Wednesday, May 31, 2017

குறுந்தொகை #23

குறுந்தொகை #23 எளிய வடிவில்
.
காடுமலை கடந்து வந்த காகமே
காதலனை கண்டாயா காணோமே
தேடிநித்தம் துடிக்குதிந்த தேகமே
வாடிநித்தம் வதங்குதிந்த வதனமே
மலையரசி போர்த்தியுள்ள மேகமே
இளவரசு இடம் அறிந்தே பேசுமே
.
மழை பார்த்து மகிழ்ந்தாடும் மயிலினை
குளிர் காக்க சால்வையிட்ட பேகனே
துயிலின்றி துயருரும் குறிஞ்சி நிலவஞ்சியை
துயரின்றி காத்திடுவாய் கொஞ்சியே
.
துள்ளி விளையாடி வந்த வண்ணமயில்
துன்பத்தில் துவழ்வதேனோ தெரியலியே
செங்காந்தள் சேர்த்தணைத்த செவிலியே
உண்ணாமல் உழல்வதேனோ என் செல்வியே
நல்லொழுக்கம் நன்கறிந்த கண்மணியே
களவொழுக்கம் கடைபிடித்தால் இப்பிணியே
.
சங்குமணி ஆரமிட்ட குறிகாரி கட்டுவிச்சி
வெள்ளிமணி தீட்டிவிட்ட சிகையதிலே நட்டுவச்சி
குன்றத்தில் குமரன் கதை பாடக் கேட்டு
மன்றத்தில் வீற்றிருந்த மகளிர் எல்லாம்
மதிமயங்கி குறிஞ்சி புகழ் போற்றலானர்
மருமகனின் வரவை எண்ணி தேற்றலானர்
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #23
.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
.

பாடியவர்: ஔவையார்

குறுந்தொகை #22

குறுந்தொகை #22 எளிய வடிவில்
.
.
அத்தான் அன்பாய் அணைத்தான்
பொத்தான் தாலியில் சிக்கி அத்தான்
தைத்தேன் அழகாய் அதைத்தான்
ரசித்தேன் எண்ணி இதைத்தான்
வதைத்தான் கனவில் எனைத்தான்
பதைத்தேன் பார்த்து உனைத்தான்
.
கடவுச்சீட்டின் மடல் பிரிக்க
களவுதட்டால் உன்நிழல் நனைக்க
தனித்திருக்கும் முகம் பார்த்து
பனித்திருக்கு இமை வியர்த்து
.
பிதுங்கிய பெட்டகத்துள்
பதுங்கியே வர முயன்று
மடித்தெனை உள்ளடக்க
துடித்தது என்னெஞ்சம்
.
கலக்கம் ஏனடி குணவதியே
விளக்கம் கூறடி வனமதியே
உந்தன் கண்ணில் நீர்வழிந்தால்
வேந்தன் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி
நிழலுன்னை பிரிந்தே போனாலும்
நிஜமுன்னை நினைத்தே வாடுமடி
நிதமுன்னை நெகிழ்த்திடுவான் பாடி-கண்
நீர்தன்னை துடைத்திட்டாள் சேடி
.
சாரலில் சரிந்து நிற்கும்
வலஞ்சுரி கடம்பு
வேனிலில் விளைந்து இங்கே
விருட்சமாய் விளங்குமன்றோ
வடம்பிடித்து வளர்ந்த வாகில்
கடம்பமாய் மலர்ந்த பூக்கள்
கதம்பமாய் கமழும் மணமே
வசந்தமாய் வீசும் தினமே
கலைந்தவுன் கேசத்தை
கைகளால் விலக்கியே
ஜொலித்திடும் முழுநிலவில்
பளிச்சிடும் பிறைநுதலில்
நறுமணம் கமழ்ந்திடுமே
பார்மனம் புகழ்ந்திடுமே
.
நாறும் மணமுமாய்
நகமும் சதையுமாய் வாழ
நலிந்தே போனவுன்னை
பிரித்திடல் பாவமென்றே
அகத்துனை அறிந்திடுவான்
அழைத்துனை சென்றிடுவான்
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #22
.
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.
.

