பிய அட்டைப் பிள்ளையாரை நிறுத்தி, இரண்டு சேனல்களில் சொந்தங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்து அதாங்க இருவரது செல்போனில் உள்ள பேஸ்டைம் வழியாக, எல்லோரும் ஆன்லைனில் வாழ்த்திட, அருகில் உள்ள அலுவலக நண்பன் குடும்பத்தோடு வந்து உதவிகள் செய்ய இனிதே பால்காய்ச்சும் விழா நிறைவு பெற்றது.

அசோக்கிற்கு பால்டிமோரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை. கவிதாவிற்கு அட்லான்டாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை. அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்தால் தான் இங்குள்ள மற்ற இந்தியக் குடியேறிகளுடன் சரி சமமாக போட்டி போட்டு வாழ்க்கையை நடத்த முடியும் என்று எழுதப் படாத நியதியை யாரோ எழுதி வைத்துவிட்டார்கள். எனவே மாதம் ஒரு முறை மட்டுமே ஒரே வீட்டில் இரண்டு நாட்கள் சேர்ந்து தங்குவார்கள். அதில் வாசிங், அயர்னிங், மளிகை ஷாப்பிங், மற்ற ஷாப்பிங், பேக்கிங், குக்கிங் இது எல்லாம் போக நேரமிருந்து மூடிருந்தால் அந்த கிங்கும் தான். இப்படி எல்லாமே அவசரகதியில் நடந்தால் குழந்தை எப்படிப் பிறக்கும். ஊரில் இருந்து இரு வீட்டாரும் போன் பண்ணும்போதெல்லாம் விசேஷம் ஏதும் இல்லையா என்று கேட்டு இம்சை வேறு. அதுமட்டுமன்றி என்ன பிளானிங்கா என்ற கேள்வி வேறு. இங்கு நடப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் பாவம். இப்படி பிளானிங் இல்லாமலே இரண்டு ஆண்டுகள் பேமிலி பிளானிங் செய்த தம்பதிகளாக கழிய, ஒரு வழியாக கவிதாவிற்கு பால்டிமோரில் ஒரு வேலை கிடைத்ததும் அதை தொடர்ந்து கவிதா கருவுற்றாள்.

கருவுற்ற மாதத்தில் இருந்து வீட்டில் பட்டி மன்றம் ஆரம்பித்து விட்டது. யாருடைய பெற்றோரை பிரசவத்திற்கு கூப்பிடுவது என்று. கடைசியில் எப்போதும் போல மகளிர் அணியே வெற்றி பெற கவிதாவின் பெற்றோரை அழைப்பது என தீர்ப்பு வழங்கி அவர்களுக்கு விசாவும் டிக்கட்டும் எடுத்து அனுப்பினார்கள். பிப்ரவரி குளிரில், வெண்பனி நிலமகளை போர்த்தியிருக்க 
பால்டிமோர் மருத்துவமனையில் வைஷ்ணவி பிறந்தாள். ஐஸ் கட்டி சூழ்ந்திருந்த காரணத்தினாலோ என்னவோ அவளுக்கு வைஷ்ணவி என்று பெயர் வைத்தார்கள் போல. நிலத்தில் பிறந்த நிலவாய் ஜொலித்தாள் நம் வைஷ்ணவி. வீட்டில் இந்தியக் கலாச்சாரமும் பள்ளியில் அமெரிக்கக் கலாச்சாரமும் அவளுக்கு போதிக்கப் பட சிறு வயதிலிருந்தே துறுதுறுவென எல்லாரையும் கவர்ந்தாள். பாட்டி தாத்தாவின் விசா முடியும் வரை மட்டுமே வைஷ்ணவி வீட்டில் இருந்தாள். பிறகு காலை ஏழு மணிக்கு வெளியில் சென்றால் இரவு ஏழு மணிக்கு தான் வீட்டிற்கு வருவாள். பெற்றோருடன் செலவிட்ட நேரத்தைவிட நானியிடமும் மாண்டிசோரி ஆசிரியரிடமும் செலவிட்ட நேரமே அதிகம். மூன்று வயது வரை குழந்தைகள் காப்பகம், மூன்றிலிருந்து பிரீ கேஜி , பிறகு மாண்டிசோரி வகுப்புகளில் படித்து விட்டு, ஆறு வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து பள்ளி முடிந்ததும் ஆப்டர் கேரில் ஏழு மணி வரை காத்திருந்து விட்டு பிறகு அம்மாவுடன் வீடு செல்வாள். சில ஆண்டுகளில் அசோக்கிற்கு பால்டிமோர் கம்பெனியில் லே ஆப் ஆகிவிட, அடுத்த வேலை நியூ ஜெர்சியில் கிடைத்தது. அதனால் அவர்களது குடும்பம் அங்கே மாறியது. வைஷ்ணவி அங்கு பிலைன்ஸ்பரோ கம்யூனிட்டி நடுநிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்தாள். வருடத்திற்கு எட்டு மாதம் குளிர் அதிகமாக இருந்ததால், அங்கிருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.

