Thursday, November 2, 2017

குறுந்தொகை #26

குறுந்தொகையின் காதல்ரசம் அதனைப் பருகியவருக்குத்தான் தெரியும். இக்காலத்தில் வாழும் நம்மைப் போன்றோர்க்கு இப்படி எளிய இனிய தமிழில் தெரிந்த வார்த்தைகள் கொண்டு எழுதினால் அதன் காதல் நயம் எவ்வளவு தித்திப்பு என்பதை நீங்களே படித்து அனுபவியுங்கள். காமம் இல்லாத காதல் இல்லை. காதல் இல்லாத காமம் இனிமையில்லை. சில இடங்களில் சிதறித் தெளித்த காட்சிகள் மூலப்பாடலில் மறைந்துள்ள காதலின் தீவிரத்தை உணர்த்தவேயன்றி வேறொன்றும் இல்லை. பாடலைப் பற்றிய தங்கள் கருத்து எங்களை ஊக்குவிக்கும். பாடல் இங்கே...
.
குறுந்தொகை #26
.
கருக்கலில் பார்த்து
தெருக்களில் திரிந்து
வீரம் கண்டு வியந்து
தீரம் கண்டு திகழ்ந்து
ஈரம் நெஞ்சில் விதைத்தான்
.
மலையின் உச்சியில்
வலையின் வாசலில்
கலையா கேசத்தை
கலையாய் கோதிவிட
சிலையாய் சிலிர்த்து
விலையாய் தந்தாள் தனையே
.
கைகள் கோர்த்துக் கிடக்க
கண்கள் பார்த்துப் படுத்த
காதல் கவிதை வாசிக்க
கூதல் காற்றை சுவாசிக்க
பேச்சு வார்த்தை பொய்யாக
மூச்சு முட்டி மெய்யாட
வாக்கு தந்தான் கைபிடித்து
பாக்குத் தட்டோடு கைபிடிக்க
.
பரிசம் போட வருவேனென
பரிசலில் சென்றவன்
மாதம் பல ஆகியும்
மாமன்தனை காணாமல்
பாதம் பார்த்து தலைவியும்
சாதம் உண்ண மறந்தாள்
துக்கம் நெஞ்சை அடைக்கவே
தூக்கம் எங்கோ தொலைத்தாள்
மடல் ஒன்றும் காணாமல்
உடல் துரும்பாய் இளைத்தாள்
.
அரும்புகள் மலரும்
கருந்தளிர் வேங்கை
வளர்ந்து உயர்ந்த கிளையில்
அமர்ந்தாடும் மயில்கள்
கொன்றை பூத்த மலர்களை
கொண்டையில் சூடிய மங்கையர்
மலர்க் கொய்வது போலே
காட்சியளிக்கும் மலைநாட்டின்
சாட்சியாய் விளங்கும் மலைநாடன்
மயில் போல் வதனமும்
குயில் போல் குரலும் கொண்ட
குறிஞ்சியின் குலவிளக்கிற்கு
கடுகளவும் இணையில்லையென
வடு தவிர்க்க செவியுரைத்தாள் செவிலி
.
மரம் விட்டு மரம் தாவ
கரம் கொண்டு கிளை பற்றும்
முற்களின் கூர் உடைய
பற்களின் துணைகொண்டு
தேனினும் தெவிட்டாத
தேன்சொட்டும் மாங்கனியை
சுவைத்துத் தான் உண்ண
சிவக்கும் வாயோடு
மரத்தின் கிளைகளில்
துரத்தி விளையாடும்
குரங்குக் குட்டிகளின்
தந்தைக் குரங்குதான் ஒரே சாட்சி
மரங்களின் மத்தியில்
ஊருறங்கும் வேளையில்
யாருமற்ற மாலையில்
சேர்ந்திருந்த காட்சி
.
மெய்மறந்த போதிலும்
பொய்மறந்த குரங்கது
கண்ணால் கண்டதை
தன்னால் மறைக்க முடியாது
மென்மையாய் வினவினால்
உண்மையை உரைத்திடும்
பெண்மையை காத்திடும்
.
#வாஞ்சிவரிகள்#
.
மூலப்பாடல்:
.
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...