#95 கம்பன் எளிய தமிழில்
தன்னில் பாதி தலைவிக்கு ஈந்தவனும்
தன்னைப் பகிர்ந்து தேவியர்க்கு அளித்தவனும்
தாமரையில் அமர்ந்து தனம்தனை காப்பவனும்
தன்னிகரில்லா நகர் இதுவெனத்
தாமுணர்ந்து பகிர தினம்
தாங்கொணா ஆவலினால்
ஆதவனும் சந்திரனும்
இமை சோராது அயராது
இரவென்றும் பகலென்றும்
அலைந்தே திரிந்தனர்!
அயோத்தியின் அழகைக்
களித்திடவன்றிக்
காரணம் வேறுண்டோ?
உமைக்கு ஒருபாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒருதனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெரும் செல்வக் கடவுளும், உவமை,
கண்டிலா நகர் அது காண்பான்,
அமைப்பரும் காதல் அது பிடித்து உந்த,
அந்தரம் சந்திர ஆதித்தர்,
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பலாம் ஏது வேறு உளதோ.
No comments:
Post a Comment