மேரிலாண்டில் இருந்து நியூ ஜெர்சி வழியாக கடைசியில் டெக்ஸாஸ் மாநிலம் வந்து கேட்டியில் சொந்த வீடு வாங்கி குடியேறியது வைஷ்ணவியின் குடும்பம். கேட்டியில் பிரசித்தி பெற்ற செவன் லேக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து விட்டு, ஹூஸ்டனில் உள்ள பல்கலை கழகத்தில் இளங்கலை சைக்காலஜி படிப்பதற்கு தேர்வு பெற்று, அதற்கான ஓரியன்டேஷன் நடக்கும் இடத்தில் தான் கிரிஸை முதன்முதலாக சந்தித்து அவனது பதிலில் அதிர்ந்து நின்றாள். அமெரிக்க ஆணழகுப் போட்டி வைத்தால் அவனுக்குத் தான் நிச்சயம் முதல் பரிசு கிடைக்கும். அந்த அளவிற்கு அழகும் உடற்கட்டும் உடையவனாக இருந்தான். இவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது என்ற குழப்பத்தோடு நின்று கொண்டிருக்கையில், “how is Rahul?” என்று அவளது தம்பியைப் பற்றி அவன் விசாரித்தவுடன் அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நல்ல வேளையாக அப்போது அவளது அம்மா அருகில் வந்தவுடன் சற்றென்று அவனிடமிருந்து விலகி அம்மாவின் தோளில் சாய்ந்தாள். அவளது அம்மா என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் மகளை அணைத்துக் கொண்டு அவளருகில் நின்ற கிரிஸை நிமிர்ந்து பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் அவளையே துளைத்துக் கொண்டு போவதாக தோன்றிட அவனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். இருந்தும் ஏதோ ஒரு வித்தியாசமான அனுபவம் நடப்பது போல உணர்ந்தாள். உடம்பெல்லாம் வழக்கத்திற்கு அதிகமான வேகத்தில் இரத்த ஓட்டம் நடப்பதாக தோன்றிட அருகில் இருந்த நாற்காலியில் மகளுடன் அமர்ந்தாள். கிரிஸ் வைத்த கண் எடுக்காமல் அம்மாவையும் மகளையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

பாகம் - 3
கிறிஸ்டோபர் ஜோன்ஸ் 

இத்தாலியில் மிக பிரசித்தி பெற்ற பேஸ்ட்ரி ஜெலாடோ தயாரிப்பாளரான ஹஸனின் பேரனும், அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேஸ்ட்ரி செக்சனில் சீப் செப்பாக வேலை செய்யும் மசாரியின் மகனுமாய் மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் நம் கிரிஸ். விர்ஜீனியா  மாநிலத்தில் ஆர்லிங்டன் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்து விட்டு, கிறித்துவ உயர்நிலை பள்ளியில் உயர்நிலை கல்வி படித்தான். பள்ளியில் படிக்கும் போதே கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவனாக விளங்கினான். குறிப்பாக குதிரையேற்றத்தில் மிகத் திறமை வாய்ந்தவனாக பல போட்டிகளில் பங்கு பெற்று பல கோப்பைகளை வாங்கி குவித்தான். உடற் கட்டில் சிக்ஸ் பேக் இளைஞன் என்றால் அது நம் கிரிஸ் தான். 

