Wednesday, August 2, 2017

#127 கம்பன் எளிய தமிழில்

#127 கம்பன் எளிய தமிழில்
.
வடிவம் #1
.
மலையரசி மடியினில் தழுவி
மலையருவி சிலிர்த்தது போல்
மாதரசி மார்பினில் தவழும்
மணிமாலைகள் ஒளிர்தலும்
மாடத்தில் இருந்து தரையில் தவழும்
முத்துமாலைகள் அசைவதும்
.
மலைராணி நனைத்த சீலைகள் காய
தலைமேல் பறக்கும் முகில்கள் போல்
மங்கல மங்கையர் பட்டுடுத்தி
பொங்கலிட்டு களிப்பதும்
மாளிகை வாசலில் அசையும் கொடிகள்
வளியில் மிதந்து வான் மறைக்கும்
.
மலைமகள் தரித்த பொன்னும் மணியும்
மலைமேல் குவிந்து மெருகேற்றுதல் போல்
குலமகள் கழுத்தில் தங்கமும் வைரமும்
பலவகை மணிகளும் பரவியும்
பன்மணித் திரளும் பொன்குவியலும்
இறைந்து கிடக்கும் மா மனை முழுதும்
.
மலைமாதின் அழகில் மயங்கி
தோகைவிரித்தாடும் மயில்கள் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில்
காலைவிரித்தாடும் நங்கையர் கூட்டம்
.
அருவியும் முத்துமாலையும் ஒத்து
முகிலும் கொடியும் ஒத்து
பொன்னும் மணியும் ஒத்து
மயிலும் மங்கையரும் ஒத்து
ஒளிரும் மலை போல்
மிளிரும் மாளிகைகள் உடையது அயோத்தி !!!!
.
வளி - காற்று
மா மனை- பெரிய மனை
.
வடிவம் #2
.
நீர் அருவியை போல் தாழ்ந்து
அசையும் முத்துமாலைகளை உடையவை
பரந்த மேக கூட்டத்தை ஒத்த கொடிகள் பரவியுள்ளவை
பெரிய மணிகளின் குவியல்களை உடையன
பசும்பொன் குவைகளை உடையன
வடிவொத்த மயில் கூட்டங்கள் உடையன
இவையெல்லாம் சேர்ந்து அம்மாளிகைகள்
மலையை ஒத்திருந்தன
.
#வாஞ்சிவரிகள்#
.
அருவியின் தாழ்ந்து. முத்து அலங்கு தாமத்த;
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன;- மலையும் போன்றன.

#123 கம்பன் எளிய தமிழில்

#123 கம்பன் எளிய தமிழில்
.
காண்பவர் வியக்கும் கலையழகும்  
வல்லுனர் போற்றும் தொழில்திறமும்
கமல வாய் கால் வடித்த
கலைநய கல்தூண்களும்  
நாகலோகம் தழுவிய
ஆழமுள்ள அடித்தளமும் அஸ்திவாரமும்  
அழகிய வேலைப்பாடுடன்
செழுமையும் வளமையுமாய்  
மாசற்ற தூய்மையும் எழிலுமாய்   
மாடமும் நடுக்கூடமும்
பளபளப்பும் புதுப்பொலிவும்
பளிச்சிடும் பொன் தோற்றமும் பெற்ற
மாளிகைகள் எண்ணிலடங்கா இம்மாநகரில்

.
#வாஞ்சிவரிகள்#
.
பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன.
சேடரைத் தழீஇயின. செய்ய வாயின.
நாடகத் தொழிலின. நடுவு துய்யன.

ஆடகத் தோற்றத்த. அளவு இலாதன.

