Thursday, November 2, 2017

குறுந்தொகை #27

குறுந்தொகை #27

தீண்டலின் இன்பத்தை உணர்த்திவிட்டு
பொருளீட்ட தூரதேசம் சென்றுவிட்ட ஆடவர்.
தினம் அதை நினைத்து பொங்கிப் புழுங்கி
பருவ வயதை தொலைக்கும் பெண்டிர்.
மனதில் நடக்கும் போராட்டத்தை
மடலில் கொட்டிய மங்கையின் வரிகள்
எளிய தமிழில் உங்களுக்காக....
.
குறுந்தொகை #27
.
காராம்பசுவின்
கனத்த மடியில்
சுரந்து நிற்கும்
சுகந்த பாலை
முட்டிக் குடிக்கும்
குட்டிக் கன்றும் உண்ணாது
.
கட்டிய காலருகில்
முட்டியிட்டு அமர்ந்து
கறந்திடும் பால்
காலிடையில் கவ்விய
பாத்திரத்தில் விழாமல்
தரையில் சிந்தி வீணாவது போல
.
விரிந்த பூக்களில்
சொறிந்து வடியும்
மகரந்தத் தேனை
முகர்ந்து பருகும்
பருத்த மச்சான்
கருத்த வண்டை
காணாது தவித்து
வீணாகி வதங்கும்
மலர்க்கன்னி போல
.
கருக்கலில் நகர்ந்து
தெருக்களில் புரண்டு
ஓலைக்குடிசைகள் மத்தியில்
சோலை பூக்களின் இடையில்
பளிச்சென முளைக்கும்
வெண்ணிலவென ஒளிரும்
பொன்னிற மேனியில்
பெண்ணினமும் பொறாமையுறும்
பெண்மையை தாங்கி நிற்கும்
பேதையென் அழகு
எனக்கும் பயனில்லை
.
தெவிட்டாத இன்பத்தை
தேகமெலாம் தெளித்து
பெண்மையைப் போற்றி
பேரின்பம் அளித்து
இருளை இனிதாக்கி
ஊண் உறக்கம் துறந்து
உயிர்மூச்சுடன் கலந்து
மயிர்கூச்சிட்டு எழுந்து
காதலெனும் இன்பக்கடலில்
தினமென்னை மூழ்கடித்து
அன்பால் அரவணைக்கும்
என்பாலை நிலத்தானுக்கும்
இன்பமளிக்காது
துன்புற்று
என் பட்டு வதனம் அயலார்
கண் பட்டு வாடியே
புண் பட்டு பசலையால்
பாழாகிப் போகிறது
.
தேகம் கரைந்து
காற்றில் கலக்குமுன்
தேடிச்சென்ற தென்றல்
நாடிவந்த சேதிகேட்டு
ஓடிவந்து சேர்ந்தாயானால்
கூடி நாமும் வாழ்ந்திடலாம்
.
#வாஞ்சிவரிகள்#
.
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.
.

பாடியவர்: வெள்ளிவீதியார்.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...