வாஷிங்டன் பகுதியில் உலக அளவிலான குதிரையேற்றப் போட்டி நடைபெற அதில் பல நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில் அமெரிக்கா சார்பில் நம் கிரிஸ் கலந்து கொண்டான். கால் இறுதிச் சுற்று, அரை இறுதி சுற்று இரண்டிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினான். இறுதி சுற்றில் பங்கேற்கும் முன்னர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம், குதிரையில் ஏறி வேகமாக சுற்றி வந்துகொண்டிருந்த போது, கடிவாளத்தில் இருந்து அவனது கைகள் அசம்பாவிதமாக நழுவியது. குதிரையில் இருந்து எதிர்பாராத விதமாக தரையில் விழுந்தான் கிரிஸ். மிரண்ட குதிரையும் திடீரென குதித்து தாவிட, அதன் பின்னங்கால்கள் இரண்டும் தரையில் கிடந்த கிரிஸின் நெஞ்சில் பதித்து மிதித்து விட்டு ஓடியது. கிரிஸ் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்தான்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை கழக மருத்துவமனை, வாஷிங்டன் நகரின் மத்தியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கருங்கல் கட்டிடம். அமெரிக்க ஜனாதிபதி முதல் அனைத்து பெருந்தலைவர்களும் சிகிச்சைக்காக வந்து போகும் மிக சிறந்த மருத்துவமனை என்று பெயர் பெற்ற மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் திறமை வாய்ந்த மருத்துவர்கள் சுற்றி நிற்க அசையாமல் கண்மூடி படுக்கையில் படுத்திருந்தான் கிரிஸ். மருத்துவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள். கலிபோர்னியாவில் இருந்து இதய சிகிச்சை நிபுணர் ரசல் நெல்சன் விமானத்தில் வந்து இறங்கினார். கடைசியில் கிரிசிற்கு மாற்று இருதய சிகிச்சை செய்வதாக முடிவு செய்தனர். அதற்காக அமெரிக்கா முழுவதும் இருந்து இருபத்திநாலு மணி நேரத்திற்குள் இறந்த ஆண்களில் உறுப்பு தானம் செய்வதாக பதிந்தவர்களை பற்றிய தகவல் சேகரிக்கப் பட்டது. அதில் கிரிசிற்கு பொருந்தும் வகையில் உள்ள இதயம் தனி விமானத்தில் எடுத்து வரப் பட்டது. டாக்டர் நெல்சன் தலைமையில் எட்டு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அனஸ்தீசியாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிரிசிற்கு தனது இதயம் மாற்றப்பட்டதே தெரியாமல் சுவாசம் மட்டும் வந்து போய்க்கொண்டு இருந்தது. முழுவதுமாக குணமடைந்து வீட்டுக்கு வந்து சேர மூன்று மாதம் ஆயிற்று. அந்த விபத்தில் நிறைய ரத்தக் கசிவு ஆகியதால், இரத்தத்தில் அதன் கடினத் தன்மை குறைந்ததோடு மட்டுமல்லாமல் அவனுக்கு டைப் ஒன் டயபெடிக்ஸ் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். அதனால் கிரிஸால் எந்த இனிப்பும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். உலகில் சிறந்த பேஸ்ட்ரி தயாரிப்பவரின் மகனாக இருந்தும் அவனால் அதை ருசி பார்க்க கொடுத்து வைக்கவில்லை பாவம். அவனது அன்றாட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்தது. தினம் எந்த உணவு சாப்பிட்டாலும் அதற்கு முன்பு அவனது உடம்பில் உள்ள குளூகோஸ் அளவு பார்க்கவேண்டும் சாப்பிட்ட பிறகும் குளூகோஸ் அளவு பார்க்கவேண்டும். அதற்காக இடுப்பு பகுதியில் ஊசி குத்தி குத்தி அந்த இடமே கருத்து காய்ந்து விட்டது.

