Thursday, November 2, 2017

280-282 கம்பன் எளிய தமிழில்

280-282 கம்பன் எளிய தமிழில்
.
மண்மகள் களிப்பில் திளைத்திட
விண்ணுளோர் உள்ளம் வியந்திட
விண்மகள் உடுத்தும் புனர்பூசமும்
நண்டுரு கற்கடகமும் பேற்றினை
எண்ணி மகிழ்ந்து துள்ளிட
பெண்மை போற்றும் பேறு காலம்
மண்ணைக் காக்க மலர்ந்தது
.
தத்துறல் ஒழிந்து தருமம் ஓங்க
சித்தரும் இயக்கரும்
தத்தம் தேவியரும்
வித்தகரும் வானவரும்
நித்தரும் முறையே குழுமி
சத்தமாய் ஆர்பரித்தனர்
.
பிரளயப் பேரழிவில்
உதரம் மறைத்து உலகு காத்து
ஆலிலையில் தவழ்ந்து
திருவுலா சென்ற திருமாலை
அருமறை உணர்ந்தும்
பொருள் தேட இயலா
பரம்பொருளாம் அப்பரமனை
கருவிழி தீட்டிய அஞ்சனமும்
கருமுகில் கொழுந்தாய் எழில் காட்டும்
கருநிற ஒளியாய் திகழ்பவனை
விண்ணில் மங்கலம் முழங்கிட
மண்ணில் ஈந்தனள் திறம்கொள் கோசலை
.
#வாஞ்சிவரிகள்#

#280 கம்பன் எளிய தமிழில்

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.

மண்மகள் களிப்பில் திளைத்திட
விண்ணுளோர் உள்ளம் வியந்திட
விண்மகள் உடுத்தும் புனர்பூசமும்
நண்டுரு கற்கடகமும் பேற்றினை
எண்ணி மகிழ்ந்து துள்ளிட
பெண்மை போற்றும் பேறு காலம்
மண்ணைக் காக்க மலர்ந்தது


#281 கம்பன் எளிய தமிழில்

சித்தரும். இயக்கரும். தெரிவைமார்களும்.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தத்துறல் ஒழிந்து தருமம் ஓங்க
சித்தரும் இயக்கரும்
தத்தம் தேவியரும்
வித்தகரும் வானவரும்
நித்தரும் முறையே குழுமி
சத்தமாய் ஆர்பரித்தனர்


#282 கம்பன் எளிய தமிழில்

ஒரு பகல் உலகு எலாம்
  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும்
  அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில்
  காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம்
  கொள் கோசலை.

பிரளயப் பேரழிவில்
உதரம் மறைத்து உலகு காத்து
ஆலிலையில் தவழ்ந்து
திருவுலா சென்ற திருமாலை
அருமறை உணர்ந்தும்
பொருள் தேட இயலா
பரம்பொருளாம் அப்பரமனை
கருவிழி தீட்டிய அஞ்சனமும்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும்
கருநிற ஒளியாய் திகழ்பவனை
வின்னில் மங்கலம் முழங்கிட

மண்ணில் ஈந்தனள் திறம்கொள் கோசலை

#209 கம்பன் எளிய தமிழில்

#209 கம்பன் எளிய தமிழில்
.
ஈரேழு உலகும் காக்கவல்ல
ஈடில்லாப் புதல்வரைத் தரவல்ல
வேள்வி நீ முயன்று செய்தால்
நீள்துயர் அகன்றிடும் என
திருமாலின் மூலோபாயம் உணர்ந்து   
பெருமுனி வசிட்டரும் கூற
.
மன்னர் மன்னன் தயரதனும்
பேருவகை பொங்க எழுந்து
மணிமுடி மண்ணிலே சாய்த்து
மாமுனி திருப்பாதம் தொழுது
நின்னையே சரணென்று
நித்தமும் நிற்கும் எந்தனுக்கு
எத்துன்பமும் வந்து சேர்வதில்லை
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி
இன்னதென்று இனிதே அளித்திடும் என்றான்
.
#வாஞ்சிவரிகள்#
.
மூலோபாயம் - strategy
.
என்னமா முனிவன் கூற. எழுந்த பேர் உவகை பொங்க.
மன்னர் மன்னன். அந்த மா முனி சரணம் சூடி.
‘உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது
                                  உண்டோ?
அன்னதற்கு. அடியேன் செய்யும்  பணி இனிது அளித்தி’

                                   என்றான்.