#119 கம்பன் எளிய தமிழில்

#119 கம்பன் எளிய தமிழில்

கடும்புயலாய் வீசும் காற்று
நெடுமலையாய் எழும்பும் அலையாய்
விண்ணெலாம் வெளுத்திடும்
வெண்பாற்கடலின் பேரலை போலும்
.
வெண்ணிலவினை விஞ்சும்
வெண்மை உடைத்த
வெண்சங்கு மாவுடைத்து  
சுண்ணாம்புச் சாந்து பூசி
விண்ணைத் தொட்டு ஓங்கிநிற்கும்
வெண்ணிற மாட மாளிகைகள்


#வாஞ்சிவரிகள்#

‘திங்களும் கரிது’ என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர. மேக்கு நோக்கிய.

பொங்கு இரும் பாற்கடல்- தரங்கம் போலுமே.

#115 கம்பன் எளிய தமிழில்

#115 கம்பன் எளிய தமிழில்
.
மாடப்புறாவும் மணிப்புறாவும்
கூடி வாழும் கோபுரத்தில்
தேடியும் தென்படாத பெண்புறாவை
நாடியே வாடிநின்ற ஆண்புறா
கோபுரவாயிலின் சித்திரத்தில் மூழ்கி
ஓவியப்புறாவின் ஒயிலில் ஒழுகி
கூவிய தன்புறாவென தழுவிக்கிடக்க
.
கூவியழைத்தும் காணாது
ஊடல் கொண்ட பேடையும்
மாதவமுனிவரும் தேவரும்
மாதவனை  போற்றி வாழும்
வானவர் நிறைந்த வானுலகில்
காமதேனுவும் கற்பகமும்
பாரிஜாதமும் பவளமல்லியும்
தாமரையும் பூத்துக்குலுங்கும்
கற்பகச் சோலையிலே மறைந்திருக்கும்
.
#வாஞ்சிவரிகள்#
.
தா இல் பொன் - தலத்தின். நல்
 தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
 புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
 கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு

 இருக்க ஊடு பேடையே.

#113 கம்பன் எளிய தமிழில்

#113 கம்பன் எளிய தமிழில்

ஒருபுறம் சக்கரவாள மலை
மறுபுறம் அழகிய அகழி
நடுவே இருளடர்ந்த காடாய்
தொடுத்திருக்கும் பூஞ்சோலை
நேர்த்தியான நெடுமதிலை

போர்த்திய நீல ஆடைபோல் தோன்றுதே!!!

#112 கம்பன் எளிய தமிழில்

#112 கம்பன் எளிய தமிழில்

உருக்கிய வெள்ளியை ஓரத்தில் பூசிவைத்து
திருத்திய பளிங்கு கற்களைப் பதித்த
அழகிய அகழியில் தெளிந்த நீரில்
பழகிய கண்களும் பிரித்தறிய இயலா
நீரெது தளமெது என வானுறை
தேவரும் கண்டறிய லாகாது காண்....


வெள்ளி பூசிய வெளிச்சுற்றும்
வெள்ளைக்கல் பளிங்குத் தலமும்
ஒருங்கே அமைந்து எழில் சேர்க்கும்
அழகிய அகழியின் தெளிந்த நீரில்
பழகிய கண்களும் பிரித்தறியா
வானுறை தேவரும் கண்டறியார்
நீரெது தளமெது என்று


மூலப்பாடல்


விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி
  கட்டி. உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு
  அடுத்துறப் படுத்தலின்.
‘தளிந்த கல்-தலத்தொடு. அச்
  சலத்தினை. தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்

  தேவராலும் ஆவதே?

#111 கம்பன் எளிய தமிழில்

#111 கம்பன் எளிய தமிழில்

அகழியில் சுற்றித் திரியும் அன்னமெலாம்
அரசின் வெற்றி கூறும் வெண்குடையாய்
உலாவித் திரியும் முதலைகளெலாம்
மலையென தெரியும் களிறுகளாய்
தாமரையிலைகள் தளும்பும் அலைகளே
வீரரை சுமக்கும் குதிரைகளாய்
துள்ளி விளையாடும் மீன்களே
வெள்ளி மின்னும் வாளும் வேலுமாய்
காணும் காட்சி நோக்கின்
மன்னன் சேனை ஒத்திருக்கும்

#வாஞ்சிவரிகள்#

ஆளும் அன்னம் வெண் குடைக்
  குலங்களா. அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற
  குன்றம் அன்ன யானையா.
தாள் உலாவு பங்கயத்
  தரங்கமும் துரங்கமா.
வாளும். வேலும். மீனம் ஆக.