கல்லூரி சென்றாலாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று அவனது பெற்றோர் ஆலோசனை சொல்ல அவன் ஹூஸ்டன் பல்கலை கழகத்தை தெரிவு செய்தான். வருடம் முழுவதும் வெப்பமான தட்ப வெப்பம் உள்ளதும் அவன் ஹூஸ்டனை தெரிவு செய்ததற்கு ஒரு காரணம் என்றாலும், உள் மனதில் அவனுக்கு இந்த பல்கலை கழகமே போக வேண்டும் என்று தோன்றியது தான் முதல் காரணம்.

ஓரியன்டேஷன் முடிந்ததும், வைஷ்ணவியையும் அவளது அம்மாவையும் பார்த்ததும், வைஷ்ணவி அவளது அம்மாவின் அருகில் சாய்ந்து நின்றதும் அவனுக்கு ஏதோ புது அனுபவமாக இருந்தது. அப்போது அவர்கள் இருந்த இடத்திற்கு கோட் சூட் அணிந்து உயரமான அமெரிக்கர் ஒருவரும் அவரது மனைவியும் வந்தனர். அவர்கள் கிரிஷை பார்த்து, கிரிஷ் நீ இங்கேயா இருக்கிறாய். உன்னை எங்கெல்லாம் தேடினோம் என்று தெரியுமா என்று கேட்டவாறு அருகில் நின்றிருந்த வைஷ்ணவியையும், அவளது அம்மாவையும் பார்த்தவுடன், “is everything ok “ என்று கேட்டவாறு கிரிஷை கைகளால் அணைத்தார். “Nothing dad ‘. Everything fine “ என்று சொல்லிவிட்டு, அவனது அப்பாவிற்கு இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான். 

அதை கேட்டதும், கிரிஸின் அப்பாவும் அம்மாவும் அப்படியே உறைந்து நின்றனர்.