#205 கம்பன் எளிய தமிழில்

#205 கம்பன் எளிய தமிழில்

பாரிஜாதமும் கற்பகமும்
ஹரிசந்தனமும் சந்தனமும்
மந்தாரமும் நிறைந்த
இந்திர லோகத்து அரசன்
பகைவர்க்கு இடியாய்
கிஷ்கிந்தை அரசனாய்
பலம் பெருக்கும் வாலியும்
அவன் மகன் அங்கதனுமாய்
வந்துங்கே அவதரிப்பேன் என்றுரைக்க
காசியப அதிதியின் புதல்வன்
நவகிரக நாயகன் சூரியனும்
வாலியின் இளையவனாய்
சுக்கிரீவனாய் அவதரிப்பேன்  என்றுரைக்க
ஆயிரம் நாக்குடையான்
செந்நிற மேனியான்
தென்திசைக்காவலன் அக்கினியும்
வானரத் தலைவன் நீலனாக
அவரோடு அவதரிப்பேன் என்றுரைத்தான்

#வாஞ்சிவரிகள்#

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான். ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்’ என்ன;
இரவி. ‘மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்’
                                   என்று ஓத
அரியும். ‘மற்று எனது கூறுநீலன்’ என்று அறைந்

                                  திட்டானால்

#199 கம்பன் எளிய தமிழில்

#199 கம்பன் எளிய தமிழில்
.
பத்து தலை இராவணன்
நித்திய தவத்தினால்
எத்தகை முனிவரும் தேவரும் அசுரரும்
வித்தகன் தனை வென்று
மாய்த்தல் ஆகாதென
வாய்ப்பாய் வரமொன்றைப்
பெற்றவன் அகந்தையால்
விட்டனன் மாந்தர் மந்தி இரண்டினை..
.
இரக்கமற்று இம்சிக்கும்
அரக்கர்தனை அழிக்க
அளித்த வரத்தை ஆய்ந்து
சலித்து சாரம் அறிந்து
மூர்த்திகள் மூவரும் கூடி
மூழ்கினர் தீர்வினைத் தேடி
.
மானுடமும் வானரமும் கூடி
சேனையாக சென்றாலன்றி
வெல்வது அரிதென உணர்ந்து
வானவர் எல்லாம் வானரமாகி
கானகம் சென்று பிறப்பீர்
மலைகளிலும் அடிவாரத்திலும்
புரண்டு திரிந்து வளர்ந்து
திரண்ட குரங்கினமாய் இருப்பீரென
கருணைக் கடலான்
திருமகள் நாயகன்
திருவாய் மலர்ந்து அருளினன்
.
#வாஞ்சிவரிகள்#
.
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.
கானினும். வரையினும். கடி தடத்தினும்.
சேனையோடு அவதரித்திடுமின் சென்று’ என.

ஆனனம் மலர்ந்தனன்- அருளின் ஆழியான்

#195 கம்பன் எளிய தமிழில்

#195 கம்பன் எளிய தமிழில்
.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளும் இணைந்தால் தான் அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநிறுத்த முடியும் என்பதைச் சொல்லும் கம்பனின் பாடல் எளிய தமிழில் இதோ...
.
பிறைச் சந்திரன்
மறைந்து விளையாட
நிறை சடைமுடி தறித்து
தடதடத்த கங்கையை அடக்கி
அங்கத்தில் பாதியை
மங்கைக்கு அளித்து
நர்த்தகியர் நாணும்
நர்த்தணம் ஆடி
அழிக்கும் அறப்பணி
பழிக்கா வண்ணம்
மழுவாளி சிவபிரானும்
பரம்பொருளை தொழுது பணிந்து
வரம்தனை அளித்து
சரமென உயிர்களை படைத்து
உலகினை இயக்கும்
நான்மறை போற்றும்
நான்முகன் பிரம்மனும்
நாற்கரம் கொண்டு
பொற்கரம் பிடித்து
பேரண்டம் காக்கும்
பெருமான் திருமாலும்
களிப்புடன் கயிலையில்
மகிழ்வுடன் களிக்கும் வேளையில்
மாதவம் புரிந்து
மாதவனை துதிக்கும்
மாமுனிவரும்
விண்ணுலகில் வாழும்
தேவாதி தேவரும்
கொதிகொள் வேலொடு
கொடுங்கோன்மை இழைக்கும்
மதியற்ற அரக்கர்தம்
கொடுந்தொழிலை உரைத்தனர்
.
#வாஞ்சிவரிகள்#
.
விதியொடு முனிவரும். விண்ணுளோர்களும்-
மதி வளர் சடைமுடி முழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து. அயல் அருந்துழி-

கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார்.

