Thursday, November 2, 2017

குறுந்தொகை #29

குறுந்தொகை #29 எளிய வடிவில்
.
அந்தி சாயும் நேரத்திலே
மந்தியுறங்கும் மலைமேலே
ஊரும் உறங்கும் வேளையிலே
யாருமற்ற ஜாமத்திலே
தலைவி வரவை எதிர்பார்த்து
சிலையாய் அவனும் காத்திருக்க
வாடி வதங்கிய முகத்தோடு
சேடி வந்த திசை நோக்கி
ஓடிச் சென்று அவள்பின்னே
தேடிப்பார்த்தும் காணாமல்
“எங்கே என் தலைவி?” எனக் கேட்க
.
வரமாட்டாள் உன் தலைவி
தரமாட்டாள் இனி தரிசனமே
இனம் கூட்டி இல்லம் வந்து
மணம் முடிக்கப் பேசச் சொல்லி   
இதமாக உன்னிடத்தில்
பதமாக உரைக்கச் சொன்னாள்
என பதிலுரைத்தாள் உயிர்த் தோழி!
.
<--தலைவி முகம் காணாமல்
அலைபாயும் மனதோடு
வருத்தம் தாங்காமல்
ஏமாற்றம் தாளாமல்
ஆற்றாமையில் அழலானான்-->
.
நல்லுரை நீங்கி
புல்லுரை பரப்பும்
சொல்லினைக் கேட்கும்
உள்ளமே.! என் உள்ளமே.!!
பெய்யும் மழையினால்
நீர் நிரம்பி வழியும்
பசும் மண் பாத்திரம் போல்
உள்ளம் பொறுக்காத
வெள்ளத்தில் நீந்தி
பெறுதற்கு அரியதை
பெற விரும்பும் என் நெஞ்சமே
பெரிது உன் போராட்டம்
அரிது அதனை அடைவது
மரக்கொம்பின் உச்சியில் பெண்
குரங்கொன்று தன் மார்பில்
கட்டித் தழுவும்
குட்டிக் குரங்கின் வெப்பத்தில்
குணமது குளிர்ந்து
மனமது அமைதி அடைவது போல்
பொருந்தும் மனதை தழுவும்
கருத்தைக் கொண்டு
வருத்தம் துடைத்து உன்
குறை தீர்ப்போர் கிடைத்தால்
பெருமை உனக்கே !!!

.
#வாஞ்சிவரிகள்#
.
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...