பாகம் - 4
கிளைமேக்ஸ்

கிரிஸின் அப்பாவும் அம்மாவும் , வைஸ்ணவியின் அம்மாவும் சற்று தள்ளி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிரிஸும் வைஷ்ணவியும் ஸ்டார் பக்கில் சென்று எல்லோருக்கும் காப்பி வாங்கி வரச் சென்றார்கள். கிரிஸின்  அப்பா ஒரு பெரிய பெருமூச்சு விட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார். என் பையன்  கிரிஸ்  கடந்த சில மாதங்களாக கவிதா வைஷ்ணவி மற்றும் ராகுல் என்ற பெயர்களையே அவனது தூக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதுதான் உங்கள் மூவரையும் பார்த்தவுடன் நாங்கள் சற்று அதிர்ச்சி அடைந்தோம் என்று சொன்னார். மேலும் ஆமாம் நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்? உங்களது கணவன் எங்கே? என்று கவிதாவிடம் கேட்டார். அதைக் கேட்டதும் கவிதாவால் அழுகையை அடக்க முடியாமல் அழுதாள். சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் கணவனைப் பற்றிய கதையை சொல்லத் தொடங்கினாள். எங்களது வீடு இங்கிருந்து 30 மைல் தொலைவில் கேடி என்ற ஊரில் உள்ளது. நான், என் கணவர் ராம், என் மகள் வைஷ்ணவி, என் மகன் ராகுல் நால்வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். என் கணவர் SAP BW ல் கன்சல்டிங்கில் வேலை பார்த்து வந்தார். ஒரு ஞாயிறு மதியம் வைஷ்ணவியை நாட்டிய வகுப்பிற்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பி வந்தார் என் கணவர். பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்க ஹாலில் உள்ள இருக்கையில் உட்கார்ந்தவர் திடீரென்று தலைவலி அதிகமாக உள்ளது என்று சொன்னார். சொன்னவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார் எனக்கு என்ன செய்வது என்றே ஒன்றும் புரியவில்லை. உடனே அவருடைய நண்பர் சிவாவிற்கு போன் செய்து விவரம் சொன்னவுடன் அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அவர் வந்து பார்க்கையில் என் கணவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. உடனே சிவா 911 க்கு போன் செய்து விபரம் சொன்னார்.  அடுத்த பத்து நிமிடத்தில் அவசர உதவி பணியாளர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் எனது கணவரை பார்த்து விட்டு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் அவசர உதவிக்கு தகவல் கொடுத்தனர். அரைமணி நேரத்தில் என் கணவரை ஹெலிகாப்டரில் ஏற்றி ஹூஸ்டனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர். சற்று நேரத்தில் நாங்களும் கிளம்பி அந்த மருத்துவமனையை அடைந்தோம். அங்கு சென்றவுடன் எங்களுக்கு அந்த அதிர்ச்சியான செய்திதான் கிடைத்தது. ஆம் என் கணவர் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து சென்ற செய்திதான் அது. செய்தியை கேட்டதும் நான் உடனே மூர்ச்சை இழந்து விழுந்து விட்டேன். நான் கண்விழித்து பார்த்தபோது எனது பிள்ளைகள் அங்கே அழுது கொண்டிருந்தனர். மருத்துவமனையில் விசாரித்தபோது என் கணவருக்கு பிரைன் ஹேமரேஜ் என்று சொன்னார்கள். பிறகு போஸ்ட்மார்ட்டம் முடிந்து அவரது உடலை நேராக பியூனெரல் ஹோமிற்கு அனுப்பிவிட்டார்கள்.

அதன் பிறகு நானும் எனது பிள்ளைகளும் தான் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு அழுதாள். இதைக் கேட்டதும் கிரிஸின் தந்தையும் தாயும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர். கிரிஸின் தாயார் கவிதாவை அணைத்தவாறு அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். கிறிஸ்டின் தந்தை கவிதாவிடம் அவள் கணவன் இறந்த தேதியையும், ஹூஸ்டனில் எந்த மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்தது என்றும் கேட்டு அதை குறித்துக் கொண்டார். இதற்கிடையில் கிரிஸும் வைஷ்ணவியும் அங்கு காப்பியுடன் வந்து சேர்ந்தனர். வைஷ்ணவி அம்மா அழுவதை பார்த்ததும் சற்று பதட்டத்துடன் அருகில் சென்று பார்த்தாள். அம்மா என்னவாயிற்று என்று விசாரித்தாள். கிரிஸ் கவிதாவின் அருகில் சென்று அவளது கண்களை கூர்ந்து பார்த்தவாறு நின்றான். கிரிஸின் தந்தைக்கு இப்போது ஓரளவு என்ன நடக்கிறது என்று புரிய ஆரம்பித்திருந்தது. அவர் அங்கிருந்து சற்று தள்ளிப் போய் அந்த மருத்துவமனைக்கு போன் செய்தார். அங்கு ராமின் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அந்த நாளன்று ராமிற்கு சிகிச்சை செய்த மருத்துவரின் பெயரை தெரிந்து கொண்டு அவருக்கு போன் பண்ணினார். 