பாடியவர்: சேரமானெந்தை

குறுந்தொகை #21

குறுந்தொகை #21 எளிய வடிவில்
.
.
திரண்ட வானம்
இருண்ட கானம்
குயிலின் கானம்
அவளின் நாணம்
கொன்றை மரமாய்  
நங்கை கண்டு
பசுமைத்  தழையாய்
பதுமை கூந்தல்
மின்னும் சரமாய்
பொன்னுன் சிரமாய்
கண்ட கோலம்
காட்டும் காலம்
காதல் உள்ளம்
கண்டு துள்ளும்
கனமழைக்காலம்
காணுமே நாளும்
.
கோதையின் வீட்டில்
கீதையின் பாட்டில்
போதையில் வண்டாட
கொன்றையும் திண்டாட
அரும்புகள் உண்டாக
மலர்ந்தது செண்டாக
.
என்னுயிர் தோழி
கேளடி ஓர் நாழி
சன்னல் ஒட்டி
பின்னல் பின்ன
மின்னல் வெட்டி
விண்ணில் மின்ன
முன்னால் முதல்வன்
சொன்னானே
தன்னால் வருவேன்
என்றானே
மழைக் காற்றை
தாக்க வைத்து
கொன்றை மலரை
பூக்க வைத்து
தாவும் குயிலை
கூவ வைத்து
ஓடும் மயிலை
ஆட வைத்து
கொஞ்சும் கிளியை
பேச வைத்து
நெஞ்சில் கிலியை
மூடி வைத்து
கண்ணில் காணும்
கார்காலம்
காமதேவனின்
லீலையோ
காலதேவனின்
வேலையோ
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #21
.
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.
.

பாடியவர்: ஓதலாந்தையார்

குறுந்தொகை #20

குறுந்தொகை #20 எளிய வடிவில்
.
.
அக்கரையின் பச்சை
ஆசையின் இச்சை
இக்கரையில் செல்வம்
ஈட்டுதல் இன்பம்
உனைபோன்ற சான்றோர்
ஊரில் எவருமில்லை
என்று காண்போமென
ஏக்கம் வாட்டுதே
ஐயமின்றி வருவாய்
ஒன்றாய் உழைப்போம்
ஓங்கி வாழ்வோம்
.
கண் இமைத்தாலும்
உன் பிம்பம் மேல் -மறு
பிம்பம் சேர மறுக்கிறது
நா பேசினாலும்
உன் பேச்சு இல்லா  
பேச்சு வர மறுக்கிறது
செவி மடுத்தாலும்
உன் குரல் விடுத்து-வேறு
குரல் கேட்டிட மறுக்கிறது
நாசி நுகர்ந்தாலும்
உன் வாசம் இல்லா
வாசம் நுகர்ந்திட மறுக்கிறது
உனையன்றி உயிரில்
ஓரணுவும் அசைந்திட மறுக்கிறது
.
அருளும் அன்பும் துறந்து
ஆசை மனையாள் விடுத்து
பொன்னும் பொருளும் சேர்க்க
சென்றாய் தூர தேசம்
தோற்றால் தூற்றும் என்றோ
ஆற்றல் பெற்ற நீயும்
நாடு விட்டு போனாய்
கற்ற சான்றோர்க்கு
செல்லுமிடம் சிறப்பெனினும்
உந்தன் திறமைக்கு  
உள்ளூரில் கடைவிரித்தால்
ஊரே போற்றுமன்றோ !!!
.
.
#வாஞ்சிவரிகள்#
.
குறுந்தொகை #20
.
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
.

