Thursday, November 2, 2017

குறுந்தொகை #31

தலைவனின் கைப்பிடிக்க
நாடு நகரம் எல்லாம் தேடியும்
காண முடியாமல் தோழியிடம்
புலம்பும் தலைவியின் புலம்பல்
ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாறு
எளிய தமிழில் இங்கே...
.
குறுந்தொகை #31 எளிய வடிவில்
.
பதியென நினைத்து
கதியென அடைந்து
சதியென அறியாமல்
விதியென வாடும்
சதிராடும் தலைவி
நாட்டிய நாயகன்
நாட்டினில் காணாது
பூட்டிய இதயம்
வாட்டிடும் வேதனை
.
திடமெலாம் இழந்து
உடலெலாம் மெலிந்து
கைவளை நெகிழ்ந்து
மைவிழி கசிந்து
கன்னம் சிவந்து
எண்ணம் மறந்து
பார்க்க வந்த தோழி கை  
கோர்த்து நடை பயில
பிரிந்து சென்ற தலைவனை
விரிந்த இப்பெருநாட்டில்
தெரிந்த இடமெலாம்
திரிந்து தேடும் தன்னிலை
புரிந்திட வேண்டினள்
.
மள்ளர் குழுமி  
துள்ளி விளையாடி
அள்ளி அணைத்து
எள்ளி நகையாடி
கூடிக் குடித்து
ஆடிக் களிக்கும் திருவிழாவிலும்
.
இருகை கோர்த்து
இருதோள் உயர்த்தி  
இசையொலிக்கு ஏற்ப
அசைந்திடும் மங்கையர்
உடைதனை பற்றி
இடைதனை தழுவி   
இணங்கி ஆடும்
துணங்கைக் கூத்தாட
ஆடவர் குழுமும்
ஆடல் கூடத்திலும்
தேடினேன் என் தலைவனை
வாடினேன் அவனை காணாமல்
.
வங்கம் விளைந்த
சங்கை அறுத்து
ஒளிரும் என்கைகள்
மிளிரும் வளையல்கள்
நெகிழ்ந்து நழுவி  
அவிழ்ந்து போகும்
பெருமையுடைத்த என்
அருந்தவக் காதலனும்  
அன்பின் உருவமும்
என்போல் நாட்டியம் ஆடுபவனே
.
#வாஞ்சிவரிகள்#
.
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.
.

பாடியவர்: ஆதிமந்தியார்

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...