மருத்துவரின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர் போனில் வந்தார். கிரிஸின் தந்தை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ராமின் பிறந்த தேதியை சொல்லி மருத்துவருக்கு ஞாபகம் இருக்கிறதா என விசாரித்தார். அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அதை பற்றிய விவரம் கேட்டார். எதற்கு இதை கேட்கிறீர்கள் என்று மருத்துவர் கேட்டவுடன் என் தந்தை மருத்துவரிடம் இதுவரை நடந்த எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லி முடித்தார். இதைக் கேட்டதும் மருத்துவர் ஒரு கணம் திகைத்தார். உடனே அவருக்கு அந்த நாள் நிகழ்ந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. அவர் அதை கிரிஸின் தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தார். அன்று ராமை சுயநினைவின்றி ஹெலிகாப்டரில் கொண்டுவந்து எங்களது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் இறந்து விட்டார். அவர் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து இருந்தமையால் அவற்றை எல்லாம் அகற்றி விட்டு அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அனுப்பி விட்டோம். அன்று மாலையே வாஷிங்டன் மருத்துவமனையிலிருந்து இருதயம் தேவை என்று செய்தி வந்து இருந்ததால் ராமின் இருதயத்தை அங்கு அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால் ராமின் இருதயத்தைத்தான் கிரிஸிற்கு பொருத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது..  அதனால்தான் கிரிஸிற்கு  ராமின் இருதயத்தில் இருந்த நினைவுகள் சில இன்னும் வந்து போகிறது போலும். இது மருத்துவத்தில் சாத்தியமில்லை என்றே இதுவரை உள்ளது. இந்த நிகழ்ச்சி மருத்துவத் துறைக்கு புதிய தகவலாய்  உள்ளது. ஆக உங்களது மகன் கிரிஸின் இருதயம் இறந்து போன வைஷ்ணவியின் தந்தை ராமின் உடையது என்று சொல்லி முடித்தார் மருத்துவர். கிரிஸின் தந்தை போனை வைத்துவிட்டு மீண்டும் எல்லோரும் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு அவர் கவிதா, வைஷ்ணவி, ராகுல், கிரிஸ் இவர்களின் முகத்தையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.  ராமின் இதயம் தான் கிரிஸின்  இதயம் என்று தெரிந்தால் நடக்கப்போகும் நிகழ்வுகளை எண்ணியவாறு இதை இப்போது சொல்ல வேண்டாம், இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். (இப்பவே  சொன்னா அப்புறம் பார்ட் 2 எப்படி எழுதுவது?)

*********முற்றும்********

#வாஞ்சிவரிகள்#

மன்னிப்பாயா !!!