#189 கம்பன் எளிய தமிழில்

#189 கம்பன் எளிய தமிழில்
.
சிரம் ஒரு பத்தும்
கரம் இரு பத்தும்
உரவலிமையும்
வரவலிமையும் உடைத்த
அருட் செல்வமற்ற மன
இருள் வடிவான இராவணன்  
வல்லமையை எதிர்த்து
வெல்ல வழி தெரியாது
நிம்மதி தொலைத்து
நின்பாதம் தொழுது
நிற்கதியாய் நிற்கின்றோம்
கருமுகிலென வளரும்
கருணைக் கடலாம்
திருமறை போற்றும்
திருமால் அவதரித்து
அசுரருக்கும் அடங்கா
அவ்வரக்கனுடன் போரிட்டு  
அதர்மம் அழித்து
தர்மம் காத்து
எம்துயர் தணித்தாலன்றி
எமக்கு உய்வில்லை
.
#வாஞ்சிவரிகள்#
.
இருபது கரம். தலை ஈர்-ஐந்து என்னும் அத்
திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.

#187 கம்பன் எளிய தமிழில்

#187 கம்பன் எளிய தமிழில்
.
மேருமலையின் சிகரத்தின் மத்தியில்  
மாசறு சுடர்மணிமண்டபம் அடைந்து
வான் புகழ் தேவர்கள் புடைசூழ
நான்முக நாயகன் திருவடி தொழுது
இரக்கமற்று இடிநிகர் கொடுமை இளைத்திடும்
அரக்கரின் இழிசெயல் அவனிடம் உரைத்தனன்
.
#வாஞ்சிவரிகள்#
.
மூலப்பாடல் :
.
வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.

#181 கம்பன் எளிய தமிழில்

#181 கம்பன் எளிய தமிழில்
.
இராம ராஜ்யம் எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம் ராஜ்யம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு கம்பனின் இந்தப் பாடல் ஒரு சாட்சி. சூரியனையும் விட சிறப்பாக தம் மக்களைக் கண்ணுக்குள் வைத்துக் காத்த மாமன்னர்கள் ஆண்ட பூமி நம் பூமி. எளிய தமிழில் பாடல் உங்களுக்காக இதோ.....
.
திரு அவதாரப் படலம்
.
பகலவன் வந்து
பகல் அவன் தந்து
ஒளி வெள்ளம் பாய்ச்சி
புவி உள்ளம் மலர்ந்து
பயிரினம் விளைவித்து
உயிரினம் காப்பதினும்
எம்குலத் தலைவர்கள்
தம்குலம் சிறப்புற
அறநெறி தவறா
திறம்படத் திகழ்ந்து
கயவரைக் களைந்து
பகைவரை அழித்து
சான்றோரைப் போற்றி
ஈன்றோரை வாழ்த்தி
தருமம் காத்து தரணி தாங்கினர்
புகழ்ச்சிக்கு மயங்காமல்
இகழ்ச்சிக்கு அஞ்சாமல்
நிகழ்ச்சிகள் நடத்தி
மகிழ்ச்சியாய் மக்கள் வாழ
வசிட்டரின் அருளொடும்
வசிப்பவர் பொருளொடும்
சூர்யகுல வேந்தர்கள்
இவ்வயோத்தியில் இருந்தே
வரம்பிலா இவ்வையத்தை
வானவரும் போற்ற
வளமொடு இனிதே காத்தனர்
.
#வாஞ்சிவரிகள்#
.
‘எம் குலத் தலைவர்கள். இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்.
மங்குநர் இல் என. வரம்பு இல் வையகம்.

இங்கு. நின் அருளினால். இனிதின் ஓம்பினேன்.

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...