  மன்னர் சேனை மானுமே.

#109 கம்பன் எளிய தமிழில்

#109 கம்பன் எளிய தமிழில்

version 1:
கோட்டை அரணாய் உயர்ந்து
நாட்டை காக்கும் மதிலின் வெளிச்சுற்றில்
வளர்ந்து நிறைந்த பாறைகளை
பிளந்து தோண்டிய பேரகழி..!

நாவாய் நீந்தும் நடுக்கடலில்
மூழ்கித் தவித்த மதங்கொண்ட யானை
சூழ்ந்த நீரிலிருந்து மீள முடியாமல்
அமிழ்ந்து எழுந்து அலைந்தது போல்
அகழியில் மிதக்கும் முதலைகள்
கரையை நெருங்கும் பகைவரை
விரைந்து பாய்ந்து தாக்கிடும்

version 2:
கல்வியில் சிறந்த வல்லுனர்கள்
வல்லுனர் கட்டிய கூடங்கள்
கூடங்கள் நிறைந்த நகரம்
நகரைச் சுற்றி மதில்கள்
மதிலைச் சுற்றி கருங்கல் கோட்டை
கோட்டையைச் சுற்றி கடினப் பாறைகள்
பாறையை உடைத்து தோண்டிய அகழி
அகழியின் ஆழம் அதள பாதாளம்
பாதாளம் முழுக்க சீறும் முதலைகள்

நாவாய் நீந்தும் நடுக்கடலில்
மூழ்கித் தவித்தே நீரினன்று
மீள இயலா மதங்கொண்ட யானைகள்
அலையினில் அமிழ்ந்து எழுவது போல்

அகழியில் மிதக்கும் முதலைகள்
கரையை நெருங்கும் பகைவரை
விரைந்து பாய்ந்து தாக்கிடும்
சிறப்பு கொண்டது அயோத்தி...!!!

 

version 3:final

கல்வியில் சிறந்த வல்லுனர்கள்
வல்லுனர் கட்டிய கூடங்கள்
கூடங்கள் நிறைந்த நகரம்
நகரைச் சுற்றி மதில்கள்
மதிலைச் சுற்றி கருங்கல் கோட்டை
கோட்டையைச் சுற்றி கடினப் பாறைகள்
பாறையை உடைத்து தோண்டிய அகழி
அகழியின் ஆழம் அதள பாதாளம்
பாதாளம் முழுக்க சீறும் முதலைகள்

கப்பல்கள் மிதக்கும் பெருங்கடல்
கடலில் தோன்றிய பேரலைகள்
அலையில் சிக்கிய மதயானைக் கூட்டம்
கூட்டமாய் அமிழ்ந்து எழுவது போல்

ஆழம் மிகுந்த அகழிகள்
அகழியில் மிதக்கும் முதலைக் கூட்டம்
கூட்டமாய் நெருங்கும் பகைவர்கள்

பகைவரை பாய்ந்து தாக்கும் முதலைகள்


சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும்
  முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து
  பொங்கு இடங்கர் மா.-
தாழ்ந்த வங்க வாரியில். தடுப்ப
  ஒணா மதத்தினால்.
ஆழ்ந்த யானை மீள்கிலாது
  அழுந்துகின்ற போலுமே.

#106 கம்பன் எளிய தமிழில்

#106 கம்பன் எளிய தமிழில்

கரும் சக்கரவாள மலையை
பெரும்புறக்கடல் சூழ்ந்தது போல
வானுயர ஓங்கி நிற்கும் மாமதிலை
காத்திடவே வளைந்துள்ள அகழி….!

யாருமறியா விலைமாதின் மனம் போல
கூறமுடியா ஆழமிந்த அகழி….!
தெளிவில்லா புல்லறிவாளர் கவி போல
தெளிவில்லா ஆழமுள்ளது அகழி….!