**********மன்னிப்பாயா !!! **********
அப்போதெல்லாம், கிராமத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகளில் ஒன்று அல்லது இரண்டு மாணவிகளே கொஞ்சம் வெள்ளையாக இருப்பார்கள். மற்ற பெண்கள் எல்லாம் சாக்லேட் கலரில் மிக அழகாகவும் பளிச்சென்றும் இருப்பார்கள். இருந்தாலும் எல்லா மாணவர்களுக்கும் அந்த வெள்ளை கலர் பெண்கள் மேல் தான் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர்களை பற்றிய செய்திகள் சேகரிப்பது, வதந்திகள் பரப்புவது இவையே அவர்களின் முழு நேர பணியாக இருக்கும்.
நான் பள்ளியில் படிக்கும் போது மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும் போது சற்று குள்ளமாகவும் மெலிந்தும் இருப்பேன்(நிஜமாத்தாங்க நம்புங்க). அதனால் எல்லா பெண்களும் என்னுடன் மிக நெருக்கமான தோழமையுடன் பழகுவார்கள். அப்போது ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒரு பெண் எங்கள் வகுப்பில் படித்தாள். எங்கள் வகுப்பிலேயே மிகவும் அழகு. அழகில் மட்டுமல்ல, கடவுள் எல்லாவற்றையும் அவளுக்கு குறைவில்லாமல் கொடுத்திருந்தார். அவளுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப அதிகம். ஒப்பனை அதிகம் செய்ய மாட்டாள். நீளமான கூந்தல் வேறு. அந்த காலத்தில் லூஸ் ஹேர் விட்டு கட்டுவது ஆண்கள் மது அருந்துவதை போன்ற ஒரு குற்றம். இருந்தாலும் அவள் அப்படி தான் தினம் பள்ளிக்கு வருவாள். அவள் நடந்து வரும் போது தெருவில் ஒரு அலங்கார தேர் வருவது போல் தான் இருக்கும். அவளது கால் கொலுசு சத்தத்தின் சலசலப்பு மாணவர்களில் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும். முழு நீள வெள்ளைப்பாவாடையில் அரைஅடிக்கு பச்சை நிற பட்டு பார்டரும், ஆரஞ்சு நிற பூப்போட்ட தாவணியும் அவள் உடுத்தி வரும் போது , பெரிய துணிக்கடையில் விளம்பரத்திற்காக நிற்கும் சிலிகான் சிலை போல ஜொளிப்பாள். அவள் சற்று குனிந்தவாறு, வண்ணப்பாவாடை காற்றில் பறந்து வர, ஒத்தக்கல் மூக்குத்தி அவள் புன்னகை கண்டு மின்னும் அழகில் அவளைப் பார்க்கும் எல்லா வயதினருக்கும் ஒரு பரவசம் வராமல் போகாது.
அன்றும் அதே உடையில் தான் பள்ளிக்கு வந்திருந்தாள். அவளுடன் பேரூந்தில் வரும் சக மாணவர்களில் ஒருவன் என்னிடம் வந்து அவளை பற்றி ஒரு செய்தியை சொல்லி அதை வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் படமாக வரையுமாறு வற்புறுத்தினான். அந்த செய்தி என்னவென்றால்.
பேருந்தில் வரும் போது ப்ரியாவும் பஸ் கண்டக்டரும் சிரித்து பேசிக்கொண்டதாகவும், அவர் இவளது தோளில் கைபோட்டதாகவும் சொன்னான். எனவே இதை அவளுக்கு சொல்லிக்காட்டவும், மற்றவர்களுக்கு முன் அவளை கிண்டல் செய்யவும் அவளது உருவத்தையும் கண்டக்டர் உருவத்தையும் அருகருகே வரையுமாறு என்னிடம் சொன்னான். நானும் அவளும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். இருந்தும் அப்போது அவன் சொன்னதும் எந்த பின்விளைவுகளை பற்றியும் யோசிக்காமல் நானும் அதே மாதிரி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் கரும்பலகையில் வரைந்து விட்டேன். மதியம் இடைவேளைக்கு பிறகு மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பிற்குள் நுழைய ஆரம்பித்தார்கள். எல்லோரும் இந்த படத்தை பார்த்து ஒன்றும் புரியாமல் மற்ற மாணவர்களுடன் விசாரித்து கொண்டிருந்தனர்.
ப்ரியா துள்ளலும் நடையுமாக சந்தோச புன்னகையுடன் வகுப்பிற்குள் நுழைந்தாள். கரும்பலகையில் உள்ள ஓவியத்தை பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டாள். மெதுவாக நடந்து அவளது இருக்கையில் அமர்ந்தாள். அவளது முகம் சிவந்தது. அப்படியே முகத்தை கையால் பொத்திக்கொண்டு மேஜையில் குனிந்து அழ தொடங்கினாள். அப்போதே நான் செய்த அந்த செயல் எவ்வளவு தூரம் அவளை பாதித்திருக்கும் என என்னால் உணர முடிந்தது. இளமை பருவத்தில் நாம் செய்யும் செயல்கள் மற்றவரை எந்த அளவுக்கு பாதிக்கும் என உணர முப்பத்தி மூன்று வருடம் ஆகும் போல.