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்

குறுந்தொகை #19

குறுந்தொகை #19
.
.
விளக்கு வைக்கும் வேளையிலே
விளைந்து நிற்கும் குவளையே
விரைந்து வீசும் காற்றிலே
விலகி நிற்கும் தென்றலே
விடியலில் வந்த விடிவெள்ளி
விண்ணில் பறப்பேன் உனையள்ளி
விலங்கிடு கிடப்பேன் உன்னடியே  
விளம்பிடு விரசம் என்னடியே
விழைந்தது விதியென சொல்லி
விலகாதே எனைவிட்டு தள்ளி
.
மையிருட்டு பூசிய கூந்தலில்
மையலிட்டு மயக்கும் தையலே
வீட்டருகே விரிந்த விருட்சத்தில்
பட்டுபோல் படர்ந்த மணிமுல்லை
தொடுத்து சூடிய மங்கையே
விடுத்து வாடும் பிணக்கம் ஏனோ
முல்லைக்கு தேர் தந்தான் பாரி-இம்
முல்லைக்கு மணம் தந்தாய் சூடி
எவ்வி அரசன் இழப்பில் இடிந்து
வாடும்பாணர் யாழை முறித்து
சிரசில் சூடும் பொன்மலர் விடுத்து  
பொலிவிழந்து போயினர் அன்று
.
வஞ்சிக்கொடியே உனக்காக-என்
நெஞ்சு உன்னை கெஞ்சுதடி
பாலாய் பொங்கும் நம்காதல்
பாழாய் போகப் போகுதடி
செழித்து வளர்ந்த நம்முறவு
நலிந்து போக கூடுமடி  
தெளிவாய் நீயும் யோசித்தால்
வாழ்வில் வசந்தம் வீசுமடி
.
.
#வாஞ்சிவரிகள்#
.
.
குறுந்தொகை #19
.
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
.

பாடியவர்: பரணர்  

குறுந்தொகை #18

குறுந்தொகை #18 எளிய வடிவில்
.
.
குன்றின் மீது கூவும் குயில்கள்
எட்டி பார்க்கும் குட்டி நிலவு
வெட்கி நிற்கும் வெள்ளி முகம்
திரண்ட காடாய் இருண்ட கூந்தல்
மஞ்சள் கொத்தாய் பிஞ்சு விரல்கள்
நெஞ்சம் தொட்டு கொஞ்சும் சுகம்
தாளம் போடும் தங்க கொலுசு
மேளம் தேடும் எந்தன் மனசு
தண்டு வாழை கெண்டை கால்கள்
கண்டு வீணை மீட்டும் கைகள்
வளைவு நெளிவாய் இஞ்சி இடை
வாரி அணைத்து கொஞ்சத் தடை
கவிழ்த்து வைத்த தென்னங்குலை
குத்தி கிழிக்குதென்னைக் கொலை
மூச்சுக்குழியின் ஏக்கச் சத்தம்
அசைந்து ஆடும் அலையின் சந்தம்
இனிதே முடிந்த இரவை எண்ணி
பிரிந்தே செல்லும் குறிஞ்சி நாடன்
மறித்தே பேசும் மங்கைதம் தோழி
விரித்தே விளம்பும் தலைவியின் துயரை
.
மூங்கில் வேலி மூடி மறைக்கும்  
நடுவே நிமிர்ந்த *நடுக்கனி மரமும்
வேரில் முதிர்ந்த வேர்ப்பலா கொண்ட
வேங்கை நாட்டு வேடுவனே
சிறப்பாய் ஆளும் குடியின்கீழ்
பொறுப்பாய் வாழும் பொதுமக்கள்
வெறுப்பாய் ஏதும் செய்தாலும்
பொறுத்தே உம்மை காத்திடுவர்
.
கொங்கு மலை உச்சியில்
சங்கு முழங்கும் சாரலில்
ஓங்கி வளர்ந்த மரநுனியில்
தாங்கி பிடித்த ஒற்றை காம்பில்
வீங்கி பழுத்த பலா ஒன்று
விழுந்தே உடையும் நிலை கண்டு  
சாய்ந்து ஆடும் சாயலில்
தோய்ந்து நிற்கும் மலைக்கன்னி
.
ஊசலாடும் உயிரோடு
ஊஞ்சலாடும் உணர்வோடு
உறவுக்கு காத்திருக்க
உன் வரவை பார்த்திருக்க
உன்காம வித்தையில் சிக்குண்டு
உண்காம உழலுகிறாள் ரணங்கொண்டு
நீயில்லை இச்சென்மமென தெரிந்தால்
உயிரில்லா பிணமாக நிஜமாவாள்
உயிர் ஆங்கே உடல்விடுத்து போகுமுன்
சேர்ந்திடுவாய் துயர் துடைக்க மருந்தோடு  
விரைந்தங்கே சென்றிடுவாய்
வான்மகளை கொண்டிடுவாய்
.
#வாஞ்சிவரிகள்#
.
*முக்கனியில் நடுவில் உள்ள கனி பலா
.
குறுந்தொகை #18
.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
.

பாடியவர்: கபிலர்

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...