அருகில் வந்தால் குறுகிடும்   
பருவ மங்கை இடையினை போல
நெருங்க முடியா காவலோடு
மருங்கி  நிற்கும் அகழி….!
 
ஐம்பொறி கேட்டு நன்னெறி செல்லா  
தீநெறி செல்ல விரைதல் போல  
எதிரியை கண்டால் விரைந்து தாக்கும்
முதலைகள் நிறைந்தது அகழி….!

#வாஞ்சிவரிகள்#

சக்கரவாளம் - உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை
புல்லறிவாளர் - அறிவீனர்

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை
  அலைகடல் சூழ்ந்தன அகழி.
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்.
  புன் கவி எனத் தெளிவு இன்றி.
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும்
  படிவு அருங் காப்பினது ஆகி.
நல் நெறி விலக்கும் பொறி என எறியும்

  கராத்தது;- நவிலலுற்றது நாம்.

#99 கம்பன் எளிய தமிழில்

#99 கம்பன் எளிய தமிழில்

!!!!! அயோத்தி !!!!!
பன்னாட்டு மன்னரும்
போற்றும் பெருநகரம்
பொன்னும் மணியும்
குவிந்த பொன்நகரம்..!
கழுத்தில் கயிறுடை களிறுகளும்
குதிரைகளும் தேர்களும்
உலகின் அனைத்து பொருள்களும்
நிறைந்த நன்நகரம்..!
முனிவரும் தேவரும்
பெரியோரும் பேரறிஞரும்
வணிகரும் வல்லுனரும் வாழ்ந்து
சிறப்பிக்கும் மாநகரம்..!
சிகரமாய் உயர்ந்து நிற்கும்
அற்புதமாம் அயோத்திக்கு
நிகரான நகர் உண்டோ
இவ்வையத்தில் உவமை கூற??


#வாஞ்சிவரிகள்#


அரைசு எலாம் அவண; அணி எலாம் அவண;
  அரும் பெறல் மணி எலாம் அவண;
புரைசை மால் களிறும். புரவியும். தேரும்.
  பூதலத்து யாவையும் அவண;
விரைசுவார் முனிவர். விண்ணவர். இயக்கர்.
  விஞ்சையர். முதலினோர் எவரும்
உரைசெய்வார் ஆனார்; ஆனபோது. அதனுக்கு

  உவமைதான் அரிதுஅரோ. உளதோ!

#98 கம்பன் எளிய தமிழில்

#98 கம்பன் எளிய தமிழில்

நலன் தம்மை காக்க
புலன் ஐந்தை அடக்கி
துணையாய் அருளும் அறமும் வர
இணையாய்த் தவமும் ஞானமும் ஓங்க
வாழ்வாங்கு வாழும் மேலோர்
வாழ்ந்த புகலிடம் இவ்வயோத்தி..!

விண் மலை கடல்
மண் அர்ச்சை வடிவன்
அரியின் திருவருள் பெற்று
தரித்த பெருமகன் இராமன்
திருமகளின் உருக்கொண்ட
கலைமகளாம் சீதையோடு
அளவிலா ஆண்டுகாலம்
வளமாக வாழ்ந்து வந்த
தலமன்றோ இவ்வயோத்தி..!

ஞானியர் போற்றும் பூவுலகிலும்
வானவர் போற்றும் வானுலகிலும்     
இந்நகர் ஒத்த பொன்நகர்
எவரேனும் கண்டதுண்டோ?

#வாஞ்சிவரிகள்#

பரம்  வியூகம் விபவம்
அந்தர்யாமித்துவம் அர்ச்சை
- திருமாலின் ஐந்து வடிவங்கள்

மூலப்பாடல்:
தங்கு பேர் அருளும் தருமமும். துணையாத்
 தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும். ஞானமும். புணர்ந்தோர்
 யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து. ஆண்டு அளப்ப அருங்காலம்
 திருவின் வீற்றிருந்தனன் என்றால்.
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும்

 பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...