அவளது கண்ணீரை பார்த்ததும் என்னுள் ஏற்பட்ட குற்ற உணர்விற்கு அளவேயில்லை. சற்று நேரம் கழித்து அவளது அழுகை அடங்கியவுடன் அருகே சென்று அமர்ந்தேன். அவளது இருக்கை என்னுடைய பெஞ்சுக்கு முந்தியதுதான் என்றாலும் யாரும் கேட்காத வண்ணம் அவளிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டேன். அவள் இந்த அளவு பாதிப்பு அடைவாள் என நான் நினைக்கவில்லை. நீண்ட நேரம் யோசித்து பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் பேசியது அப்படியே ஞாபகம் இருப்பதால் அதை அப்படியே எழுதுகிறேன். இதோ..
“நண்பனே (என் பெயரை போட மனம் ஒப்பவில்லை) நீ என்னைப்பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும் இந்த மாதிரி படத்தை வரைந்தது எனக்கு மிக்க வேதனையை தந்துவிட்டது. மற்றவர்கள் செய்திருந்தால் இந்த அளவு பாதித்திருக்காது. அவர்கள் உன்னிடம் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. நான் அந்த கண்டக்டரிடம் பேசியது உண்மைதான். ஆனால் அவர் என் தூரத்து உறவினர் மற்றும் எனக்கு அண்ணன் முறை வேறு. அவரோடு இணைத்து படம் வரைந்ததும் என்னை மிகவும் பாதித்து அழவைத்துவிட்டது. உண்மையில் நான் அவரிடம் என்ன பேசினேன் என்றால் என் வீட்டில் எனக்கு நடந்து கொண்டிருக்கும் பாலியல் கொடுமை பற்றியும் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்றும் ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். ஆம் என் வீட்டில் உள்ள ஒரே ஆண்மகன் என்னுடைய தமக்கையின் கணவர். அவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் அவன் எப்போதும் என்னை தவறான கண்ணோட்டத்தோடு பேசுவதும் பாலியல் கொடுமை செய்து கொண்டும் உள்ளான். அது மட்டுமன்றி என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறான். என் அம்மாவிடமும், அக்காவிடமும் இது பற்றி சொல்லி அவர்களை மிரட்டுகிறான். எங்களுக்கு அவனை விட்டாலும் போவதற்கு போக்கிடம் இல்லை. எனவே தினமும் இந்த நரகவேதனை அனுபவித்து வருகிறோம். இதை பற்றித் தான் நான் அவரிடம் பேசிக்கொண்டு வந்தேன் என்று சொல்லி நிறுத்தினாள் .”
இதை கேட்டவுடன் என் மனம் அப்படியே உறைந்துவிட்டது . அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை. அப்படியாக அந்த நாள் முடிந்தது. அதன் பிறகு நானும் பள்ளி முடிந்து கல்லூரி சென்று விட்டேன். அவள் என்ன ஆனால் என்று தெரியாது. சுமார் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவளை எங்கள் ஊர் பேரூந்து நிலையத்தில் பார்க்க முடிந்தது. அப்போது அவள் தன் இரண்டு குழந்தைகளுடன் பேருந்துக்காக காத்திருந்தாள். அவளிடம் சென்று எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தேன். அவள் தனது அக்காவின் கணவரையே திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது இரண்டு குழந்தைகளுடன் அவனுடனே வாழ்வதாகவும் கூறி வருத்தப்பட்டாள். அவளது அக்காவும் அவளுடனே வாழ்வதாக கூறினாள். விதியை நினைத்து நொந்து கொண்டு அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை சொல்லி விடை பெற்றேன்.
இப்போது அவர் எங்கு வசிக்கிறார் எப்படி இருக்கிறார் என்றெல்லாம் தெரியாது. இருந்தாலும் அன்று அவரை அழவைத்த நிகழ்வு மட்டும் எப்போது அவரைப் பற்றிய நினைவுவந்தாலும் என் மனம் வருந்துகிறது. அவரிடம் அதற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.

#வாஞ்சிவரிகள்#வலிகள்

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...